பணி முடிந்து வீடு திரும்பிய ஒரு பின்னிரவில் விழாக் கோலம் பூண்டிருந்த எங்கள் தெருவை ஒட்டிய கோயிலில் இருந்து மைக்செட் அலறிக் கொண்டிருந்தது. வழக்கம் போல ஏதாவது ரிக்கா டான்சோ, அல்லது பாட்டுக் கச்சேரியாகவோ இருக்கும் என்று நினைத்தால் காற்றில் மிதந்து வந்த கோமாளியின் நையாண்டி அது ஒரு தெருக் கூத்து என சொல்லாமல் சொல்லியது. (அ)சிங்கா ர சென்னையின் வீதியொன்றில் தெருக் கூத்தா? நினைத்துப் பார்க்கவே சந்தோஷமாக இருந்தது.
கேமராவோடு தெருவோரமாய் நின்றேன். வெறும் நான்கைந்து நடிகர்கள் மட்டுமே கொண்ட சின்னதொரு குழு. திருவள்ளுர் பக்கமிருந்து வந்திருந்தது. கூத்து என்னவோ புராணம் பற்றியதுதான். ஆனால் நிமிடத்திற்கு நிமிடம் இரட்டை அர்த்த வசனங்களால் கூட்டத்தையே கள்ளச் சிரிப்புக்கு உள்ளாக்கிக் கொண்டிருந்தான் கோமாளி.
இன்றைய கேளிக்கை ஊடகங்களின் அசுரத்தனமான வளர்ச்சிக்கு மிச்சமிருக்கும் உயிரையும் பலி கொடுத்து விடாமல் இருக்க தெருக் கூத்து இப்படி ஆபாச ஒப்பனை போட்டுக் கொள்வது தவிர்க்க முடியாததாகி விட்டது வருத்தமடைய வைத்தது. அப்படிப்பட்ட ஒன்றையே அந்தக் கலைஞர்களிடம் எதிர்பார்ப்பது போல கூட்டத்தின் கை தட்டலும், பெண்களின் முந்தானை மறைத்த சிரிப்பும் இரவை அதிர வைத்துக் கொண்டிருந்தன.
ஆயிரம் இருந்தாலும் தெருக் கூத்துக்கே உண்டான அந்த நீள வசனங்களிலும், அவற்றை அனாயசமாக பிசிறின்றி பேசும் நடிப்பிலும் சிறிதும் குறையில்லை. அதுவும் வசனங்களை விட அதிகமாக வந்த பாடல்களை, அவர்கள் மடை திறந்த வெள்ளமென பாடிக் கொண்டு போனது பிரமிப்பில் ஆழ்த்தியது. புராணத்தில் வரும் நம் புனிதக் கடவுள்களான சிவன், பார்வதி, லட்சுமி, விஷ்ணு உள்ளிட்ட வகையறாக்களை கோமாளி வாய்க்கு வாய் ஏக வசனத்தில் அர்ச்சனை செய்ததை நம் ஆர்.எஸ்.எஸ். பக்த கேடிகள் பார்த்திருந்தால் ருத்ரதாண்டவம் ஆடியிருப்பார்கள்.
அதிலும் சில இடங்களில் போகிற போக்கில் கோமாளி கடவுள்கள் மீது வைத்த விமர்சனங்கள் மிகவும் கூர்மையானது. அதை வேடிக்கை விடயம் என்று ஒதுக்கி விட முடியாது. உதாரணத்திற்கு ஒன்று. பிரம்மன் அறிமுகமாகும் காட்சி. கோமாளியிடம் சொல்கிறான் பிரம்மன்,
“ இந்த உலகில் உள்ள சர்வ ஜீவ ராசிகளையும் நான் தான் படைத்தேன்”
“சர்வ ஜீவ ராசிகள்னா?”
“புல், பூண்டு முதல் மனிதன் வரை படைத்தவன் நான்தான்”
“அப்படின்னா, என்னை படைச்சது?”
“உன்னைப் படைத்ததும் நான்தான் மகனே”
“அடி செருப்பால... எங்க ஆத்தா இதக் கேட்டுச்சி விளக்கமாறு பிஞ்சிடும். நான் எங்க அப்பனுக்கு பொறந்தவன்டா”




