நான்கு புறமும் இருக்கும் விளைநிலத்தில் கொள்ளும், சோளமும், மொச்சையும், குச்சிக்கிழங்கும்(மரவள்ளிக்கிழங்கு) பச்சைத் தலை நீட்டி நிற்க, அதன் நடுவே திண்ணை வைத்த அழகான வீடு. சாணம் கரைத்து தெளித்த முற்றம். முற்றத்தை ஒட்டினாற்போல ராத்திரி சமையலுக்கு தயார் என விளைந்து நிற்கும் தக்காளி, மிளகாய் செடிகள். வீட்டின் மேலே ஏறி கூரையாய் படுத்துக்கொண்ட அவரை, சுரக்காய், பூசணிக் கொடிகள். கொல்லைப்புறத்தில் சோளத் தட்டையை அசைபோட்டபடி நிற்கும் பசு, காளை மாடுகள். வீடுகளை சுற்றிச் சுற்றி குஞ்சுகளுக்கு இரை பொறுக்கித் தரும் நாட்டுக்கோழிகள். இதுதான் எலவம்பட்டி. சேலத்தில் இருந்து 26 கிலோ மீட்டர் தூரத்தில் இருக்கின்ற விவசாய கிராமம். வானம் பொய்த்தாலும் மண்ணை விட்டு போகாமல் இருக்கும் விவசாயிகள் வாழும் ஊர்.
சேலத்தில் இறங்கி எலவம்பட்டிக்கு எந்த பேருந்து போகும் என்று மட்டும் கேட்டுவிடக் கூடாது. சேலத்துக்கே புதுசா என்பதுபோல நம்மை ஏற இறங்க பார்ப்பார்கள்.
ஏனென்றால் இந்த 21ஆம் நூற்றாண்டிலும் எலவம்பட்டிக்கு
பேருந்து வசதி கிடையாது. சேலத்தில் இருந்து 23 கிலோ மீட்டர் தூரத்தில் இருக்கும் ஆயா மரம் பேருந்து நிறுத்தத்தில் இறங்கி அதற்கு மேல் நடராஜாவாகத்தான்
போக வேண்டும்.
ஆயாமரத்தில் இறங்கினால் பேருந்துகள் செல்லாததாலேயோ என்னவோ பளிச்சென இருக்கிறது எலவம்பட்டிக்கு
போகும் சாலை. நம்முடன் பேருந்தில் வந்திறங்கிய திருப்பூரைச் சேர்ந்த சுந்தரம் என்ற பெரியவரும் எலவம்பட்டிக்கு
நடையைக் கட்டினார்.
“ஒரு துஷ்டின்னு கேள்விப்பட்டு
வந்தேன் தம்பி. இந்த ஊருக்கு அந்த காலத்துல இருந்து பஸ்ஸு வசதி கிடையாது. ஒரு ஆறு வருசத்துக்கு முன்னாடி திடீர்னு பஸ்ஸு விட்டாங்க. அப்புறம் ஏன்னே தெரியாம நிறுத்திட்டாங்க. இந்த ஊருக்காரங்களும்
பஸ்ஸ நம்பி பிழைக்குறவங்க இல்லை. அதனால அதை பெருசா எடுத்துக்கல” என சொல்லிவிட்டு துக்க வீடு இருக்கும் தெருவில் நடக்கத் தொடங்கினார்.
சிட்டுக்குருவிகள் பறக்கும் மற்றொரு தெருவில் நாம் நடந்தோம். ஊரைப் பற்றி விவரம் கேட்டால் எல்லோருமே கைகாட்டுவது பெரியவர் பெரியசாமியின்
வீட்டைத்தான். வாசலின் இருபுறமும் சுமார் 30 பேர் கால் நீட்டி உறங்கும் அளவுக்கு பிரம்மாண்ட திண்ணையுடன் இருக்கிறது பெரியசாமியின் அந்தக்கால வீடு.
“எங்க ஊருக்கு ஏன் எலவம்பட்டின்னு பேரு வந்துச்சு தெரிமா கண்ணு? இப்போ புளியமரம் இருக்கே அந்த இடத்துல அப்போ எலவ(ம் பஞ்சு) மரம் இருந்துச்சு. மரமுன்னா சாதாரண மரமில்ல கண்ணு. 17 ஆளுங்க சேர்ந்து கட்டிப்பிடிச்சாதான் அதை முழுசா கட்டிப்பிடிக்க முடியும். அம்மாம் பெரிய மரம். அது நிழலுல ஆயிரம் பேரு உக்காரலாம். அந்த காலத்துல அங்க தான் நாடு (பஞ்சாயத்து) கூடும். அந்த மரம் சாய்ஞ்சப்போ ஊரே கூடி அழுதுச்சு கண்ணு. அந்த மரத்தாலதான் இந்த ஊரு எலவம்பட்டினு பேர் வாங்குச்சு” என்றபடியே பழைய நினைவுகளில் மூழ்குகிறார் பெரியசாமி.
