வெள்ளி, 26 மார்ச், 2010

அக்மார்க் யோக்கிய கலாச்சாரக் காவலர்களுக்கு......

மதிப்பிற்குறிய கலாச்சாரக் காவலர்களுக்கு,


நான் இங்கு நலம். நீங்கள் நலமா? இந்த நேரத்தில் இந்தக் கேள்வி ‘எரிகிற கற்பில் எத்தனால் பெட்ரோலை ஊத்தியதைப் போல’ இருக்கும். ஆனால் நலம் விசாரிப்பது கூட நமது கலாச்சாரத்தின் ஓர் அங்கம் என்தால் இதை பொறுத்தருள்வீர்கள் என்று நம்புகிறேன்.

கற்பைப் பற்றி பேசி வட்டியும் முதலுமாய் குஷ்பு வாங்கிக் கட்டிக் கொண்ட விவகாரத்தில், உச்சநீதிமன்றம் இப்படி உங்களை மூக்கறுக்கும் என்று நான் மட்டுமல்ல குஷ்பு கூட எதிர்பார்த்திருக்க மாட்டார். திருமணத்திற்கு முன்பு உறவு கொள்வதும் தவறில்லை, திருமணமே செய்யாமல் ஆண், பெண் சேர்ந்து வாழ்வதும் தவறில்லை என்று நம் கலாச்சாரத்தின் அதரப் பழசான ஆணிவேரில் ஆசிட் வார்த்திருக்கிறது உச்ச நீதிமன்றம். க.கா.க்களான (கலாச்சாரக் காவலர்களான) நீங்கள் இந்த விவகாரத்தை ஒரு சின்ன முணுமுணுப்போடு மூட்டை கட்டிவிட்டு தற்போதைய மாபெரும் பணியான சுவாமி நித்யானந்த பரமஹம்சரிமிடருந்து இந்துக் கலாச்சாரத்தை மீட்டெடுத்து பினாயில் ஊற்றிக் கழுவும் பணிக்கு திரும்பி விடுவீர்கள் என்பதில் எனக்கு சந்தேகமில்லை.

ஏனென்றால் கற்பை பற்றி கருத்து சொல்லக் கூட ஒரு கிளுகிளுப்பான ஆள் கிடைத்தால் தான் நம் கலாச்சாரமே ஆட்டம் கண்டு ரிக்டரில் 7 புள்ளிகளுக்கு மேல் பதிவாகும். நாம் எரிக்கும் கொடும்பாவிகளும் வேகும். அதுவும் ஒரு நடிகையாக இருக்கும் பட்சத்தில் க.கா.க்களான உங்கள் ரத்தம் 30 டிகிரி அதிகமாக கொதிப்பதை மறுப்பதற்கில்லை.

அதையெல்லாம் விட்டுவிட்டு உச்சநீதிமன்றம், உயர்நீதிமன்றம் ஏன் ஐ.நா. சபையே வந்து திருமணத்துக்கு முந்தைய உறவுக்கு வக்காலத்து வாங்கினாலும் நம் கற்புக் கலாச்சார கோட்டையில் குண்டுசி அளவு ஓட்டையைக் கூட போட முடியாது என்பது நம்மைப் போன்ற அதி புத்திசாலிகளுக்கே தெரிந்த உண்மை.

ஆனாலும் பாருங்கள் க.கா.க்களே... பல்லாயிரம் ஆண்டுகளாக புடம் போட்டு கட்டிக் காத்து வந்த கெட்டியான நம் கற்புக் கலாச்சாரம் யாரோ ஒரு நடிகை போகிற போக்கில் பேசிய நாலு வரியால் சிதைந்த போய் சீழ் வடிகிறது என்றால் நல்ல வேடிக்கைதான் இல்லையா?

இவ்வளவு பலவீனமான ஒரு கலாச்சாரத்தை இதுநாள் வரை பாதுகாத்ததற்காக உங்களுக்கு வாழ்நாள் க.கா. விருதுகள் ஒரு டஜன் வழங்கினாலும் தகும்.
இந்த living together... அதாவது தாலி கட்டிக் கொள்ளாமல் சேர்ந்து வாழ்வதை நினைத்தால் உங்களுக்கு மட்டுமல்ல, எனக்கும் கூட து£க்கி வாரிப் போடுகிறது.

துணி துவைக்க, வீடு பெருக்க, சமைக்க மற்றும் படுக்கைக்கு என லைப்டைம் வேலிடிட்டியில் கிடைக்கும் ஒரு மிஷின் அடித்தாலும், உதைத்தாலும் மூக்கை உறிஞ்சி முந்தானையில் துடைத்து விட்டு காலைச் சுற்றி வருவது தானே நம் கலாச்சாரத்திற்கு அழகு. அதை விட்டு விட்டு பொசுக்கென்று கோபம் வந்தால் இடையிலேயே டாட்டா காட்டி விட்டுப் போகும் என்றால் அப்படிப்பட்ட கலாச்சாரத்தை இஞ்சி மரப்பா தின்னாலும் நம்மால் ஜீரணிக்க முடியுமா சொல்லுங்கள்?.

