என்ன ரொம்ப தூரமா?
அப்படியெல்லாம் இல்ல. சும்மா பெட்டிக்கடை
வரைக்கும்தான் மூக்குப்பொடி காலியாப் போச்சு
அடிக்குற வெயிலுல இதுக்கெல்லாம் ஒரு எட்டு நடக்கனுமா…
சின்னவன்கிட்டே காச கொடுத்துவிட வேண்டியதுதானே..
பிள்ளைங்களா அதுங்க… ஒன்னு பத்தாதுன்னு மூனு பெத்து
என்ன பிரயோஜனம்… எச்சி துப்புன இடத்துக்கு மண்ணு அள்ளிப் போடாதுங்க. சோம்பேறிங்க…
மூனுல ஒன்னு கூட சொன்ன பேச்சை கேட்கறதில்லையா…
எங்க கேட்குது… இதுங்களுக்கு பதிலா ஒரு அம்மிக்கல்ல
பெத்திருந்தா கூட பிரயோஜனமாக இருந்திருக்கும்…
என்ன அப்படி சொல்லிட்டீங்க… அம்மிக்கல்ல பெத்திருந்தா
அதை நல்ல காசுக்கு விக்க முடியாதுல்ல…
ஒன்னுக்கும் ஆகாத பிள்ளைய மட்டும் லட்சம் ரூபாய்க்கு
விக்க முடியுதாக்கும்…
லட்சத்துக்கு என்ன அதுக்கு மேலேயே வித்துத்தாரேன்.
கமிஷன் என்ன கொடுப்பீரு…
மண்ட காயிற வெயில்ல மனுஷன் புலம்புனா இதமா நாலு
வார்த்த சொல்லுவீரா… இப்பவும் குசும்பு பண்றீரே…
குசும்பு இல்லைய்யா… நெசமாதேன் சொல்றேன்… சீனால
டுயான்னு ஒரு பய பெத்த பிள்ளைய வித்துட்டான் தெரியுமா…
இது என்ன புதுக்கதையா இருக்கு… பச்சக்குழந்தையையா
வித்துட்டான்..
ஆமாங்கறேன்… அந்த பொம்பளப் பிள்ள பிறந்து 18 நாளுதான்
ஆகியிருக்கு… இந்த பயலுக்கு 18 வயசு… குழந்தை பெத்த அந்த பொண்ணுக்கு 18 வயசு கூட
ஆகலை..
அட சண்டாளப் பயலே… என்னத்துக்கு வித்தானாம்…
வளர்க்க முடியலன்னு வித்துருக்கான்… நல்ல காசுக்கு
விலைபோனா ஐபோன் 6, மோட்டார் சைக்கிளு வாங்கலாமுன்னு ஆசை…
பிள்ளைய வித்து செல்போனு வாங்குற அளவுக்கு கலி
முத்திப்போச்சா… பிள்ளைய பெத்த புண்ணியவதியும் இதுக்கு துணையா?
