சேவல் கூவி, சூரியன் எழுந்த நிழலு
பூமியில விழுறதுக்கு முன்னாடியே கி.மீனாட்சி பட்டியில பல வீட்டுல பூட்டு தொங்குது.
மழை பெஞ்ச ஈரம் காயாததால காட்டு வேலைக்கு போயிடுச்சு சனமெல்லாம். தெருவுக்கு நாலு ஆட்டுக்
குட்டிங்களும், அதுங்களுக்கு போட்டியா பிள்ளை குட்டிகளும் திரிஞ்சுக்கிட்டு இருக்குங்க.
மதுரை பெரியார் பஸ் ஸ்டாண்டுல
இருந்து 11 ரூபா பஸ் சார்ஜ் தூரத்துல இருக்குற இந்த ஊருக்கு செம்மண் கலரு. மண் சுவருல
கட்டுன வீட்டுக்கே அழகு அந்த செம்மண்ணுதான். வீட்டுக்கு அழகு செம்மண்ணுனா பாட்டிக்கு
அழகு பாம்படம். தெருவுல அங்கொன்னும் இங்கொன்னுமா பாம்படம் போட்ட பாட்டிங்க இருக்காங்க.
அதுல ஒருத்தவங்கதான் மூக்காயி பாட்டி.
காது வளர்த்து பாம்படம் போட்ட
கதையை கேட்டா மூக்காயி பாட்டி, ஏதோ நேத்து நடந்த சமாச்சாரம் மாதிரி சொல்லுது.
“காது வளர்க்குறதுன்னா சாதாரணம்
கிடையாதுப்பா. நான் பொறந்து ஏழாம் நாலுல காதுல கம்மல் குத்துற இடத்துல கத்தியால குடைஞ்சு
சதையை எடுத்துட்டு சோளத் தட்டையோட பருப்ப (தட்டையின் உள்ளே உள்ள பஞ்சு போன்ற பகுதி)
குத்திவிட்டாக. அது தானாவே ஊதிக்கிட்டு வந்துச்சு. அதனால கொஞ்சம், கொஞ்சமா ஓட்டை பெருசாச்சு.
அதுக்கு பிறப்பாடு என்ன பண்ணாங்கன்னா
குணுக்கு (தேன் மெழுகு) வச்சி ஓட்டையை அடைச்சிவிட்டாக. இப்படி காதை வளர்த்துக்கிட்டுதான்
விளையாண்டுக்கிட்டு திரிஞ்சோம். அப்புறம் நான் வயசுக்கு வந்தப்போதான் ரெண்டு பவுனுல
இந்த தண்டட்டியை எங்க வீட்டுல செஞ்சு மாட்டி விட்டாங்க. இம்மாம் பெருசா இருக்குற தண்டட்டி
ரெண்டு பவுனுதானான்னு கேக்காத. இதுக்கு உள்ள இருக்குறதுல்லாம் அரக்கு. அப்படி மாட்டுன
தண்டட்டியை இதுநாளு வரைக்கும் கழட்டுனதே இல்லை, தெரியுமா? இப்பவும் பொட்டப்பிள்ளைக
திரியுதுங்களே. ஒரு மூக்கத்தி போடச் சொன்னாலே அசிங்கமுன்னுட்டு” என அலுத்துக்கிட்டாங்க
மூக்காயி பாட்டி.
“எய்யா அவள மாரிதேன் எனக்கும்
காது வளர்க்க கிழிச்சுவிட்டாங்கய்யா. ஆனா ஓட்டை விழாம காது கிழிஞ்சுபோச்சு. அப்புறம்
தொங்குன காது சதையை அறுத்துவிட்டாங்க. இல்லைன்னா நானும் இப்படி தண்டட்டி போட்டுக்கிட்டு
இருந்துருப்பேன்” என ஏக்கமாக சொன்னார் ஒய்யம்மா பாட்டி.
