சனி, 8 அக்டோபர், 2016

வழியில போற ஓணான....

உச்சி வெயிலு சுள்ளுனு அடிக்குது… இந்நேரம் ஏன் வாரிரு… கொஞ்சம் வெரசா வந்திருக்கக் கூடாதா…

டவுண் பஸ்ஸூ கிழக்க போகும்போதே வீட்டை விட்டு கிளம்பிட்டேன்யா… அடுத்த வீட்டுல இந்த சுடலப் பய பிரிட்ஜ், வாஷிங் மெஷினுன்னு புதுசா வாங்கி வண்டியில கொண்டு வந்திருந்தான்… பெரிப்பா இறக்கிவைக்க கொஞ்சம் கூட மாட ஒத்தாசையா இருங்கன்னான்… அதான் லேட்டாகிடுச்சு..

யாரு செவனம்மா மவனா…

அந்த பயதேன்… நல்ல சோலிக்காரன்… காத்துட்டும், அரைத்துட்டுமா சேர்த்து வச்சி கம்பியூட்டரு, டிவி, கழுதை, குதிரைன்னு வாங்கிப் போட்டுட்டான்ல…

கழுதையையும், குதிரையையும் ஏன் வாங்குனான்...

அட ஒரு பேச்சுக்கு சொன்னேன்யா…

இப்போ இருக்குற நிலையில கழுதை, குதிரை கூட வாங்கலாம்போல இந்த ஏசி, வாஷிங் மெஷினு, பிரிட்ஜ்னு வாங்குறதுதேன் வழியில போற ஓணான மடியில கட்டிக்கிட்ட கதையா இருக்கு…

ஏன்யா அப்படி சொல்றீரு… நாலு காசு சம்பாதிக்கறதே நிம்மதியா வாழத்தான…

அதைத்தான நானும் சொல்றேன்… நிம்மதியா வாழ்றதுக்காக சம்பாதிச்சு நிம்மதியக் கெடுக்கறதுக்காக செலவு பண்ணக் கூடாதுல்ல…

எதுக்கோ பீடிகை போடுறீரு… என்னன்னுதேன் சொல்லுமே…
சுடல வீட்டுல வேற என்னென்ன இருக்கு…

போன வெள்ளிக்கு முந்துன வெள்ளியிலதான் புதுவீட்டுக்கு பால் காய்ச்சினான்…

ஓகோ…

நல்லா டைல்ஸ் போட்டு கட்டியிருக்கான்… அப்படியே கண்ணாடி மாதிரி மாதிரி மின்னுது…

ம்…

அப்புறம் ஏசி முதல்லையே போட்டுட்டான்… குளிக்குற ரூமுக்குள்ள கூட திரை போட்டுருக்கான்… இங்கிலீஷ் கக்கூஸ் வச்சிருக்கான்..

அதென்ன இங்கிலீஸ் கக்கூசு…

இந்த சேருல உக்காருர மாதிரி இருக்கும்ல.. அதுக்கு பேருதேன் இங்கிலீஸ் கக்கூசு..

ஓகோ… அப்போ உம்ம வீட்டுல இருக்கறது தமிழ் கக்கூசா..

கிண்டல் பண்ணாதீரும்… மேல கேளும்… நீரு நல்லா கால நீட்டி படுத்துத் தூங்கலாம் அம்மாம் பெரிய ஷோபா போட்டுருக்கான்… உக்காந்து சாப்புட ஓட்டல்ல இருக்குற மாதிரி சேரு, டேபிளு… ரெண்டு கம்பியூட்டரு… ரெண்டு டிவி., அப்புறம் தண்ணிய சுத்தப்படுத்துற மெஷினு… அப்புறம் தரைய சுத்தமாக்குறதுக்கு ஒரு மெஷினு... பாத்ரூமுல தண்ணியை சூடாக்குற மெஷினு… ஜம் ஜம்முனு மெத்த…

போதும்… போதும்… நீரு சொல்லி முடிக்கறதுக்குள்ள விடிஞ்சிரும் போல…

அம்புட்டு இருக்குல்ல… சரி எதுக்கு இந்த விவரத்தையெல்லாம் கேட்டீரு… அந்த விஷயத்துக்கு வாரும்…

இப்படி கண்டதையும் வாங்கி வீட்டை நிறைச்சு வக்கிறதால நோய், நொடி வருமுன்னு கண்டுபிடிச்சிருக்காங்க…

ஆரம்பிச்ச்சுட்டாய்ங்களா… சுடல நல்லா இருக்கக் கூடாதுன்னு அந்த மேலத் தெரு முனியம்மா மவன் பொருமிக்கிட்டே இருப்பான்… அவன்தேன் ஊருக்குள்ள இப்படி ஏதாவது கிளப்பிவிட்டுருப்பான்… நீரு நம்பாதீரும்…

அட கூறுகெட்டத்தனமா பேசாதீரும்… இதை முனியம்மா மவன் சொல்லல… விஞ்ஞானிங்க சொல்றாங்க…

ஓகோ… லட்சக்கணக்குல காசு குடுத்து வாங்குறதுல அப்படி என்னய்யா கெடுதி இருக்கப்போகுது…

காசு குடுத்து வாங்குறதுல்லாம் நல்லதுன்னு உம்ம மாதிரி அப்பாவிங்கதான் நம்புவாங்க… இந்த மாதிரி வீட்டுக்கு வாங்கிப் போடுற நாகரீக பொருட்கள் 45 வகையான கெமிக்கலை வெளியிடுதாம்…

நம்புற மாதிரி இல்லையே… எங்க அதுல ரெண்டு சொல்லும்…

பெனோல்ஸ், பிளேம் ரெடார்டன்ட்ஸ், ஃபிராக்ரன்சஸ்… அப்புறம்…

போதும்யா.. போதும்யா… வாய்க்குள்ள ஒண்ணும் நுழையல… நீரு மத்த விவரத்தை சொல்லும்…

இந்த கெமிக்கல் எல்லாம் வீட்டுக்குள்ள காத்தாவும், தூசியாவும் மாறி நம்ம உடம்ப பாதிக்குது.. நரம்பு மண்டலம், நோய் எதிர்ப்பு சக்தியை எல்லாம் பாதிக்கறதோட சில நேரங்கள்ல புத்துநோய்க்கு கூட காரணமா அமையுமாம்..

ஐயையோ…

அதுலையும் குழந்தைங்க, கர்ப்பிணிங்களை இந்த மாதிரியான கெமிக்கல், வாயுங்க எல்லாம் ரொம்ப ஈஸியா பாதிக்குமாம்… இதுதான் விஷயம் போதுமா…

ரொம்ப விவகாரமான விஷயம்தான்… சரி நான் வாரேன்…

என்ன அவசரம்..

ஒரு சோலி கிடக்கு…

அப்படி என்ன சோலி… என்கிட்ட கூட சொல்ல முடியாதபடிக்கு..

