சனி, 26 மார்ச், 2011

"இப்படியொரு அப்பன், ஆத்தாள பாத்திருக்கியா நைனா?"


               ‘‘நைனா, சேத்துப்பட்டு ரயில்வே ஸ்டேஷனாண்டயா போற.. இத்த கொஞ்சம் தூக்கிக்கினு வர்றியா..’’

             நடைபாதயின் ஓரமாக முட்டியப் பிடித்தபடி உட்கார்ந்திருந்த அந்த மூதாட்டி கேட்டார். அருகிலேயே ஒரு சிறிய சாக்குப் பை இருந்தது. ஒரு வாட்டர் கேனும், இரண்டு துணிகளும் அந்தப் பையை அடைத்திருந்தன. நான் பையைத் தூக்கிக்கொண்டேன். அந்த பாட்டி மெல்ல எழுந்து நடக்கத் தொடங்கினார்.

           ‘‘முட்டி வலி நைனா.. அதான் இத்த தூக்கிக்கினு நடக்க முடியல...’’
உக்கிரம் ஏறத் தொடங்கியிருந்த வெயிலில் கூன் போட்டு சிரமப்பட்டு நடந்த அவருக்கு வயது எழுபது இருக்கலாம். மெலிந்து சுருக்க ரேகைகள் படர்ந்த உடல். கண் தெரியாத அளவுக்கு வெளுத்துப் போயிருந்த சோடா புட்டி கண்ணாடி. சாயம் போன சேலை.

              ‘‘ஏன் பாட்டி இப்படி தனியா வந்திருக்கீங்க? யாரையாவது துணைக்கு கூட்டிட்டு வந்திருக்கலாம்ல..’’ என்றேன் நான்.

            ‘‘எனக்கு யாரு நைனா இருக்கா.? நேத்து வரைக்கும் வீடுன்னு ஒண்ணு இருந்துச்சு. இன்னயில இருந்து அதுவும் கெடையாது. அதான் கிளம்பிட்டேன் நைனா...’’

                எனக்கு தூக்கி வாரிப்போட்டது. இந்த வயதில் வீட்டை விட்டு வெளியேறும் அளவுக்கு என்ன விரக்தி? ஆதரவுக்கு மகன், கணவர் யாருமே கிடையாதா? தயங்கியபடியே கேட்டேன்..

‘‘உங்க வீட்டுக்காரரு இல்லயா பாட்டி..?

               ‘‘வூட்டுக்காரனா.. அந்த பேமானி இருக்கானா, செத்தானான்னே தெரியாது நைனா. அது ஆச்சு... அம்பது, அம்பத்தஞ்சு வருஷம்! எங்க அப்பன் ஆத்தாளுக்கு நாங்க அஞ்சு பேரு. நாலு பொட்டைங்க. நான்தான் மூத்தவ. பொட்டச்சிக்கு என்ன படிப்புனு எட்டாங்கிளாசுக்கு மேல இஸ்கூலுக்கு அனுப்பல நைனா. வூட்டாண்டயே தையலு தச்சிக்குனு இருந்தேன். அப்போதான் எனக்குக் கண்ணாலம் கட்டி வைக்கப் போறதா சொன்னாங்க. அப்போ பதினாலு வயசுதான் எனக்கு. வூட்டுக்காரன் மூஞ்சக்கூட காட்டல. ஒரு நாளு திடீர்னு கோயிலாண்ட இஸ்துகினு போயி தாலி கட்டிவுட்டாங்க. அப்போதான் அந்த ஆளு மூஞ்சியப் பார்த்தேன்..’’

                    நடக்க முடியாமல் அவருக்கு மூச்சு வாங்கியது. ‘‘நைனா.. செத்த நேரம் நெழல்ல நின்னுக்கினு அப்பால நடக்கலாமா?’’ என்றவர், ஆதரவாக என் கையைப் பிடித்துக்கொண்டே தொடர்ந்தார்...