சேலத்தில் இருந்து எலவம்பட்டி வரும் வழியில் 6 கிலோ மீட்டருக்கு முன்பே இருக்கும் தாரமங்கலத்தில் உள்ள கைலாசநாதர் கோயிலில் தேர் இழுக்கும் விழாவை காலங்காலமாக தொடங்கிவைப்பது
இவரது வம்சம்தான். அதற்காக பெரியசாமியை கோயிலுக்கு அழைத்துச் செல்லும் ஒரு வித்தியாசமான வழக்கம் இன்றும் நடைமுறையில் உள்ளது.
தேர் திருவிழா நடக்கும் நாளில் பெரியசாமியின்
வீட்டில் காளை மாடு ஒன்றை நிறுத்துவார்கள்.
அதில் பெரியசாமி ஏறிக்கொள்ள மேள, தாளத்துடன் தாரமங்கலத்திற்கு அழைத்துச் செல்வார்கள். பெரியசாமிக்கு இப்போது வயது 68. ஆனாலும் ஒவ்வொரு ஆண்டும் காளை மாடு மீதேரி கம்பீரமாக சென்று வடம் பிடித்து தேரோட்டத்தை தொடங்கிவைக்கிறார்.
அறுவடை முடிந்த காட்டில் அவரைக் கொடிகள் பச்சை வற்றிய பழுத்த இலைகளுடன் நிற்க, யார் காடு என்று பார்க்காமல் எல்லோர் வீட்டு மாடும் அதில் மேய்கிறது. மாடுகள் சில நாள் மேயும் வரை அந்தக் கொடிகளை அப்படியே விட்டுவைத்திருப்பார்களாம். மாடுகள் நன்றாக மேய்ந்தபின்தான் எஞ்சியதை அகற்றுவார்களாம்.
அவரைக் காட்டை கடந்தால் மாடு பூட்டி, ஏர் பிடித்து உழுது கொண்டிருக்கிறார் சண்முகம் அண்ணாச்சி. பிராய்லர் கோழி ருசி எப்படி பிடிக்கவில்லையோ அதேபோல சண்முகம் அண்ணாச்சிக்கு டிராக்டர் உழவும் பிடிக்கவில்லை.
“பத்து வயசுல பிடிச்ச கலப்ப கண்ணு. இன்ன வரைக்கும் ஓட்டுறேன். என்னதான் டிராக்டர் உழவு வேகமா முடிஞ்சாலும் கலப்பையில உழுற மாதிரி வராது. டிராக்டர் உழவுல மேலாக்க ஓட்டிருவாங்க. ஆழமாப் போவாது. கலப்பதான் மண்ணுக்குள்ள ஆழமா போகும். காசும் அதிகமா கிடையாது. அப்படியே டிராக்டர் வச்சு உழுதாலும் குச்சிக்கிழங்கு, பருத்தி நடுறதுக்கு முன்னாடி கால் ஓட்டுறதுக்கு (உழவில் ஒரு வகை) கலப்பை உழவு கண்டிப்பா வேணும். அதனால மத்த காட்டுக்காரங்களுக்கும் உழுது தருவேன்” என பெருமிதத்தோடு
சொல்கிறார் சண்முகம்.
இந்த வருடம் நல்ல மழை பெய்ததால் சோளம் போட்டு அதன் தட்டைகளை வைத்து மிகப்பெரிய குத்தேரி (வைக்கோல் போர்) அமைத்திருக்கிறார் சண்முகம் அண்ணாச்சி. இது பசு, காளைகளுக்கான உணவு சேமிப்பு. காடு, கரை பச்சையாய் இருந்தால் மாடும், ஆடும் மேய்ந்து வரும். மழை ஏமாற்றி நிலம் காய்ந்து கிடந்தால் மாடுகளின் வயிற்றுப் பசிக்கு எங்கே போவது? அதனால்தான் எலவம்பட்டியில் மாடுகள் வைத்துள்ள வீடுகள் தோறும் ஒரு பேருந்தைப் போல நிற்கிறது குத்தேரி. மழையோ, வெயிலோ ஒரு வருடத்திற்கு இதை ஒன்றும் செய்ய முடியாது.