அது…. அது… எங்க வீட்டுக்கும் பிரிட்ஜூம், ஏசியும் வாங்கித்தாடான்னு இந்த சுடலப் பயகிட்ட காசு குடுத்துட்டு வந்தேன்… அவன் டவுணுக்கு போறதுக்குள்ள திரும்பிவாங்கணும்…

ஓகோ… இம்புட்டு நேரமா ஓணான பிடிச்சு நீரும் மடியிலதேன் போட்டிருந்தீரா...



திங்கள், 8 ஆகஸ்ட், 2016

எறும்பா விவசாயம் செய்யணும்....


என்ன ரெண்டு நாளா இந்தப் பக்கம் தலை தெரியல…

ஆமா… ஆமா.. ஊருல இருந்து பேரன் வந்திருக்கான்ல… அங்கிட்டு இங்கிட்டு நகர முடியலை…

யாரு மூத்தவன் பிள்ளையா…

இல்ல பம்பாயில கட்டிக்கொடுத்தோமுல்ல நடுவுல உள்ளவா… அவ பையன்…

அவன்தேன் ஊரு பக்கம் தலை வச்சி கூட படுக்க மாட்டாமுன்னு சொல்வீரய்யா…

அந்த கழுததேன் இப்போ தாத்தனப் பாக்கணுமுன்னு ஏரோ பிளேன் ஏறி வந்திருக்கு…

என்ன தாத்தன் மேல திடீர் பாசம்…

அந்த கதைய கேளும்… பயலுக்கு கம்யூட்டர் வேலை வெறுத்துப் போச்சாம்… மாசம் நாலு லட்சம் சம்பளம் வாங்குனாலும் நிம்மதி இல்லையாம்… எங்கேயோ இயற்கை விவசாயம் பத்தி படிச்சிருக்கான்…

ஓ… அங்க வருதா கத….

ஆமா… ஆமா… கப்புன்னு புடிச்சிருவீரே…. கற்பூர புத்தியா உமக்கு…

ம்…. தாத்தன் கிட்ட போயி இயற்கை விவசாயம் கத்துக்கோடான்னு உம்ம பொண்ணு அனுப்பி வச்சிடுச்சு…

ஆமா… ஆமா… எம்புட்டு சந்தோஷமா இருக்கு தெரியுமா… பய எறும்பு மாதிரி சுறுசுறுப்பா இருக்கான்…

சுறுசுறுப்பு சரிதேன் எறும்பு மாதிரி விவசாயம் பார்த்துடுவானா…
என்னய்யா உளறுறீரு…

நான் சரியாத்தேன் கேக்கேன்… உலகத்துல முத விவசாயி எறும்புதான…

இது என்னய்யா புதுக் கதை… எறும்பு என்னக்கியா விவசாயம் பார்க்க ஆரம்பிச்சுச்சு…

6 கோடி வருஷத்துக்கு முன்னால…

ஆத்தாடி… எங்க பாட்டன்இ பூட்டன் காலத்துக்கெல்லாம் முன்னாடி இருக்கும்போல…

பாட்டனாவது, பூட்டனாவது… மனுஷன் விவசாயம் பார்க்க ஆரம்பிச்சதே 10 ஆயிரம் வருஷத்துக்கு முன்னாடிதேன்.. ஆனா தென் அமெரிக்காவுல இருக்குற ஒரு வகையான எறும்பு ஆறு கோடி வருஷத்துக்கு முன்னாடியே விவசாயம் பார்க்க ஆரம்பிச்சுடுச்சுன்னு இப்போ விஞ்ஞானிங்க கண்டுபிடிச்சிருக்காங்க…

அது சரி… அதுங்க எப்படி நாத்து நட்டிருக்கும்… கள பறிச்சிருக்கும்…

விட்டா எம்புட்டு கூலி வாங்குச்சுன்னு கூட கேப்பீரு… அதுங்க மரக்கட்டை, குப்பையில வளர்ற பூஞ்சைன்னு சொல்லுற ஒரு வகையான காளான புத்துக்குள்ள வளர்திருக்குங்க…


செலவில்லாத விவசாயம் பார்த்ததுன்னு சொல்லும்…

ஆமாம்… செலவில்லாத விவசாயம் பார்த்து மிச்சம் பிடிச்சி உம்ம மாதிரி ஸ்டேட் பேங்குல பணத்தை போட்டு வச்சிருந்ததுங்க…

குசும்ப ஆரம்பிச்சுட்டீரா… சரி காளான விளைய வக்கிறதுல எறும்புக்கு என்ன லாபம்…

லாபம், செலவு, வருமானமெல்லாம் நம்மள மாதிரி மனுஷப் பய கண்டுபிடிச்சதுதான்யா… அதுங்க சாப்பாட்டுக்காக விவசாயம் பார்த்ததுங்க… அந்த காளான்ல அம்புட்டு சத்து இருந்துச்சாம்… நோய் தாக்காதாம்... அதனால லட்சக்கணக்குல வம்சம் விருத்தி ஆச்சாம்...

ஓகோ… இப்பவும் விவசாயம் பார்க்குதா…

ஆமாம்… இலைய வாயாலேயே கட் பண்ணி தூக்கிட்டுப் போற எறும்புகள பார்த்திருக்கீரா…

ஆமாய்யா… ரஸ்தாலி எறும்பு…

வாயில நுழையுற பேரா இருக்கணுமுன்னு வாழப்பழ பேர வச்சிக்கிட்டீரா… இருக்கட்டும்… அதுங்க எதுக்கு இலைய வெட்டிக் கொண்டு போகுது தெரியுமா?

விருந்தாளிங்களுக்கு இலை போட்டு சாப்பாடு போடுறதுக்கா இருக்கும்… ஏன்னா விவசாயம் பார்க்குற அளவுக்கு அறிவு இருக்குன்னான இப்படி கூட யோசிக்குமுல்ல…

உம்ம மூளை காத்துட்டுக்கு போகாது.. அந்த இலைங்களதான் புத்துக்குள்ள போட்டு அதுல காளான் வளர்த்து புழுவா இருக்குற குட்டி எறும்புகளுக்கு சாப்பாடு போடுதுங்க…

அடேங்கப்பா… அப்போ என் பேரன்கிட்ட எறும்பு மாதிரி விவசாயம் பாருடான்னு சொல்லனும்…

ஆமாம்… அப்புறம் இன்னொன்னும் சொல்லணும்…
என்ன?

 எல்லா நேரமும் எறும்பா இருந்தா தாத்தன் மாதிரி பேங்குல பணம் போட்டு வைக்க முடியாதுன்னு….


திங்கள், 27 ஜூன், 2016

காத்து வாங்கப் போறோம்


என்னதண்ணிக் கேனு போடுறவன் கூட புதுசா சகவாசம்

இங்கனதான் இருக்கீராஒண்ணுமில்லஎன்ன ரேட்டுக்கு விக்குறான்னு சும்மா கேட்டுப் பார்ப்போமேன்னு கேட்டேன்

யாருக்கு காது குத்துறீருஉம்ம பேரனுங்க மினரல் வாட்டருதான் குடிப்பேன்னு வீட்டுல கொடத்தப் போட்டு உடைக்கானுங்களாமே

அதான பார்த்தேன்உம்ம காதுக்கு விஷயம் வராம இருக்காதே.. கழுதைங்க சொன்னாலும் கேக்க மாட்டேங்குதுங்கஅதான் தண்ணி கேனு வாங்கலாமுன்னு ஒரு யோசன

இருக்கட்டும்இருக்கட்டும்உமக்கு ஞாபகம் இருக்கா.. உங்க அய்யா இருந்தப்போவீட்டுத் திண்ணையில குடிக்கத் தண்ணி வச்சிருப்பாரு

ஆமாஎம்மாம் பெரிய பானஉம்ம தொந்தி வயிறு தண்டி இருக்கும்ல..