பிள்ளை குட்டிகளை விட ஆடு, மாடு,
கோழிங்க அதிகம் இந்த ஊருல. வீரபாண்டி அண்ணன் வீட்டல கோழி ஒன்னு அடைகாக்குது. பள்ளிக்கூடம்
போற அந்த வீட்டு குட்டிப்பய அந்த கோழிய வளர்க்குறான். கோழி எத்தனை முட்டையை அட காக்குதுன்னு
வீரபாண்டி அண்ணனுக்கே வெவரம் தெரியலை பய ‘எட்டு முட்டை’ சொல்லுறான். எட்டு குஞ்சு எப்படா
வரும் இரை போடலாமுன்னு இருக்கான் அவன். 21 நாளு ஆனாதான் முட்டையில இருந்து குஞ்சு வருமுன்னு
அவுங்க அம்மா சொல்லியிருக்காம்.
மாட்டுக்கு வைக்கோல் போடுறது,
தீவனம் போடுறதெல்லாம் ஒரு பக்கம் இருந்தாலும் ஊரத் தண்ணி ஊத்துறதுன்னு ஒரு வழக்கம்
கி.மீனாட்சிபட்டியில இருக்குது. அது என்னன்னா வீட்டுல மீந்துபோன சோறு, நீச்சத் தண்ணி,
தட்டு கழுவுன தண்ணி, கழிவான காய்கறிங்கன்னு எல்லாத்தையும் ஒரு பழைய பானையிலையோ சட்டியிலையோ
ஊத்தி வச்சிருக்காங்க. மாடு வச்சிருக்குறவங்க காலையில பெரிய குடம் எடுத்துக்கிட்டுப்போயி
தந்த உரத் தண்ணியை வாங்கிட்டு வந்து மாடுகளுக்கு ஊத்துறாங்க.
அதுக்குப் பதிலா ஊரத் தண்ணி வச்சிருக்குற
வீடுகளுக்கு மாட்டுச்சாணியை கொண்டு வந்து மாட்டுக்காரங்க போடணும். தெனமும் காலையில
இந்த சாணிய வச்சித்தான் முற்றம் தெளிப்பாங்க. ஒரு பண்டத்தைக் கொடுத்துட்டு அதுக்கு
பதிலா இன்னொரு பண்டம் வாங்குன அந்தக் காலத்து பண்டமாற்றுப் பழக்கம் இந்த ஊருல இன்னும்
இப்படித் தொடருது.
வீரபாண்டி அண்ணன் இப்படித்தான்
தன்னோட மாட்டுக்கு தெனமும் 3 வீட்டுல ஊரத் தண்ணி எடுக்குறாரு. மூணு வீட்டுக்கும் மாட்டுச்சாணத்தை
கொண்டு போயி போடுறாரு. மாடு கன்னு போட்டுச்சுன்னா சீம்பாலு, தவறாம அந்த மூணு வீட்டுக்கும்
போயிடுமாம்.
கரண்டு சார்ஜை கவர்மென்டு கூட்டுனாலும் சரி, குறைச்சாலும் சரி கி.மீனாட்சிபட்டியில இருக்குற 15 வீட்டுக்காரங்க கவலைப்படவும் மாட்டாங்க. சந்தோஷப்படவும் மாட்டங்க. ஏன்னா அந்த 15 வீட்டுலையும் கரண்ட்டே இல்லை. அதுல ஒன்னுதான் சின்னக் கந்தன் வீடும். செம்மண் சுவர் வச்ச ஓட்டு வீடு. வீட்டு முற்றத்துல முள்ளு மரம் நல்லா படர்ந்து நிழலைக் கொடுக்குது. சாணம் மொழுகுன அந்த முற்றத்துலதான் மண்ணைக் குழைச்சு செஞ்சு வச்ச விறகு அடுப்பு இருக்குது. அம்மிக்கல்லும் இருக்குது.
வீட்டுக்கு பகல்ல சூரியன் வெளிச்சம்
கொடுத்தா ராத்திரிக்கு இருக்கவே இருக்குது சீமத்தண்ணி (மண்ணெண்ணெய்) விளக்கு. சாப்பிட
சமைக்கன்னு இந்த ஒத்த விளக்குதான் ஒரு குடும்பத்துக்கே. இந்த விளக்குலதான் சின்னக்கந்தனோட
3 பிள்ளைகளும் படிக்குதுங்க. இதுக்கே ஆச்சர்யப்பட்டா இந்த விளக்குல படிச்சே இப்போ எம்.பில்
படிப்பு வரைக்கும் வந்துட்ட செல்வத்தைப் பார்த்தா இன்னும் ஆச்சர்யப்படுவீங்க. எம்.பில்
படிச்சாலும் செல்வத்துக்கு இன்னைக்கும் வாழ்க்கையில வெளிச்சம் தர்றது சீமத்தண்ணி விளக்குதான்.