                   ‘‘கண்ணாலம் முடிஞ்சி மூணு நாளு குடும்பம் நடத்திட்டு அந்த பேமானி என்ன எங்க வூட்டாண்ட கொண்டுவந்து வுட்டுட்டு போனான் நைனா. அவ்வளவுதான்... திரும்பியே வரல. அப்பால தான் தெரியுது.. அந்தாளுக்கு ஏதோ தோஷமாம். ஒரு பொண்ண கண்ணாலம் கட்டி, கன்னி கழிச்சுவுட்டா தோஷம் தீருமுன்னு ஜோசியக்காரன் சொன்னானாம். அதுக்கோசரம் என்னக் கட்டிக்கினு மூணு நாளு பொண்டாட்டியா வச்சிருந்திருக்கான். இதெல்லாம் எங்க அப்பன் ஆத்தாளுக்கு தெரிஞ்சுதான் என்னக் கட்டிக் கொடுத்திருக்காங்க. இப்படியொரு அப்பன் ஆத்தாள எங்காச்சும் பாத்திருக்கியா நைனா?’’

                      நான் அதிர்ச்சியில் உறைந்து போய் நின்றேன். அவர் நாக்கு வறண்டு போனதால் சாக்குப் பையில்  இருந்த வாட்டர் கேனை எடுத்து கொஞ்சம் தண்ணீர் குடித்துக் கொண்டார். அப்போதுதான் எனக்கு உறைத்தது, காலையில் சாப்பிட்டாரோ இல்லையோ...

  ‘‘பாட்டி, காலையில சாப்பிட்டீங்களா?’’

                      ‘‘கையில காசில்ல நைனா.. ஏதாச்சும் வேணும்னா வூட்டாண்ட வான்னு இந்தத் தெருவுல இருக்கிற ஒரு அம்மா சொல்லியிருந் துச்சு. அவங்களத் தேடித்தான் கோடம்பாக்கத்ல இருந்து வந்தேன். வூட்டுக்குள்ள இருந்க்துகினே ஆளு இல்லனு வேலக்காரிய வுட்டு சொல்லச் சொல்லிடுச்சு. ம்ம்..’’

‘‘சரி வாங்க.. ஏதாவது ஹோட்டல்ல சாப்பிடலாம்..’’
                   
                  ‘‘ஐயயோ, ஹோட்டலுக்கு வேணாம் நைனா.. முன்ன மாதிரி எட்டணா, ஒத்த ரூபாய்க்கு இட்லி கொடுப்பான்னு பார்க்குறியா.. இப்பல்லாம் ஒத்த இட்லி நாலு ரூபா, அஞ்சு ரூபா சொல்றான் நைனா.. எனக்கு டீ வாங்கிக்குடு நைனா.. அது போதும்’’.

                 ‘‘வெறும் வயித்துல எதுக்கு டீ சாப்பிடுறீங்க.இளநீராவது குடிங்க..’’ என்று அருகிலிருந்த இளநீர் கடைக்காரரிடம் ஒரு இளநீர் சீவச் சொன்னேன். பாட்டி வேகமாக கேட்டார்..

‘‘இந்தாப்பா இளநீ எவ்வளவு?’’

‘‘இருபத்து அஞ்சு ரூபா’’ என்றார் இளநீர்க்காரர்.

          ‘‘அம்புட்டு காசு போட்டு நீ வாங்கித் தர வேண்டாம் நைனா. நான் எப்படியும் நடந்துருவேன். வா.. போலாம்...’’ என்றார் என் கையைப் பிடித்து இழுத்தபடியே.
அவரை சமாதானப்படுத்தி இளநீர் சாப்பிட வைப்பதற்குள் போதும் போதும் என்றானது. ரயில்வே ஸ்டேஷனுக்கு இன்னும் கொஞ்ச தூரம் இருந்தது.பாட்டியால் நடக்க முடியாது என்று தோன்றியது. அருகிலிருந்த ஆட்டோக்காரரிடம் பேசினேன். ‘ஒன் வே’ என்பதால் முப்பது ரூபாய் ஆகும்’ என்றார். மறுபடியும் பதறிவிட்டார் பாட்டி.

             ‘‘நைனா.. மவராசா.. முப்பது ரூபாய்க்கு பத்து வேள டீ குடிச்சு வயித்த ரொப்பலாம் நைனா.. உனக்கு கஷ்டமா இருந்தா நானே போயிக்கிறேன் நைனா.. அதுக்கோசரம் காசக் கரியாக்காத..’’

             ஆட்டோக்காரர் இருபது ரூபாய்க்கு இறங்கி வந்தும் பாட்டி வண்டியில் ஏற விடாப்பிடியாய் மறுத்து விட்டார். வேறு வழியின்றி இருவரும் நடக்கத் தொடங்கினோம்.