பக்கத்துலையே உம்ம மூக்கு சைசுக்கு ஒரு டம்ளரும் இருக்குமேஅதை உட்டுட்டீரே

எம் மூக்கு சைசுக்காக? இருக்கும்இருக்கும்அப்ப தெருவுல வாரவுகஇ போறவுகள்ளாம் வெயிலு கொளுத்துனா பானையில தண்ணியக் குடிச்சிட்டு திண்ணையில உக்காந்து எந்திச்சி போவாங்க

இப்போ பார்த்தீராஅந்த வீட்டுக்காரவுகளே தண்ணிய காசு குடுத்து வாங்கப் போறாக..

நீரு அங்கதேன் வந்து நிப்பீருன்னு தெரியும்எனக்கு நெசமாவே மனசு கேக்கலதண்ணியப் போயி காசு கொடுத்து வாங்கலாமான்னு மனசு கெடந்து அடிச்சுக்குதுஇந்த பயகதேன் ஒத்தக் காலுல நிக்கானுவ

வாங்குறதுதேன் வாங்குறீருஅப்படியே ஆளுக்கு ரெண்டு பாக்கெட்டு காத்தும் வாங்கிக் குடுக்க வேண்டியதுதான

நான் மனசு ஆறாம வந்து புலம்பிக்கிட்டு இருக்கேன்உமக்கு இந்த நக்கலுக்கு மட்டும் குறைச்சலு இல்லஆள வுடும்வீட்டுல சோலி கெடக்கு

அட கோவிக்காதீரும்நில்லும்அப்பிடி என்னத்த சொல்லிப்புட்டேன்நாட்டுல நடக்குறதத்தான சொல்லுறேன்..
ஓகோதண்ணி வித்த பயக.. காத்தையும் விக்க ஆரம்பிச்சுட்டானுகளாஎந்த ஊருக்காரனுக்குயா இந்த மாதிரி புத்தி போவுது....

எல்லா ஊருக்காரனுக்கும்தேன்நம்ம ஊருக்கு வர்றது கனடா  நாட்டுக்காரன்.. விடாலிட்டி ஏர்னு ஒரு கம்பெனி

நம்ம முத்துமாரி விலாஸ் சோடா கம்பெனி மாதிரி

இல்லஇவன் ரொம்ப பெருசு.. அவன்தான் சுத்தமான காத்த பாட்டில்ல அடைச்சு விக்கப்போறான்..

ம்ம்ம்வரட்டும்வரட்டும்காத்த காச குடுத்து வாங்குற அளவுக்கு நம்ம ஊருல கேனையனுங்க இருக்காங்கன்னு தப்பா கணக்கு போட்டுட்டான் போல இருக்கு

உம்ம கணக்குதேன் தப்புரொம்ப கேனயனுங்க இருக்காங்க
என்னய்யா வயித்துல புளியக் கரைக்குறீரு

ஆமாமெட்ராசுஇ டெல்லியில எங்க பார்த்தாலும் கெட்டுப்போன காத்துதான்.. அம்புட்டு வண்டி ரோட்டுல ஓடுதுபுகையா கக்குதுஅவுகள்ல பலரு காத்து வாங்க காத்துக்கிட்டு இருக்காகலாம்

கலி முத்திப் போச்சுஆமா ஒரு பாட்டிலு காத்து எம்புட்டு சொல்லுவான்.. எட்டணா இருக்குமா

உம்ம பாட்டன் தட்டாம் பயறு வாங்கித் தின்ன காலத்துலையே இருக்கீரே… 3 லிட்டரு கேன்ல அடைச்ச காத்து 750 ரூபாயாம்
அட சண்டாளப் பாவியா

நீரு ஒரு வாட்டி மூச்சை இழுத்து விட்டீருன்னா 12 ரூபா எட்டணாவுக்கான காத்து காலியாப் போயிடும்

சம்பாதிச்சத தண்ணிய செலவழிக்கறத விட்டுட்டு காத்தா செலவழிக்கப் போறாங்க போலயோவ்அங்க பாரும்மூத்த பேரன் வாரான்என்ன பேசிக்கிட்டிருந்தீங்க தாத்தான்னு உம்ம கிட்ட கேப்பான்..

சரி..

நாம பேசுன விஷயத்தை சொல்லாதீரும்அப்புறம் ரெண்டு பாட்டிலு காத்து வாங்கிக் குடுன்னு வேட்டிய உருவிருவான்வேற ஏதாவது சொல்லி சமாளிச்சுரும்.. என்ன சொல்லுவீரு

அப்படியே காலாற நடந்து போயி காத்து வாங்கிட்டுவரலாமான்னு பேசிக்கிட்டு இருந்தோமுன்னு சொல்லுவேன்

நீரு ஒத்தடம் கொடுக்கீராஓங்கிக் குத்துறீரான்னே தெரியல போரும்






வெள்ளி, 22 ஏப்ரல், 2016

புள்ளய வித்தவன் கத...


என்ன ரொம்ப தூரமா?

அப்படியெல்லாம் இல்ல. சும்மா பெட்டிக்கடை வரைக்கும்தான் மூக்குப்பொடி காலியாப் போச்சு

அடிக்குற வெயிலுல இதுக்கெல்லாம் ஒரு எட்டு நடக்கனுமா… சின்னவன்கிட்டே காச கொடுத்துவிட வேண்டியதுதானே..

பிள்ளைங்களா அதுங்க… ஒன்னு பத்தாதுன்னு மூனு பெத்து என்ன பிரயோஜனம்… எச்சி துப்புன இடத்துக்கு மண்ணு அள்ளிப் போடாதுங்க. சோம்பேறிங்க…

மூனுல ஒன்னு கூட சொன்ன பேச்சை கேட்கறதில்லையா…
எங்க கேட்குது… இதுங்களுக்கு பதிலா ஒரு அம்மிக்கல்ல பெத்திருந்தா கூட பிரயோஜனமாக இருந்திருக்கும்…

என்ன அப்படி சொல்லிட்டீங்க… அம்மிக்கல்ல பெத்திருந்தா அதை நல்ல காசுக்கு விக்க முடியாதுல்ல…

ஒன்னுக்கும் ஆகாத பிள்ளைய மட்டும் லட்சம் ரூபாய்க்கு விக்க முடியுதாக்கும்…

லட்சத்துக்கு என்ன அதுக்கு மேலேயே வித்துத்தாரேன். கமிஷன் என்ன கொடுப்பீரு…

மண்ட காயிற வெயில்ல மனுஷன் புலம்புனா இதமா நாலு வார்த்த சொல்லுவீரா… இப்பவும் குசும்பு பண்றீரே…

குசும்பு இல்லைய்யா… நெசமாதேன் சொல்றேன்… சீனால டுயான்னு ஒரு பய பெத்த பிள்ளைய வித்துட்டான் தெரியுமா…

இது என்ன புதுக்கதையா இருக்கு… பச்சக்குழந்தையையா வித்துட்டான்..