துடைப்பம் து£க்கவும், பாத்திரம் தேய்க்கவுமா நாம் மீசை வைத்தோம்? அதிலும் மாமனார் சொத்தை வழிப்பறி செய்யும் வரதட்சணைக்கு வழியில்லாத வாழ்க்கை முறையெல்லாம் ஒரு வாழ்க்கை முறையா?
அப்படி வாழ்பவர்களை கலாச்சாரத் துரோகிகள் என்று கரும் புள்ளி, செம் புள்ளி குத்தி கழுதை மேல் ஊர்வலம் கொண்டு வரச் சொல்லி என்று ஒரு தீர்ப்பு வருகிறதோ அன்றுதான் நமக்கு கலாச்சார சுதந்திரம் கிடைக்கும்.

பத்தினி மற்றும் விதவைகளுக்கு நிகரான ஆண்பால் வார்த்தைகளை கூட கட்டமைத்து விடாத அளவுக்கு கண்ணியமாய், நெடுங்காலமாய் செதுக்கி வந்த நம் புனிதக் கலாச்சாரத்தை இன்றைய ஐ.டி. யுகத்துக்கு ஞாபகப்படுத்த மறந்ததுதான் இத்தனைக்கும் காரணம்.

அதனால் கற்பு தொடங்கி செருப்பு வரைக்குமான நமது கலாச்சாரக் கூறுகளை பட்டியலிட்டு பாடம் கற்பிப்பதென கண்ணகியிடம் சபதம் போட்டிருக்கிறேன். க.கா.க்களான உங்களுக்கு இவற்றில் ஏதேனும் ஆட்சேபனை இருந்தால் சொல்லுங்கள். அடுத்த முறை திருத்திக் கொள்கிறேன்.

1. பெண்களுக்கு லைசன்ஸ் கட்ட அனுமதிக்காத வாழ்க்கை முறை நம் கலாச்சாரத்திற்கு ஆகாது. ( ஆண்களுக்கு லைசன்ஸ் கட்டக் கூடாதா என்பவர்களை பெரியார் சிலையைப் போல நடுத்தெருவில் நிறுத்தச் சொல்கிறது நம் கலாச்சாரத்தின் உட்பிரிவொன்று)

2. கற்புதான் நம் கலாச்சாரத்தின் இதயம் (மற்றும் கல்லீரல், நுரையீரல், எல்லாமே) (மேற்கண்டதில் கற்பு என்பதற்கு பெண் கற்பு என்று மட்டும்தான் நம் கலாச்சார அகராதியில் பொருள் இருக்கிறது. கற்புக்கரசி என்று கேள்விப்பட்டதைப் போல கற்புக்கரசன் என்று எங்காவது கேள்விப்பட்டிருக்கிரீர்களா?)

3. வாயைக்கட்டி, வயிற்றைக்கட்டி சம்பாதித்ததையெல்லாம் வரதட்சணை என்ற பெயரில் ரொக்கமாக, நகைகளாக புள்ளி ராஜாக்கள் சுருட்டும் வேளையில் வயிற்று வலி காரணமாக நம் கலாச்சாரம் பாத்ரூமில் இருப்பதால் அது பற்றி கருத்து சொல்வதற்கில்லை.

4. திருமணத்திற்குப் பின் ருக்மணி நாச்சியப்பன், ஈஸ்வரி சிவராமன் என்று பெயர் மாற்றம் செய்பவர்களுக்கே நம் கலாச்சாரக் குத்துவிளக்காகும் தகுதி இருக்கிறது. ( முந்தாதீர்கள். இச் சலுகை எப்போதும் கிடைக்கும்)

5. அக்கா- தம்பி, கணவன்-மனைவி, அப்பா- மகள் இந்த வரிசையில் தோழன் தோழி என்ற ஒன்று வருவதைப் பார்த்தாலே நமது கலாச்சாரத்திற்கு குமட்டிக் கொண்டு வரும். (இதற்கு மிகக் கேவலமான பெயர் வைத்துள்ள தினத்தந்தி வகையறாக்கள்தான் நம் கலாச்சாரத்திற்கான official media partner)

6. டூ பீஸ் நடிகைகள் உலாவரும் திரைப்படங்களுக்கு ‘யு’ சர்டிபிகேட் வழங்குவதும், கிளுகிளுப்பான சின்னத்திரை நடனப் போட்டிகளை கூச்சமே இல்லாமல் குடும்பத்தோடு அமர்ந்து பார்ப்பதும், வீட்டிற்கு வரும் வார இதழின் நடுப்பக்ககங்களில் ஆடை உரித்த நடிகைகளின் படம் போடுவதும் எந்த வகையிலும் கலாச்சார மீறலாகாது. (ஆனால் எய்ட்ஸ் பற்றி குழந்தைகள் கேள்வி கேட்பது ஆபாசமானது மட்டுமல்ல அப்பட்டமான கலாச்சார சீர்கேடு என்பதை மறந்துவிடக்கூடாது)