கோழிக்கு செல்லு (ஒருவகை சிறிய
பூச்சி) வந்திடுச்சா, ஆடு, மாடுக்கு வயிறு உப்பிடுச்சா, ஆளுங்க யாருக்காவது குறுக்கு(முதுகு)
பிடிச்சிக்கிடுச்சா உடனே போறது அழகன் தாத்தா வீட்டுக்குதான். நெறிஞ்சி முள்ளு, ஆவாரம்
பூ, குன்னி முத்துன்னு தேடித்தேடி பறிச்சி டவுண்ல கொண்டு போயி விற்கிறதுதான் அழகன்
தாத்தோவோட சோலி (வேலை). அதுலையும் குறுக்குப் பிடிக்கு தாத்தா கொடுக்குற சோளத் தட்டை
வைத்தியம் இந்த ஊரு பக்கம் ரொம்ப பரிச்சயமானது. குறுக்குப் பிடிச்ச ஆளையும் அவருக்கு
எதிர்ல இன்னொரு ஆளையும் நிறுத்தி சோளத் தட்டைங்களை ரெண்டு பேரும் இடுப்புக்கு நேரா
ரெண்டு பக்கமும் பிடிச்சு நிற்கணுமாம்.
பிள்ளையாரே பிள்ளையாரேன்னு ஆரம்பிச்சு
அழகன் தாத்தா மந்திரம் சொல்லச்சொல்ல ரெண்டு பக்கமும் இருக்குற சோளத் தட்டைங்க ரெண்டு
பேருக்கும் நடுவுல அப்படியே வளைஞ்சு ஒன்னு சேர்த்திட்டா குறுக்கு வழி ஓடியே போயிடுமாம்.
இதுக்கு வைத்தியக் காசு ஏதும் கிடையாது. தட்சணை மட்டும்தான். முன்ன ஒன்னேகால் ரூபா
தட்சணை வாங்குன அழகன் தாத்தா இப்போ 10 ரூபா வாங்குறாரு.
கி.மீனாட்சிபட்டி பகுதியில இன்னும்
ஒரு வித்தியாசமான பழக்கம் இருக்குது. அது என்னன்னா உண்மையைக் கண்டறிய போர்வை ஒன்னு
மேல சத்தியம் செய்யச் சொல்றதுதுதான். இது பத்தி 65 வயசான மருகாண் இப்படிச் சொல்றாரு.
“அந்த கம்பளிப் போர்வை சாதாரணமானதுல்லய்யா.
அந்த காலத்துல திருமலை நாயக்கரு மீனாட்சியம்மன் கோயிலுல கொடுத்த கம்பளி. ஒரு பெண்ணை
தொட்டுட்டு இல்லைன்னு ஒருத்தன் மறுத்துட்டான்னா இந்த கம்பளியிலதான் சத்தியம் செய்யச்
சொல்வோம். அந்த வழக்கு வந்ததுமே கம்பளியை தூக்கிட்டு போக இருக்குறவரு 40 நாள் அதுக்கு
பூஜை நடத்துவாரு. ஒரு நாளைக்கு ஒரு வேளைதான் சாப்பிடுவாரு.
அப்புறமாக வடபழஞ்சி பக்கத்துல
இருக்குற காவேரியம்மன் கோயிலுல ஆலம்பட்டி, கரடிப்பட்டி, வெள்ளப்பரப்பட்டின்னு எட்டு
ஊரு சனம் கூடும். விரதம் இருந்தவருதான் அந்த கம்பளி இருக்குற பெட்டியை தூக்கிட்டுப்
போவாரு. அப்படிபோகுற வழியில பொண்ணுங்க யாரையும் வர விடமாட்டாங்க. கோமியம்(மாட்டு மூத்திரம்)
தெளிச்சுக்கிட்டே போவாங்க. பஞ்சாயத்துல கம்பளியை விரிச்சு வச்சிடுவாங்க. யாரு மேல குத்தம்சாட்டியிருக்கோ
அவரு குளிச்சுட்டு வந்து கம்பளியை தொடனும். உண்மையிலேயே அந்த பொண்ண வலுக்கட்டாயமா தொட்டிருந்தவன்
கம்பளியத் தொடப்போனா கம்பளி தீயாவும், நல்ல பாம்பாவும் அவன் கண்ணுக்கு மட்டும் தெரியுமாம்.