ஆமாங்கறேன்… அந்த பொம்பளப் பிள்ள பிறந்து 18 நாளுதான் ஆகியிருக்கு… இந்த பயலுக்கு 18 வயசு… குழந்தை பெத்த அந்த பொண்ணுக்கு 18 வயசு கூட ஆகலை..

அட சண்டாளப் பயலே… என்னத்துக்கு வித்தானாம்…

வளர்க்க முடியலன்னு வித்துருக்கான்… நல்ல காசுக்கு விலைபோனா ஐபோன் 6, மோட்டார் சைக்கிளு வாங்கலாமுன்னு ஆசை…

பிள்ளைய வித்து செல்போனு வாங்குற அளவுக்கு கலி முத்திப்போச்சா… பிள்ளைய பெத்த புண்ணியவதியும் இதுக்கு துணையா?

அதுகிட்ட எங்க கேட்டான். இவனா கம்பியூட்டர் மூலமா வித்திருக்கான்…

கம்யூட்டர்லயா. நான் கூட சந்தைக்கு போயி வித்தான்னு நினைச்சேன்

சந்தைக்கு போயி பிள்ளைய வித்தா நாலு பேரு சும்மா விடுவாங்களா… இப்போ நீரே இருக்கீரு… பார்த்துக்கிட்டு சும்மா இருப்பீரா…

அதெப்படி… பொடனியில நாலு போடுபோட்டு போலீஸ்ல பிடிச்சுக்கொடுத்திருக்க மாட்டேன்…

ஆம்… அதனாலதான் இந்த பேஸ்புக்கு, வாட்ஸ்அப்புன்னு எந்த நேரமும் செல்போன்ல நோண்டுறாகளே… அதுமாதிரி சீனால கியூ,கியூன்ன ஒன்னு இருக்காம்…

பேரு வாயில நுழையலையே…

கடிச்சு மெல்லவா போரீரு… கதைய கேளும்… அந்த இதுல பிள்ளைய விக்குறேன்னு போட்டிருக்கான். நல்ல விலைக்கு ஒருத்தன் வந்ததும் வித்துப்புட்டான்…

அய்யய்யோ… வாங்குனவனாவது நல்ல பயலா.. இல்ல, பிள்ளைய ஏதும் செஞ்சிட்டானா…

வாங்குனவனோட தங்கச்சிக்கு குழந்தை இல்லையாம். அதுக்கு கொடுக்கத்தான் வாங்கியிருக்கான்

கதை அப்படிப்போகுதோ… ஆனாலும் ஊரு, உலகத்துக்கு விஷயம் தெரிஞ்சிருக்குமே…

போலீசுக்கே தெரிஞ்சு போச்சு… பிள்ள எப்படி வந்ததுன்னு விசாரிக்க ஆரம்பிச்சப்போ அது விலைக்கு வாங்குனதுங்கறத கண்டுபிடிச்சிட்டாங்க…

அதானே போலீசு மூக்குன்னா சும்மாவா…

ஆமா.. மூக்குப்பொடி போடாத மூக்குல்ல…

திரும்பவும் என்ன சொறியாதீரும்… மேல சொல்லும்…

போலீசு மோப்பம் பிடிச்சுட்டாங்கன்ன உடனே அப்பன்காரனே ஸ்டேஷனுக்கு வந்துட்டான். என் புள்ளைய நான்தேன் வித்தேன்னு ஒத்துக்கிட்டான்

என்ன கொடுத்தாக…

மச்சி வீட்டுல உட்கார வச்சி வடை, பாயாசத்தோட விருந்து கொடுத்தாகலாம்…

அட என்னய்யா நீரு… என்ன தண்டனை கொடுத்தாகன்ன கேட்க வந்தா…

அப்படி வௌக்கமா கேளும்…

என்னத்த வௌக்கமாரா கேட்க… அந்த பயலை ஜெயிலுக்குள்ள போட்டாகலா இல்லையா…

அவனுக்கு 3 வருஷம் ஜெயிலுன்னு தீர்ப்பு சொல்லியிருக்காங்க..

இப்போ அந்த பச்சப்புள்ள…

அதுக்கு ஒரு வயசு ஆகிடுச்சு… அதை யாருகிட்ட விடன்னு கோர்ட்டு இன்னும் முடிவு எடுக்கல… அதனால விலைக்கு வாங்குனா அந்த அம்மாவே குழந்தைய நல்லபடியா பார்த்துக்கிடுதான்…

நல்லது… எல்லாம் சரி… கடைசி வரைக்கும் அந்த பிள்ளைய எம்புட்டு காசுக்கு வித்தான்னு நீரு சொல்லவே இல்லையே…

தெரிஞ்சு என்ன பண்ணப்போறீரு…

அட… கதைய முழுசா தெரிஞ்சுக்காலாமேன்னுதான்யா கேட்குறேன்…

நம்ம ஊரு மதிப்புல 2 லட்சத்து 25 ஆயிரம் ரூபாயாம்…

ஓஹோ… நல்ல விலைதேன்… ம்…..

என்ன யோசனை…

இல்ல பிறந்து 18 நாள் ஆன பிள்ளையே அம்புட்டு விலை போச்சுன்னா… நம்ம வீட்டு கடைக்குட்டி எம்புட்டு போகுமுன்னு யோசிக்கிறேன்…

நீரு வீட்டுக்கு போயி அவனை வரச்சொல்லும்…

எதுக்கு?

இன்னொரு நாட்டுல அப்பன வித்த பிள்ளை கதை ஒன்னு இருக்கு… அதை அவன்கிட்ட சொல்லத்தான்…

அய்யய்யோ… சொல்லீராதிருமய்யா… ஒத்த கொய்யப்பழத்துக்கு என்ன வித்துடுவான்…




புதன், 9 மார்ச், 2016

கொய்யாக் காய்களுடன் கிடைத்த புன்னகை

         கிண்டி பேருந்து நிறுத்தம். நடக்கிறார்களா, ஓடுகிறார்களா என தெரியாத அளவுக்கு குறுக்கும் நெடுக்குமாய் விரைந்து கொண்டிருக்கிறார்கள் ஏராளமானோர். அவர்களில் ஒருவனாய் நடக்கும் அல்லது ஓடும் என்னை, நடைபாதையாரம் பெரிய அலுமினிய டப்பாவில் குவித்து வைக்கப்பட்டிருக்கும் கொய்யாக்காய்கள் சற்றே வேகம் குறைக்கின்றன. அது கோயம்பேடு சந்தைக் கொய்யா போல் இல்லை. கோயம்பேடு சந்தை கொய்யா வாடி வதங்கி, குடித்துவிட்டு போதையில் வீழ்ந்துகிடப்பவனைப் போல் இருக்கும். இது அப்படியல்ல. இப்போது பறித்ததைப் போல் இருக்கிறது. அதை விற்கும் அந்த அக்காவும் வியாபாரி போல் இல்லை. கிலோ என்ன விலை, கொய்யாக்காயின் சுவை என்ன என வாடிக்கையாளரைக் கவர அவர் கூவவில்லை. அதனாலேயே விலை கேட்கிறேன். கிலோ 40 ரூபாய் என்கிறார் தயக்கத்துடன். 