7. பாலியல் கல்வியால் கற்புக்கரசிகளைத் தயாரிக்கும் நம் கலாச்சாரத் தொழில் பாதிக்கப்படும் என்பதை கண்ணை திறந்து கொண்டே நம்புவது கலாச்சாரக் கடமைகளுள் ஒன்று. (இதை முட்டாள்தனமானது என்று யாராவது சொன்னால், அவர்கள் வீட்டிற்கு வரும் குமுதமும், தொலைக்காட்சியில் வரும் மிட்நைட் படங்களும் சாம்பலாகுக என்று சாபமிடுக)

பெருங்கடலென இருக்கும் நம் புனிதக் கலாச்சாரத்தின் கூறுகளில் இது சிறு துளிதான். இதில் ஒன்றை மீறினாலும் அவர்கள் முதுகில் துரோகி பட்டம் குத்த க.கா.க்களான நீங்கள் எப்போதும் ரப்பர் ஸ்டாம்போடு திரிவது எனக்கு மகிழ்ச்சியைத் தருகிறது.

அப்புறம் இன்னொரு விஷயம்... இப்படி குஷ்பு, உச்சநீதிமன்றம் என ஆளாளுக்கு கல் எறிவதால் நம் கலாச்சாரக் கூட்டம் கலைந்து விடுமோ என்ற கவலை உங்களுக்கு இனியும் வேண்டாம்... அண்மையில் என் நண்பனொருவன் வருத்தத்தோடு இருந்தான்.. திருமணமாகி ஒரு மாதமே ஆன அவனுக்கு தெரிந்த பையன் விபத்தொன்றில் இறந்து விட்டானாம்.. அவனது கவலை கணவனை இழந்த அந்த இளம்பெண்ணைப் பற்றியதாக இருந்தது.. இனியும் அந்தப் பெண்ணை யார் திருமணம் செய்வார்கள்? அப்படியே திருமணம் செய்து கொடுத்தாலும் வத்தலும், தொத்தலுமான வயசானவனுக்கு திருமணம் செய்து வைப்பார்கள் என்றெல்லாம் வருத்தப்பட்டான். இதற்கெல்லாம் மகுடம் வைத்தது போல அவன் இறுதியாக ‘‘ இதற்குத்தான் அந்தக் காலத்தில் உடன்கட்டை ஏறுதல் என்று நல்லதொரு பழக்கத்தை வைத்திருந்தார்கள்’’ என்றானே பார்க்கலாம்.. நீங்கள் நம்பமாட்டீர்கள் க.கா.க்களே.. அந்த நிமிடத்தில் எனக்கு புல்லரித்துவிட்டது. இத்தனைக்கும் அவன் வரலாற்றில் பட்டம் பெற்றவன். ராஜாராம் மோகன்ராயையும், சதி என்னும் உடன்கட்டை ஏறும் வழக்கத்திற்கு எதிரான அவரது போராட்டத்தையும் மந்த கதியில் விழுங்கி தேர்வு அறையில் வாந்தி எடுத்தவன். அவன் வாயிலிருந்தே இப்படி ஒரு வியாக்கியானம் வந்து விழுகிறது என்றால் ஒரு குஷ்பு அல்ல ஓராயிரம் குஷ்புக்கள் வந்தாலும் நம் கலாச்சாரத்தின் சில்லி வேரைக் கூட அசைக்க முடியாது என்று என்னால் உங்கள் தலையில் அடித்துச் சத்தியம் செய்ய முடியும்.

இறுதியாக நான் அவனிடம் இரண்டு கேள்விகள் கேட்டேன்
1. மனைவி இறந்து கணவன் உடன்கட்டை ஏறும் பழக்கம் இருந்திருந்தால் நீ ஆதரித்திருப்பாயா?
2. இவ்வளவு பேசும் நீ கணவனை இழந்த அந்த பெண்ணுக்கு வாழ்க்கை தரத் தயாரா?
இரண்டுக்கும் அவன் சிரித்தானே ஒரு அசட்டுச் சிரிப்பு, அதை புகைப்படம் எடுத்து நம் கலாச்சார அலுவலகத்தின் வாசலில் வைத்திருந்தால் கண் திருஷ்டி ஏற்படாமல் உச்சநீதிமன்றம் நமக்கு சாதகமாகக் கூட கருத்து சொல்லியிருக்கும்.

சரி விடுங்கள்.. நம் கலாச்சார காவல் படையில் சேர அவனுக்கு ஒரு விண்ணப்பத்தை அனுப்பி வையுங்கள். அப்புறம் சுவாமி நித்யானந்த பரமஹம்சரிடமிருந்து மீட்கும் இந்துக் கலாச்சாரத்தின் மீது பினாயில் ஊற்றும் வைபவத்திற்கு கட்டாயம் சொல்லி அனுப்புங்கள். நானும் ஒரு தேக்கரண்டி ஊற்றி கொஞ்சம் புண்ணியம் தேடிக் கொள்ள வேண்டும்.

என்றும் தெம்புடன்.. ..
யுவான் சுவாங்.