நாங்க யாரும் அதை பார்த்ததில்லை.
அதை பார்த்து பயந்தே அவன் செஞ்ச
தப்பை ஒத்துக்கிடுவான். இப்படித்தான் ரெண்டு வருஷத்துக்கு முன்னாடி ஒரு பொண்ணை தொட்டவன்
கூட இருந்தவன் பேச்சைக் கேட்டு கம்பளியில பொய் சத்தியம் செஞ்சுட்டான். இப்ப அவன் குடும்பமே
இல்லை தெரியுமா?” என மருகாண் தாத்தா சொன்னதை கேட்டு நமக்கு நெஞ்சு படபடன்னு அடிச்சுக்கிட்டது.
கி.மீனாட்சிபட்டியில இதுவரைக்கும்
செருப்பே போடாத ஒருத்தரு இருக்காரு. அவருதான் ஆண்டி. பார்த்தா 50 வயசுக்காரரு மாதிரி
இருக்குற இவருக்கு இப்போ 80 வயசு நடக்காம். இவர் பேரனுக்கே 40 வயசு ஆச்சுன்னா பார்த்துக்கோங்களேன்.
இன்னும் ஜம்முன்னு இளவட்டம் மாதிரி நடமாடுற இந்த தாத்தா இதுநாள் வரைக்கும் காலுல செருப்புன்னு
ஒன்னை மாட்டுனதே இல்லை. என்ன ஏதுன்னு விசாரிச்சா, “அந்தக் கழுதை அப்ப இருந்தே கால்ல
சேர்றதுல்ல, போடுறதுல்ல, வச்சிக்குறதுல்ல” என சொல்லி சிரிக்கிறார். தாத்தாவுக்கு அந்த
காலத்துல மாடு பிடிக்குறதுதான் சோலியாம். “வடக்க இருக்கு பாரு திருப்பூரு. அங்க வரைக்கும்
மாடு பிடிக்க போயிருக்கேன். பால் மாடுதான் அப்ப ரொம்ப கிராக்கி(விலை அதிகம்).
திருப்பூருல மாடு பிடிச்சா அங்க
இருந்து ஊரு வரைக்கும் ஒத்த ஆளா பத்திக்கிட்டு செருப்பில்லாம நடந்தே வந்துடுவேன். எம்புட்டு
தொலவு (தொலைவு) நடந்திருக்கோமுன்னு இப்போ நினைச்சா கூட மலைப்பால்லாம் இல்லை. அப்ப எங்க
போனாலும் நடதான. அந்த காலத்துல மாடு பிடிச்சு ஒட்டிக்கிட்டு வரும்போது திருடனுங்க தொல்லை
இருக்கும்.
அதுக்கு என்ன பண்ணுவேன் தெரியுமா.
கையில நூறு இருநூறு இருந்தா அதை மடிச்சு மாட்டு கழுத்துல இருக்குற மணியோட பிணைஞ்சு
விட்டுடுவேன். திருட்டுப் பயக என் வேட்டியில மடிச்சு வச்சிருப்பேன்னு தேடிப்பார்த்துட்டு
இல்லைன்னதும் ஏமாந்து போயி விட்டுடுவாங்க” என சிரிக்கிறார் ஆண்டித் தாத்தா.
“நீ ஊருக்கு போகணுமாய்யா. அஞ்சரை
மணி பஸ்ஸூ சத்தம் கேக்குது பாரு. கடைசி பஸ்ஸூ. சீக்கிரமா பார்த்து போயிட்டு வாய்யா”
என கி.மீனாட்சி பட்டி ஊரே வழியனுப்புவது போல ஆண்டித்தாத்தா நம்மை வழியனுப்புகிறார்.
அவரோடு சேர்ந்த வழியனுப்புவது போல மாலை மஞ்சள் வெயிலில் ஆடும் ஆவாரம் பூக்களும் நம்மைப்
பார்த்து கை காட்டுகின்றன.