      ஒரு கிலோ போடுங்க என்றவாறு சுவையான கொய்யாக்காய்களை பொறுக்குகிறேன். அதில் நான் நன்கு தேர்ந்தவன். தராசில் சரியாக ஒரு கிலோ எடை நிற்பதை அறியாமல் நான் பொறுக்கிக்கொண்டிருக்கிறேன். மேலும் இரு காய்களோடு நிமிர்ந்தால் தராசு முள் நடுநிலைவாதியாய் நிற்கிறது. அவரது முகத்தைப் பார்த்தால் தயக்கம். நான் அந்த காய்களை அலுமினிய டப்பாவிலேயே போடுகிறேன். “ஐயையோ பரவாயில்ல.. எடுத்துக்போப்பா’ என்ற அவரது குரலில் சற்றும் தயக்கமில்லை. நான் வேண்டாம் என மறுத்தும் இரு காய்களை சேர்த்து நிறுத்து ஒரு கிலோவுக்கான பணத்தை மற்றும் புன்னகையுடன் பெற்றுக்கொள்கிறார் அந்த அக்கா. 

         கொய்யாக்காய்களுக்காக பாலித்தீன் பையை விரித்தவரை சட்டென்று நிறுத்தி ‘பை இருக்குக்கா’ என்கிறேன். மெல்லிய ஆச்சர்யத்துடன் என்னைப் பார்க்கிறார். நான் எனது தோள் பைக்குள் இருந்து ஒரு துணிப்பை எடுத்து விரிக்கிறேன். அவர் ஆச்சர்யம் கலையாமல் கொய்யாக்காய்களை அதில் நிரப்புகிறார். இருவரும் ஒரே சேர புன்னகைக்கிறோம். துணிப்பையை தோள் பைக்குள் வைத்தவடி இரு அடி நடந்திருப்பேன். ‘தம்பி’ என அவரது குரல் என்னை திரும்பிப் பார்க்க வைக்கிறது. திரும்பினால் புன்னைகையுடன் சைகையால் அழைக்கிறார். அருகில் செல்கிறேன். பையைத் திறந்துகாட்டச் சொல்கிறார். எனக்கு புரிகிறது. ‘ஏற்கனவே அதிகமாதான் போட்டிருக்கீங்க’ என சிரித்தபடியே மறுக்கிறேன். ‘அட பையை காட்டுப்பா என கட்டாயப்படுத்தி மேலும் இரு கொய்யாக்காய்களை அதில் போட்டுவிட்டு புன்னகைக்கிறார்.

              இரு நாள், மூன்று நாள் இடைவெளியில் ஒரு கிலோ கொய்யா தவறாமல் வாங்குகிறேன் நான். எப்போதும் எனக்க இரண்டு, மூன்று காய்கள் அதிகம்தான். சில நேரம் கூட்டத்தில் என் முகம் பார்க்காமல் இயந்திரத்தனமாய் அவர் எடைபோடும்போது நான் பையை விரித்து நீட்டியதும் தலைநிமிர்ந்து பார்த்து சிரித்துவிட்டு மேலும் இரு காய்களை எடுத்துப்போடுவார். சில நேரம் பிற வாடிக்கையாளர்கள் இதைக் கண்டு பொறாமைப்படக் கூடாது என்பதற்காக அந்த வாடிக்கையாளர்கள் நகரும் வரை என்னை ஒரு ஓரமாக நிற்கச் சொல்லிவிடுவார். அதற்குபின் இரண்டு, மூன்று காய்களை புன்னகையோடு கொடுப்பார்.

இப்போது அந்த அக்கா அங்கே இல்லை. அதன் அருகே வேறு ஒரு இடத்தில் வேறு ஒரு அக்கா வேறு ஒரு கொய்யாக் கூடை. ஆனால் ஆச்சர்யம் என்னவென்றால் மேலே சொன்ன அத்தனையும் எந்த மாற்றமுமின்றி நடந்தேறுகிறது. புத்தகங்களைப் படிக்காத மனிதர்களிடம் நாம் படிக்க எவ்வளவோ இருக்கிறது.

ஞாயிறு, 6 மார்ச், 2016

காண மறுக்கிறார்களா கடவுள்கள்?


          நாமக்கல் மாவட்டம் நல்லிபாளையத்தில் ஆண்டுதோறும் ஆண்கள் மட்டுமே பங்கேற்கும் கோயில் திருவிழா ஒன்று நடப்பதுண்டு. ஆடியில் இரு நாட்கள் நடைபெறும் அந்த திருவிழாவில் கிடா வெட்டி ஆண்களே சமைத்துஇ ஆண்களே உண்பார்கள். இத்தனைக்கும் அந்த கோயிலில் இருப்பதே காமாட்சியம்மன் என்ற பெண் தெய்வம்தான். ஆனாலும் அங்கே பெண்களுக்கு அனுமதியில்லை. அதை பத்திரிகைகளில் ‘ஆண்கள் மட்டுமே பங்கேற்கும் விநோத திருவிழா’ என செய்தி போடுவார்கள்.

          உண்மையில் இந்த வினோதத்தை நல்லிபாளையத்தில் மட்டுமல்லஇ நாட்டின் பல பகுதிகளில் உள்ள கோயில்களிலும்இ மசூதிகளிலும் நாம் பார்க்கலாம். இதை கோயிலில் உள்ள மரபு அப்படி என ஒற்றை வரியில் கன்னத்தில் போட்டுக்கொண்டு நாம் கடந்துபோய்விட முடியாது. பெண்களை உங்கள் மரபு ஏன் அனுமதிப்பதில்லை என்ற கேள்வியை எழுப்பினால்இ அதற்கான விடை ஒவ்வொரு இடத்திலும் இன்னும் விநோதமானதாக இருக்கிறது. அந்த கேள்வி எழுப்பப்பட்ட 3 இடங்கள் அண்மையில் செய்திகளில் அடிபட்டன. 

         ஒன்று கேரளாவின் மேற்குத் தொடர்ச்சி மலையில் உள்ள சபரிமலை அய்யப்பன் கோயில். மற்றொன்று மகாராஷ்டிர மாநிலம் சிங்கனாப்பூரில் உள்ள சனீஸ்வரன் கோயில். இன்னொற்று மும்பை கடற்கரை பகுதியில் உள்ள ஹாஜி அலி தர்கா.