                ‘‘என் கண்ணாலம் முடிஞ்ச கொஞ்ச வருஷத்திலயே அப்பனும், ஆத்தாளும் செத்துப் போனாங்க நைனா. அப்புறம் நான் ஒண்டிக்கட்ட தான். தம்பி ஒருத்தன் இருக்கான். என்ன பண்றான் எங்க இருக்கான்னு தெரியாது. ஆனா, நான் தையல் தச்சி காசு சேர்த்து வச்சிருந்தா மோப்பம் பிடிச்சி வந்து அடிச்சுப் பிடுங்கிட்டுப் போயிடுவான். திருவள்ளூர் ரயில்வே ஸ்டேஷன்ல ஒரு தபா ரயில் ஏறக்கூட காசில்லாம புடுங்கிட்டு வுட்டான். அப்புறம் உன்ன மாதிரி ஒரு மவராசன்தான் டிக்கெட் எடுத்து ரயில் ஏத்தி விட்டுச்சு. நேத்து வரைக்கும் கோடம்பாக்கத்திலதான் இருந்தேன் நைனா. தொள்ளாயிரம் ரூபா வாடக. வரவர கண்ணு சரியா தெரிய மாட்டேங்குது. முன்ன மாதிரி தைக்க முடியல. ஆனாலும், வயித்தக் காயப்போட்டாவது வாடகயக் குடுத்துருவேன் நைனா. இப்போ பாரு. அந்த ரூம ரெண்டாயிரம், மூவாயிரத்துக்கு வாடகைக்கு வுடப்போறதா சொல்லி வீட்டுக்காரி வெளியேத்திட்டா.வாடகயில நூறு, இருநூறு கூட்டிக் கொடுக்கிறேன்னு சொல்லிப் பார்த்தேன். கேட்கல. அதான் வெளியேறிட்டேன். நம்ம சொத்தே இந்த ரெண்டு சீலயும் ரெண்டு பாவாடையும்தான். ஏதாவது ஒரு இடம் பிடிச்சு ஒண்டிக்க வேண்டியதுதான் நைனா.’’

              அதிர்ச்சியிலிருந்து மீளாத நிலையிலேயே அவருக்கு டிக்கெட் எடுத்தேன். என் பையில் இருந்த நூறு ரூபாய் நோட்டை அவரிடம் வலுக்கட்டாயமாக திணித்தேன். ‘வேணாம் நைனா’ என்றே சொல்லிக் கொண்டிருந்தார். எனக்குள் சில கேள்விகள் சுழற்றியடித்தன.


                 ஒவ்வொரு முறை காலடி எடுத்து வைக்கும் போதும் வாழ்க்கை முள்ளாய் தைத்துக் கிழித்தாலும்.. நகரத்தின் இரக்கமின்மைக்கு ஈடுகொடுக்க முடியாமல் பந்தாடி வீசியெறியப்பட்டாலும்.. அடுத்தவரின் பணத்துக்காக கவலைப்படவும், சூன்யமாகிவிட்ட வாழ்வை எந்த விதமான எதிர்பார்ப்புமின்றி அணுகவும் இந்தப் பாட்டிக்குக் கற்றுக்கொடுத்தது எது?

             மின்சார ரயில் வந்தது. பாட்டி ஏறினார். ரயில் நகரத் தொடங்கியது. ‘‘நைனா.. உன் போன் நம்பர் ஏதாச்சும்...’’ விரையும் மின்சார ரயிலின் சத்தத்தில் தேய்ந்து அழிந்தது பாட்டியின் குரல். சட்டென உறைத்தது எனக்கு, செல்போன் எண்ணைக் கொடுத்திருந்தாலாவது பிற்பாடு எப்போதாவது அந்தப் பாட்டி பேசியிருப்பார்.. ஏதேனும் ஒரு முதியோர் இல்லத்தில் சேரவாவது உதவியிருக்கலாமே என்று!

           இன்று என்னிடம் முதியோர் இல்லங்களின் முகவரிகள் இருக்கின்றன. ஆனால், கோடம்பாக்கம் வீதிகளில் தேடி அலைந்தும் அந்த மூதாட்டிதான் இதுவரை கிடைக்கவில்லை.