புதன், 9 மார்ச், 2016

கொய்யாக் காய்களுடன் கிடைத்த புன்னகை

         கிண்டி பேருந்து நிறுத்தம். நடக்கிறார்களா, ஓடுகிறார்களா என தெரியாத அளவுக்கு குறுக்கும் நெடுக்குமாய் விரைந்து கொண்டிருக்கிறார்கள் ஏராளமானோர். அவர்களில் ஒருவனாய் நடக்கும் அல்லது ஓடும் என்னை, நடைபாதையாரம் பெரிய அலுமினிய டப்பாவில் குவித்து வைக்கப்பட்டிருக்கும் கொய்யாக்காய்கள் சற்றே வேகம் குறைக்கின்றன. அது கோயம்பேடு சந்தைக் கொய்யா போல் இல்லை. கோயம்பேடு சந்தை கொய்யா வாடி வதங்கி, குடித்துவிட்டு போதையில் வீழ்ந்துகிடப்பவனைப் போல் இருக்கும். இது அப்படியல்ல. இப்போது பறித்ததைப் போல் இருக்கிறது. அதை விற்கும் அந்த அக்காவும் வியாபாரி போல் இல்லை. கிலோ என்ன விலை, கொய்யாக்காயின் சுவை என்ன என வாடிக்கையாளரைக் கவர அவர் கூவவில்லை. அதனாலேயே விலை கேட்கிறேன். கிலோ 40 ரூபாய் என்கிறார் தயக்கத்துடன். 

      ஒரு கிலோ போடுங்க என்றவாறு சுவையான கொய்யாக்காய்களை பொறுக்குகிறேன். அதில் நான் நன்கு தேர்ந்தவன். தராசில் சரியாக ஒரு கிலோ எடை நிற்பதை அறியாமல் நான் பொறுக்கிக்கொண்டிருக்கிறேன். மேலும் இரு காய்களோடு நிமிர்ந்தால் தராசு முள் நடுநிலைவாதியாய் நிற்கிறது. அவரது முகத்தைப் பார்த்தால் தயக்கம். நான் அந்த காய்களை அலுமினிய டப்பாவிலேயே போடுகிறேன். “ஐயையோ பரவாயில்ல.. எடுத்துக்போப்பா’ என்ற அவரது குரலில் சற்றும் தயக்கமில்லை. நான் வேண்டாம் என மறுத்தும் இரு காய்களை சேர்த்து நிறுத்து ஒரு கிலோவுக்கான பணத்தை மற்றும் புன்னகையுடன் பெற்றுக்கொள்கிறார் அந்த அக்கா. 

         கொய்யாக்காய்களுக்காக பாலித்தீன் பையை விரித்தவரை சட்டென்று நிறுத்தி ‘பை இருக்குக்கா’ என்கிறேன். மெல்லிய ஆச்சர்யத்துடன் என்னைப் பார்க்கிறார். நான் எனது தோள் பைக்குள் இருந்து ஒரு துணிப்பை எடுத்து விரிக்கிறேன். அவர் ஆச்சர்யம் கலையாமல் கொய்யாக்காய்களை அதில் நிரப்புகிறார். இருவரும் ஒரே சேர புன்னகைக்கிறோம். துணிப்பையை தோள் பைக்குள் வைத்தவடி இரு அடி நடந்திருப்பேன். ‘தம்பி’ என அவரது குரல் என்னை திரும்பிப் பார்க்க வைக்கிறது. திரும்பினால் புன்னைகையுடன் சைகையால் அழைக்கிறார். அருகில் செல்கிறேன். பையைத் திறந்துகாட்டச் சொல்கிறார். எனக்கு புரிகிறது. ‘ஏற்கனவே அதிகமாதான் போட்டிருக்கீங்க’ என சிரித்தபடியே மறுக்கிறேன். ‘அட பையை காட்டுப்பா என கட்டாயப்படுத்தி மேலும் இரு கொய்யாக்காய்களை அதில் போட்டுவிட்டு புன்னகைக்கிறார்.

              இரு நாள், மூன்று நாள் இடைவெளியில் ஒரு கிலோ கொய்யா தவறாமல் வாங்குகிறேன் நான். எப்போதும் எனக்க இரண்டு, மூன்று காய்கள் அதிகம்தான். சில நேரம் கூட்டத்தில் என் முகம் பார்க்காமல் இயந்திரத்தனமாய் அவர் எடைபோடும்போது நான் பையை விரித்து நீட்டியதும் தலைநிமிர்ந்து பார்த்து சிரித்துவிட்டு மேலும் இரு காய்களை எடுத்துப்போடுவார். சில நேரம் பிற வாடிக்கையாளர்கள் இதைக் கண்டு பொறாமைப்படக் கூடாது என்பதற்காக அந்த வாடிக்கையாளர்கள் நகரும் வரை என்னை ஒரு ஓரமாக நிற்கச் சொல்லிவிடுவார். அதற்குபின் இரண்டு, மூன்று காய்களை புன்னகையோடு கொடுப்பார்.

இப்போது அந்த அக்கா அங்கே இல்லை. அதன் அருகே வேறு ஒரு இடத்தில் வேறு ஒரு அக்கா வேறு ஒரு கொய்யாக் கூடை. ஆனால் ஆச்சர்யம் என்னவென்றால் மேலே சொன்ன அத்தனையும் எந்த மாற்றமுமின்றி நடந்தேறுகிறது. புத்தகங்களைப் படிக்காத மனிதர்களிடம் நாம் படிக்க எவ்வளவோ இருக்கிறது.

1 comments:

Kalai சொன்னது…

அருமையான நடை தோழா. மனித இயல்புகளை உணர வைத்து அங்கு நான் இருப்பதை போன்ற ஒரு அனுபவத்தை விதைக்கிற எழுத்து. பதிர்ந்தமைக்கு நன்றி.