          இதில் சபரிமலை கோயில் நமக்கு பரிச்சயமானது. இங்கே 10 வயது முதல் 50 வயது வரை பெண்களை அனுமதிப்பதில்லை. சிறுமிகளும்இ வயதான பெண்களும் மட்டுமே இந்த கோயிலுக்கு சென்றுவர முடியும். இதற்க காரணமாக சொல்லப்படுவது பெண்களின் மாதவிடாய். (சபரிமலையில் மட்டுமல்ல பெண்களை அனுமதிக்க மறுக்கும் பெரும்பாலான கோயில்களில் இதுவே அதற்கு காரணமாக கூறப்படுகிறது) மற்றொன்று அய்யப்பன் பிரம்மச்சாரி என்பது.


         உடலில் நிகழும் சாதாரண மாற்றமான மாதவிடாய் காலத்தில் பெண்களை தீண்டத்தகாதவர்களாக கருதி கோயிலுக்குள் அனுமதிக்க மறுப்பது எந்த விதத்தில் நியாயம் என சிலர் கேள்வி எழுப்புகிறார்கள். அதே நேரம் மாதவிடாய் காலத்தில் கோயிலுக்குஇ மசூதிக்கு செல்வதில்லை என்ற மரபை பெண்களே கடைப்பிடிக்கிறார்கள். கோயிலுக்கு அழைப்பவர்களிடம் அதை ‘தலைக்கு குளிச்சிருக்கேன்’ என நாசூக்காக கிராமங்களில் சொல்வார்கள்.

             ஆனால் சபரிமலை கோயிலிலோ மாதவிடாய் வரும் பெண்களை அது நிகழாத காலத்திலும் கூட அனுமதிப்பதில்லை என்ற விதி பின்பற்றப்படுகிறது. அண்மையில் சபரிமலை தேவஸ்தான தலைவர் கோபாலகிருஷ்ணன் ‘மாதவிடாய் வந்துள்ளதை கண்டறியும் இயந்திரம் கண்டுபிடிக்கப்பட்ட பின்பு மற்ற பெண்களையும் சபரிமலை அய்யப்பன் கோயிலுக்குள் அனுமதிப்போம்’ என பேசியதாக சர்ச்சை எழுந்தது. அதை தொடர்ந்து சமூக வலைதளங்களில் ஹேப்பி டூ பிளீட் என பெண்கள் கண்டனக் குரல் எழுப்பினர். 

    இந்த சூழலில்தான் அனைத்து வயது பெண்களையும் சபரிமலைக்குள் அனுமதிக்கக் கோரிய வழக்கில் உச்ச நீதிமன்றம் சில முக்கியமான கேள்விகளை எழுப்பியுள்ளது. வழிபாடு நடத்தும் உரிமை அனைவருக்கும் பொதுவானது என அரசியலமைப்பே கூறும் நிலையில் குறிப்பிட்ட வயது பெண்களை சபரிமலை கோயிலுக்குள் அனுமதிக்காமல் எப்படி தடுக்க முடியும் என கேள்வி கேட்டுள்ளது உச்சநீதிமன்றம். கோயிலின் மரபை மாற்ற முடியாது என ஒதுங்கிக்கொண்டுள்ளது கேரள அரசு. இந்த வழக்கில் தீர்ப்பு நிலுவையில் உள்ளது. 

     மகாராஷ்டிர மாநிலம் அகமதுநகர் மாவட்டத்தில் உள்ள சிங்கனாப்பூரில் உள்ள சனி கோயிலில் இப்படி ஒரு பழக்கம் இருந்தது. 400 ஆண்டுகள் பழமையான இந்த கோயிலில் பெண்கள் நுழைய அனுமதியில்லை. பகுத்தறிவாளர்களின் தொடர் போராட்டத்தை அடுத்து 2011இல் பெண்கள் அனுமதிக்கப்பட்டாலும் சனீஸ்வரரின் பீடத்தின் மீதேறி வழிபாடு நடத்த பெண்களுக்கு அனுமதி அளிக்கப்படவில்லை. அதற்கு எதிரான முணுமுணுப்பு அடிக்கடி கேட்டுவந்த சூழலில் கடந்த நவம்பரில் இளம்பெண் ஒருவர் 4 அடி உயரமுள்ள அந்த பீடத்தின் மீதேறி சாமி கும்பிட்டுவிட்டு கூட்டத்திற்குள் புகுந்து வெளியேறிவிட்டார்.


          அவ்வளவுதான் கோயில் நிர்வாகமும்இ சிங்கனாப்பூர் கிராமமும் அதிர்ந்து போயின. கோயிலின் புனிதம் கெட்டுவிட்டதாக கூறி புனிதப்படுத்தும் வழிபாடுகள் நடத்தப்பட்டன. அந்த அடையாளம் தெரியாத பெண்ணைக் கண்டித்து நடந்த கூட்டங்களில் பெண்களும் பங்கேற்றனர். ஆண்கள் அனுமதிக்கப்பட்ட பீடத்தில் ஒரு பெண் ஏறியது தீண்டத்தகாததைப் போல் பார்க்கப்பட்டதைக் கண்டித்துதான் கடந்த ஜனவரியில் சனீஸ்வரன் கோயிலின் பீடத்தின் மீதேறும் போராட்டம் நடத்தப்பட்டது. ஆலய நுழைவு போராட்டம் போல் நடத்ததிட்டமிடப்பட்ட இந்த ஆலய பீடத்தின் மீதேறும் போராட்டத்தை பாதியிலேயே தடுத்து பெண்களை கைது செய்தனர் காவல்துறையினர். இந்த விவகாரம் ஊடகங்களில் பரபரப்பாகி இப்போது முதலமைச்சர் வரை சென்று தீர்வுக்காக காத்திருக்கிறது. 


        அடுத்தது மும்பை கடற்கரையில் உள்ள ஹாஜி அலி தர்கா. இந்த தர்காவின் பிரதான பகுதிக்குள் பெண்கள் இன்று வரை அனுமதிக்கப்படுவதில்லை. இதை எதிர்த்தும் அண்மையில் இஸ்லாமிய பெண்கள் வீதிக்கு வந்து போராடினர். கல்லறை பகுதிக்கு பெண்களை இஸ்லாம் அனுமதிப்பதில்லை என்கிறது தர்கா நிர்வாகம். ஆனால் ‘கல்லறை பகுதிக்கு அனைவரும் செல்ல வேண்டும்இ ஒருநாள் நாமும் இறப்போம்இ இங்கே புதைக்கப்படுவோம் என்பதை உணர வேண்டும்’ என முகமது நபி கூறியுள்ளதாக வாதிடுகிறார்கள் பெண்கள். இது தொடர்பான வழக்கும் உச்சநீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது.