அதுகிட்ட எங்க கேட்டான். இவனா கம்பியூட்டர் மூலமா
வித்திருக்கான்…
கம்யூட்டர்லயா. நான் கூட சந்தைக்கு போயி வித்தான்னு
நினைச்சேன்
சந்தைக்கு போயி பிள்ளைய வித்தா நாலு பேரு சும்மா
விடுவாங்களா… இப்போ நீரே இருக்கீரு… பார்த்துக்கிட்டு சும்மா இருப்பீரா…
அதெப்படி… பொடனியில நாலு போடுபோட்டு போலீஸ்ல
பிடிச்சுக்கொடுத்திருக்க மாட்டேன்…
ஆம்… அதனாலதான் இந்த பேஸ்புக்கு, வாட்ஸ்அப்புன்னு
எந்த நேரமும் செல்போன்ல நோண்டுறாகளே… அதுமாதிரி சீனால கியூ,கியூன்ன ஒன்னு
இருக்காம்…
பேரு வாயில நுழையலையே…
கடிச்சு மெல்லவா போரீரு… கதைய கேளும்… அந்த இதுல
பிள்ளைய விக்குறேன்னு போட்டிருக்கான். நல்ல விலைக்கு ஒருத்தன் வந்ததும்
வித்துப்புட்டான்…
அய்யய்யோ… வாங்குனவனாவது நல்ல பயலா.. இல்ல, பிள்ளைய
ஏதும் செஞ்சிட்டானா…
வாங்குனவனோட தங்கச்சிக்கு குழந்தை இல்லையாம். அதுக்கு
கொடுக்கத்தான் வாங்கியிருக்கான்
கதை அப்படிப்போகுதோ… ஆனாலும் ஊரு, உலகத்துக்கு விஷயம்
தெரிஞ்சிருக்குமே…
போலீசுக்கே தெரிஞ்சு போச்சு… பிள்ள எப்படி வந்ததுன்னு
விசாரிக்க ஆரம்பிச்சப்போ அது விலைக்கு வாங்குனதுங்கறத கண்டுபிடிச்சிட்டாங்க…
அதானே போலீசு மூக்குன்னா சும்மாவா…
ஆமா.. மூக்குப்பொடி போடாத மூக்குல்ல…
திரும்பவும் என்ன சொறியாதீரும்… மேல சொல்லும்…
போலீசு மோப்பம் பிடிச்சுட்டாங்கன்ன உடனே அப்பன்காரனே
ஸ்டேஷனுக்கு வந்துட்டான். என் புள்ளைய நான்தேன் வித்தேன்னு ஒத்துக்கிட்டான்
என்ன கொடுத்தாக…
மச்சி வீட்டுல உட்கார வச்சி வடை, பாயாசத்தோட விருந்து
கொடுத்தாகலாம்…
அட என்னய்யா நீரு… என்ன தண்டனை கொடுத்தாகன்ன கேட்க
வந்தா…
அப்படி வௌக்கமா கேளும்…
என்னத்த வௌக்கமாரா கேட்க… அந்த பயலை ஜெயிலுக்குள்ள
போட்டாகலா இல்லையா…
அவனுக்கு 3 வருஷம் ஜெயிலுன்னு தீர்ப்பு
சொல்லியிருக்காங்க..
இப்போ அந்த பச்சப்புள்ள…
அதுக்கு ஒரு வயசு ஆகிடுச்சு… அதை யாருகிட்ட விடன்னு
கோர்ட்டு இன்னும் முடிவு எடுக்கல… அதனால விலைக்கு வாங்குனா அந்த அம்மாவே குழந்தைய
நல்லபடியா பார்த்துக்கிடுதான்…
நல்லது… எல்லாம் சரி… கடைசி வரைக்கும் அந்த பிள்ளைய
எம்புட்டு காசுக்கு வித்தான்னு நீரு சொல்லவே இல்லையே…
தெரிஞ்சு என்ன பண்ணப்போறீரு…
அட… கதைய முழுசா தெரிஞ்சுக்காலாமேன்னுதான்யா
கேட்குறேன்…
நம்ம ஊரு மதிப்புல 2 லட்சத்து 25 ஆயிரம் ரூபாயாம்…
ஓஹோ… நல்ல விலைதேன்… ம்…..
என்ன யோசனை…
இல்ல பிறந்து 18 நாள் ஆன பிள்ளையே அம்புட்டு விலை
போச்சுன்னா… நம்ம வீட்டு கடைக்குட்டி எம்புட்டு போகுமுன்னு யோசிக்கிறேன்…
நீரு வீட்டுக்கு போயி அவனை வரச்சொல்லும்…
எதுக்கு?
இன்னொரு நாட்டுல அப்பன வித்த பிள்ளை கதை ஒன்னு
இருக்கு… அதை அவன்கிட்ட சொல்லத்தான்…
அய்யய்யோ… சொல்லீராதிருமய்யா… ஒத்த கொய்யப்பழத்துக்கு
என்ன வித்துடுவான்…
0 comments:
கருத்துரையிடுக