திங்கள், 8 ஆகஸ்ட், 2016

எறும்பா விவசாயம் செய்யணும்....


என்ன ரெண்டு நாளா இந்தப் பக்கம் தலை தெரியல…

ஆமா… ஆமா.. ஊருல இருந்து பேரன் வந்திருக்கான்ல… அங்கிட்டு இங்கிட்டு நகர முடியலை…

யாரு மூத்தவன் பிள்ளையா…

இல்ல பம்பாயில கட்டிக்கொடுத்தோமுல்ல நடுவுல உள்ளவா… அவ பையன்…

அவன்தேன் ஊரு பக்கம் தலை வச்சி கூட படுக்க மாட்டாமுன்னு சொல்வீரய்யா…

அந்த கழுததேன் இப்போ தாத்தனப் பாக்கணுமுன்னு ஏரோ பிளேன் ஏறி வந்திருக்கு…

என்ன தாத்தன் மேல திடீர் பாசம்…

அந்த கதைய கேளும்… பயலுக்கு கம்யூட்டர் வேலை வெறுத்துப் போச்சாம்… மாசம் நாலு லட்சம் சம்பளம் வாங்குனாலும் நிம்மதி இல்லையாம்… எங்கேயோ இயற்கை விவசாயம் பத்தி படிச்சிருக்கான்…

ஓ… அங்க வருதா கத….

ஆமா… ஆமா… கப்புன்னு புடிச்சிருவீரே…. கற்பூர புத்தியா உமக்கு…

ம்…. தாத்தன் கிட்ட போயி இயற்கை விவசாயம் கத்துக்கோடான்னு உம்ம பொண்ணு அனுப்பி வச்சிடுச்சு…

ஆமா… ஆமா… எம்புட்டு சந்தோஷமா இருக்கு தெரியுமா… பய எறும்பு மாதிரி சுறுசுறுப்பா இருக்கான்…

சுறுசுறுப்பு சரிதேன் எறும்பு மாதிரி விவசாயம் பார்த்துடுவானா…
என்னய்யா உளறுறீரு…

நான் சரியாத்தேன் கேக்கேன்… உலகத்துல முத விவசாயி எறும்புதான…

இது என்னய்யா புதுக் கதை… எறும்பு என்னக்கியா விவசாயம் பார்க்க ஆரம்பிச்சுச்சு…

6 கோடி வருஷத்துக்கு முன்னால…

ஆத்தாடி… எங்க பாட்டன்இ பூட்டன் காலத்துக்கெல்லாம் முன்னாடி இருக்கும்போல…

பாட்டனாவது, பூட்டனாவது… மனுஷன் விவசாயம் பார்க்க ஆரம்பிச்சதே 10 ஆயிரம் வருஷத்துக்கு முன்னாடிதேன்.. ஆனா தென் அமெரிக்காவுல இருக்குற ஒரு வகையான எறும்பு ஆறு கோடி வருஷத்துக்கு முன்னாடியே விவசாயம் பார்க்க ஆரம்பிச்சுடுச்சுன்னு இப்போ விஞ்ஞானிங்க கண்டுபிடிச்சிருக்காங்க…

அது சரி… அதுங்க எப்படி நாத்து நட்டிருக்கும்… கள பறிச்சிருக்கும்…

விட்டா எம்புட்டு கூலி வாங்குச்சுன்னு கூட கேப்பீரு… அதுங்க மரக்கட்டை, குப்பையில வளர்ற பூஞ்சைன்னு சொல்லுற ஒரு வகையான காளான புத்துக்குள்ள வளர்திருக்குங்க…


செலவில்லாத விவசாயம் பார்த்ததுன்னு சொல்லும்…

ஆமாம்… செலவில்லாத விவசாயம் பார்த்து மிச்சம் பிடிச்சி உம்ம மாதிரி ஸ்டேட் பேங்குல பணத்தை போட்டு வச்சிருந்ததுங்க…

குசும்ப ஆரம்பிச்சுட்டீரா… சரி காளான விளைய வக்கிறதுல எறும்புக்கு என்ன லாபம்…

லாபம், செலவு, வருமானமெல்லாம் நம்மள மாதிரி மனுஷப் பய கண்டுபிடிச்சதுதான்யா… அதுங்க சாப்பாட்டுக்காக விவசாயம் பார்த்ததுங்க… அந்த காளான்ல அம்புட்டு சத்து இருந்துச்சாம்… நோய் தாக்காதாம்... அதனால லட்சக்கணக்குல வம்சம் விருத்தி ஆச்சாம்...

ஓகோ… இப்பவும் விவசாயம் பார்க்குதா…

ஆமாம்… இலைய வாயாலேயே கட் பண்ணி தூக்கிட்டுப் போற எறும்புகள பார்த்திருக்கீரா…

ஆமாய்யா… ரஸ்தாலி எறும்பு…

வாயில நுழையுற பேரா இருக்கணுமுன்னு வாழப்பழ பேர வச்சிக்கிட்டீரா… இருக்கட்டும்… அதுங்க எதுக்கு இலைய வெட்டிக் கொண்டு போகுது தெரியுமா?

விருந்தாளிங்களுக்கு இலை போட்டு சாப்பாடு போடுறதுக்கா இருக்கும்… ஏன்னா விவசாயம் பார்க்குற அளவுக்கு அறிவு இருக்குன்னான இப்படி கூட யோசிக்குமுல்ல…

உம்ம மூளை காத்துட்டுக்கு போகாது.. அந்த இலைங்களதான் புத்துக்குள்ள போட்டு அதுல காளான் வளர்த்து புழுவா இருக்குற குட்டி எறும்புகளுக்கு சாப்பாடு போடுதுங்க…

அடேங்கப்பா… அப்போ என் பேரன்கிட்ட எறும்பு மாதிரி விவசாயம் பாருடான்னு சொல்லனும்…

ஆமாம்… அப்புறம் இன்னொன்னும் சொல்லணும்…
என்ன?

 எல்லா நேரமும் எறும்பா இருந்தா தாத்தன் மாதிரி பேங்குல பணம் போட்டு வைக்க முடியாதுன்னு….


1 comments:

ssssaravanan சொன்னது…

புதுமையான தகவல் நன்றி பகிர்தலுக்கு