     சக மனிதர்களை சமமாக மதிக்காத எந்த பழக்கமும் காலப்போக்கில் காணாமல்போனதைதான் நம் வரலாறுகள் பதிவு செய்திருக்கின்றன. இன்று பெண்கள் கோயிலுக்குள் நுழைவதை பற்றி பேசினால் எப்படி இந்த சமூகம் அதை ஒரு பாவச் செயலாக பார்க்கிறதோஇ அப்படித்தான் ஒரு காலத்தில் தாழ்த்தப்பட்டோர் ஆலயத்திற்குள் நுழைய வேண்டும் என பேசியஇ செயல்பட்ட சிந்தனையாளர்ளை விரோதிகளாக பார்த்தது. அவர்களை தூற்றியது. அதையும் மீறி பெரியார் உள்ளிட்டோரால் ஆலய நுழைவுப் போராட்டங்கள் வெற்றிகரமாக நடந்தேறின. இன்று முழுமையாக இல்லாவிடினும் அந்த பார்வை பெரும்பாலும் மாறியிருக்கிறது என்பதே உண்மை.
      அதே போன்று பெண்களின் வழிபாட்டு உரிமைக்கு எதிரான போக்கை அவர்களே கேள்வி கேட்கும்போது அதை விட்டுக்கொடுத்தலைத் தவிர தக்க தீர்வு வேறு ஏதும் இல்லை என்பதை காலம் சொல்லும். இது மரபுகளை உடைத்து கடவுள்களின் புனிதத்தை கெடுக்கும் விஷயமல்ல. கடவுள் அனைவருக்கும் சமமானவர்இ அவர் ஏற்றத்தாழ்வு பார்ப்பதில்லை என மக்கள் நம்புவதை ஆணித்தரமாக நிரூபிக்கும் முயற்சியே. 

           ஆக பிரச்னை கடவுளுடனானது அல்ல. அவரின் தூதுவர்களாக தங்களை பாவித்துக்கொள்ளும் ஆணாதிக்க மனோபாவத்தினுடனானதுதான். ஒரு காலத்தில் பெண்களுக்கு ஓட்டுரிமை கிடையாது என கூறினால் அப்படியா என ஆச்சர்யப்பட்டு அதை நகைப்புக்குரியதாக இப்போது எப்படி பார்க்கிறோமோ அதே போன்று வருங்காலத்தில் ‘பெண்களை அனுமதிக்காத கோயிலுக்களும் இங்கே இருந்தன’ என்று சொல்வதை கேட்டு சிரிக்கும் தலைமுறையை நாம் பார்க்கத்தான் போகிறோம். எனது இந்த கவிதையுடன் முடிப்பது நன்றாக இருக்கும் என நினைக்கிறேன்.
அந்த நாட்கள்
          அந்த மூன்று நாட்களில்
         கோயிலுக்குள் செல்வது
        தீட்டாகவே இருக்கட்டும்
        எந்த மூன்று நாட்களில்
        பெண் தெய்வங்கள்
        கோயிலுக்குள் இருக்காதெனக்
        கொஞ்சம் சொல்லுங்களேன்?

புதன், 27 ஜனவரி, 2016

நஞ்சில்லா விவசாயம்… சாதித்த சிக்கிம்…


இந்தியாவில் முழுக்க, முழுக்க இயற்கை விவசாயத்திற்கு மாறிய முதல் மாநிலமாகியிருக்கிறது சிக்கிம். 2003ஆம் ஆண்டில் எடுத்த உறுதிமொழியை தடை பல கடந்து நிறைவேற்றிக் காட்டியிருக்கிறார் அம்மாநில முதலமைச்சர் பவான் சாம்லிங். வெறும் 6 லட்சம் மக்கள் தொகையே கொண்ட மலைப்பிரதேசத்து சிறிய மாநிலமான சிக்கிமில் உள்ள 75 ஆயிரம் ஹெக்டேர் விளைநிலத்தில் இன்று ஒரு துளி கூட ரசாயன உரம், நச்சு பூச்சிக்கொல்லிகள் கிடையாது.



ரசாயன உரங்களால் தின்று தீர்த்த நம் மண்ணில் தனிநபர் ஒருவரே இயற்கை விவசாயத்திற்கு மாறுவது அவ்வளவு சுலபமில்லை என்ற நிலையில் ஒரு மாநிலமே மாறியிருக்கிறது என்றால் இது உண்மையிலேயே அளப்பறிய சாதனைதான்.
மரபணு மாற்றம் செய்யப்பட்ட பயிர்களை ரகசியமாக அறிமுகப்படுத்தும் மத்திய அரசு, மாநில அரசுகளுடன் கைகோர்த்து வீரிய ரக (ஹைபிரீட்) விதைகளை நம் மண்ணில் விதைத்துக்கொண்டிருக்கும் பன்னாட்டு நிறுவனங்கள், நம் மண்ணைக் கெடுத்து பல லட்சம் கோடிகளை சுருட்டும் ரசாயன உரங்கள், பூச்சிக்கொல்லி நிறுவனங்கள் என எட்டுத்திக்கும் அசுரர்கள் நிற்க நடுவில் சிற்றெறும்பாய் ஒரு மாநிலம் இயற்கை விவசாயத்திற்கு மாறியிருக்கிறது என்றால் அது சாதாரண நிகழ்வா என்ன?
இதற்கு விதை போட்டது முதல்வர் பவான் சாம்லிங். 1994ஆம் ஆண்டு முதல்வராக அரியணை ஏறியவர் தொடர்ந்து 5 தேர்தல்களில் வென்று இன்று வரை முதல்வராக நீடிக்கிறார் என்பதில் இருந்தே இவர் மீது மக்கள் எந்த அளவுக்கு நம்பிக்கை வைத்திருக்கிறார்கள் என தெரிந்து கொள்ளலாம். இயற்கையை அளிக்காமல் தற்சார்புள்ள உணவு உற்பத்திக்காக இயற்கை விவசாயத்திற்கு மாநிலத்தை முழுமையாக மாற்ற வேண்டும் என 2003இல் திட்டம் போட்டார் பவான் சாம்லிங்.



இது ஏதோ அரசு மட்டுமே முன்நின்று நிறைவேற்றும் திட்டம் அல்ல என பவான் சாம்லிங்கிற்கு நன்றாகவே தெரியும். முதலில் விவசாயிகளின் மனநிலையில் மாற்றம் வேண்டும் என்பதை புரிந்துகொண்டிருந்தார் அவர். முதலில் விவசாயிகளை சந்தித்து ரசாயன உரங்கள், பூச்சிக்கொல்லிகளால் நிலம் எப்படி கெட்டுபோய் இருக்கிறது, நம் நிலத்தை நாசமாக்குவதில் நாமே எப்படி காரணமாக இருக்கிறோம் என அரசு அதிகாரிகளே கூட்டம் போட்டு விளக்கினார்கள். பள்ளி பாடத்திட்டத்தில் இயற்கை விவசாயத்தை பற்றிய பாடம் சேர்க்கப்பட்டது. இயற்கை விவசாயத்திற்கான கட்டாய பயிற்சி விவசாயிகளுக்கு வழங்கப்பட்டது.
பாரம்பரிய விவசாய முறையை நவீன உழவர்களுக்கு தூசி தட்டி அறிமுகப்படுத்தியது அரசு. இயற்கை முறையில் உரங்களை தயாரிப்பது எப்படி, மாட்டு சாணம், மூத்திரத்தை உரமாக பயன்படுத்துவது எப்படி என அனுபவம்மிக்க விவசாயிகளே அரசோடு கைகோத்து பயிற்சியளித்தார்கள். இது மண்ணின் வளத்தை மட்டும் மீட்டெடுக்கவில்லை. உரம், பூச்சிக்கொல்லிக்கு காந்தி நோட்டுகளை எண்ணிக்கொடுக்காமல் நமக்கு கிடைக்கும் சாணம், இலைகள், கழிவுகளையே எப்படி பயன்படுத்துவது என்ற தற்சார்பை ஒவ்வொரு விவசாயிக்கும் அளித்தது.


படிப்படியாக விவசாயிகளை இயற்கை விவசாயத்திற்கு மாற்றிக்கொண்டிருந்த சிக்கிம் அரசு எடுத்த மற்றொரு தைரியமான முடிவு ரசாயன உரங்கள், பூச்சிக்கொல்லிகள் கொள்முதலை நிறுத்தியதுதான். அதற்கு கொடுத்துவந்த மானியங்களையும் அதிரடியாக ரத்து செய்தது அரசு. சுமார் 67 நாடுகளில் தடை செய்யப்பட்ட உரங்களும், பூச்சிக்கொல்லிகளும் அனுமதிக்கப்பட்டுள்ள இந்தியாவில் இப்படி ஒரு முடிவை மாநில அரசாங்கம் எடுப்பது என்பது சாதாரணமல்ல.
அதனால்தான் இன்று தமிழ்நாட்டில் யூரியா கிடைக்காமல் விவசாயிகள் தவிப்பு என்று பத்திரிகையில் செய்தி வரும்போது, சிக்கிமில் யூரியா, ரசாயன பூச்சிக்கொல்லி கடத்தியவர்கள் கைது என செய்தி வருகிறது. ஆம், ரசாயன உரம், பூச்கிக்கொல்லிகளை சிக்கிம் மாநிலத்திற்குள் கொண்டுவருவதும், பயன்படுத்துவதும் இப்போது சட்டப்படியான குற்றம். ரசாயன உரங்கள் மாநிலத்திற்குள் நுழைவதை தடுப்பதற்காகவே எல்லையில் இரு சோதனைச் சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன.

     பசுமைப் புரட்சியின்போது ரசாயன உரங்கள், பூச்சிக்கொல்லிகளை எப்படி தலையில் சுமந்துகொண்டு சென்று கடைக்கோடி விவசாயியும் நச்சு விவசாயத்திற்கு மாற்றினார்களோ, அதே போன்ற ஒவ்வொரு விவசாயியையும் நேரில் சென்று பார்த்து பயிற்சி அளித்து இயற்கை விவசாயத்திற்கு மாற்றினார்கள் அதிகாரிகள். இயற்கை விவசாயத்திற்கு உடனே தடம்மாறுவது சுலபமில்லை என்பதால் விவசாயிகளுக்கு ஊக்கத் தொகையும் வழங்கியது சிக்கிம் அரசு.
இயற்கை முறையில் விளைவித்த முட்டைக்கோஸ், முள்ளங்கி, கேரட், ஏலக்காய் உள்ளிட்ட விளைபொருட்களுக்கு சரியான சந்தையையும் அரசாங்கமே ஏற்படுத்திக் கொடுத்ததால் விவசாயிகள் தைரியமாக இயற்கை விவசாயத்திற்கு திரும்பினார்கள். இயற்கை விவசாயத்திற்கு மாறிய நிலங்களுக்கு படிப்படியாக சான்றிதழ் வழங்கியது அரசாங்கம்.

இயற்கை உரங்களால் மண் வளம் பெற்று விளைச்சலும் பெருக விவசாயிகள் நம்பிக்கை பெற்றனர். மற்றொரு புறம் அனைத்து சந்தையிலும் இயற்கை முறையில் விளைவித்த காய்கறிகள் விற்பனையானதால் ஒரேவிதமான நல்ல விலை கிடைத்தது. பெயருக்கு திட்டத்தை அறிவித்து விவசாயிகளை பாதியில் கைவிடாமல் ஆரம்பம் முதல் இறுதி வரை கூடவே இருந்து இயற்கை விவசாயத்திற்கு மாற முழு ஒத்துழைப்பு அளித்தது அரசு.
திட்டமிட்டபடியே சரியாக 12 ஆண்டுகளில் மாநிலம் முழுவதையும் இயற்கை விவசாயத்திற்கு மாற்றிவிட்டார் பவான் சாம்லிங். கடந்த மாதம் சிக்கிம் தலைநகர் காங்டாக்கில் நடந்த விழாவில் இதை பெருமையாக அறிவித்தார் பிரதமர் நரேந்திர மோடி. ஒவ்வொரு மாநிலமும் ஒரு மாவட்டம் அல்லது ஒரு வட்டத்திலாவது இயற்கை விவசாயத்தை சோதனை முறையில் முயன்று பார்க்க வேண்டும் என பிரதமர் நரேந்திர மோடி வேண்டுகோளும் வைத்தார்.
இன்று சிக்கிமில் உள்ள 75 ஆயிரம் ஹெக்டேர் விவசாய நிலத்திலும் இயற்கை விவசாயம்தான் நடக்கிறது. இதனால் சுமார் இயற்கை முறையில் சுமார் 8 லட்சம் டன் காய்கறிகள், உணவு தானியங்கள் விளைவிக்கப்படுகின்றன. இந்தியா முழுவதுமே வெறும் 12.4 லட்சம் டன் காய்கறிகள், உணவு தானியங்கள்தான் இயற்கை முறையில் விளைவிக்கப்படுகின்றன என்பதில்  இருந்தே சிக்கிமின் முக்கியத்துவம் நமக்கு தெரியும். சுருங்கச் சொல்ல வேண்டும் என்றால் நாட்டின் இயற்கை முறையிலான விளைபொருட்களில் சுமார் 65 விழுக்காடு சிக்கிமில்தான் விளைகிறது.


முதல்வர் பவான் சாம்லிங் இதோடு நின்றுவிடவில்லை. 300 மெட்ரிக் டன் இயற்கை உரம் தயாரிக்கும் ஒரு ஆலையை நிறுவ திட்டமிட்டுள்ளார். ஒவ்வொரு ஊராட்சியிலும் காய்கறி கழிவுகளில் இருந்து உரம் தயாரிக்கும் அமைப்பை நிறுவவும் முடிவு செய்துள்ளார்.

அதெல்லாம் இருக்கட்டும் நாம் என்ன செய்கிறோம். தமிழகத்தில் இருந்து வரும் காய்கறிகளில் பூச்சிக்கொல்லிகளின் தாக்கம் அதிகமாக இருக்கிறது என கேரளா தடை போட்டபோது அது அப்படி ஒன்றும் ஒரேயடியாக கொல்லும் விஷமாக இல்லை மெல்லக் கொல்லும் விஷம்தான் என்றரீதியில் அரசாங்கத்தின் துணையோடு பூச்சிக்கொல்லியின் தாக்கம் குறைவாகவே இருக்கிறது என பெருமையோடு சொல்லிக்கொண்டிருக்கிறோம்.
நம்மாழ்வார் சொல்வதுபோல விவசாயம் என்பது பொருளியல் சார்ந்தது என்பதை குடலியல் சார்ந்தது என்பதை அரசியல்வாதிகள் உணர வேண்டும். செய்வார்களா? நம் ஊரில் செய்வார்களா?