சண்முகம் அண்ணாச்சியின் வீட்டில் மட்டுமல்ல மாடுகள் வைத்திருக்கும்
பலரது வீட்டில், அவை தண்ணீர் குடிக்க ஒரே கல்லால் ஆன மாக்கல் தொட்டி ஒன்று இருக்கிறது. அதிலும் ஒரு வீட்டில் நாம் பார்த்த மாக்கல் தொட்டி ஒரு ஆள் உயரத்திற்கு குளியல் தொட்டியைப் போல இருந்தது.
எலவம்பட்டியிலேயே
மிகவும் வயதானவர் கந்தம்மாள். 8 பிள்ளைகள், 3 தலைமுறைகளை பார்த்த கந்தம்மாள் இன்றும் ஆரோக்கியமாக இருக்கிறார்.
“அந்த காலத்துல கம்பு, சாமை, ஆரியம் (கேழ்வரகு), உளுந்து, திணை, சோளம், தட்டாம் பயறு, பச்சைப் பயறு, கொள்ளு சாப்பிட்டதால இன்னும் நல்லா இருக்கேம்பா. இப்போ அதுல பாதியாவது பிள்ளைங்க சாப்புடுதா? இல்லையே. அப்போ என் புள்ளைகளுக்கு
உடம்புக்கு முடியலைன்னா ஒரு நாளும் ஆஸ்பத்திரிக்கு
போனதில்ல. எல்லாம் கை மருந்துதான். அதுல ரெண்டு, மூணு சொல்லுறேன் எழுதிக்கோ.
குழந்தைக்கு வயித்தால போச்சுன்னு வச்சுக்கோ, நல்ல பெருமி தழையை கசக்கி சாறு எடுக்கணும். அந்த சாறு கூட சீரகத்தை போட்டு வேக வச்சி அதுல சாறு எடுத்து, அதை பாலோட கலந்து குழந்தைக்கு கொடுத்தா வயித்தால நின்னு போகும். வேக வச்சதுல மிச்சம் இருக்குற சக்கைய தாய் சாப்பிடணும். தலைவலின்னா பீப் பெருமி தழைய கசக்கி வெள்ளை துணியால பத்து போடணும். அம்மால பச்சரிசி தழை தெரியுமா? குழந்தைங்களுக்கு சூடுன்னா அந்த தழைய அரைச்சு பால் எடுத்து சாப்பிட்டா குளிர்ச்சியாகிடும்.
இப்படி எல்லாத்துக்கும்
கை வைத்தியம் பார்த்த காலம்ப்பா அது” என்ற கந்தம்மாளுக்கு இன்று வரை மிக்ஸியில் அரைத்த மசாலாவும், கிரைண்டரில் அரைத்த இட்லி மாவும் சுத்தமாய் பிடிப்பதில்லை. அவர் வீட்டு வாசலில் எப்போதும் ஈரமாய் இருக்கும் ஆட்டு உரலும், அம்மியுமே அதற்கு சாட்சி.
கிராமம்னாலே நம்ம மனக் கண்ணுல வர்ற முதல் விஷயம் டீக்கடையும், அதுக்கு முன்னாடி கிடக்குற பெஞ்ச்ல பேப்பர் படிச்சுக்கிட்டு அரசியல் பேசுற பெரியவங்களும்தான். ஆனா இந்த கிராமத்துல டீக்கடையும் கிடையாது. தினசரி பத்திரிகையும் கிடையாது. அட ஏனுங்க டீக்கடை இல்லைன்னு கேட்டா சட்டுன்னு வந்து விழுது பதிலு.
எலவம்பட்டியில்
புள்ளையண்ணன் வீட்டில், சமையல் எரிவாயு சிலிண்டர் புக் செய்வது, அது எப்போது வரும் என காத்திருப்பது, மானியம் கிடைக்க ஆதாரை எங்கே பதிய வேண்டும் என அலைவது இப்படி எந்த வித கியாஸ் சிலிண்டர் பதற்றமும் கிடையாது. முன்னாள் கிராம நிர்வாக அலுவலரான இவர் வீட்டில் கடந்த 27 வருடங்களாக சாண எரிவாயுதான். வீட்டிற்கு பின் மாட்டுக் கொட்டகையையொட்டி
இதற்காக பிரத்யேகமாக இருக்கிறது சாண எரிவாயு கிடங்கு. ஒரு கூடை சாணத்தை கரைத்து இதில் ஊற்றினால் போதும் கொஞ்ச நேரத்தில் எரிவாயு உருவாகி மேற்புறம் உள்ள இரும்புக் கூரை மேலெழும்பத் தொடங்கும். அந்த எரிவாயுக் கிடங்கில் இருந்து நேராக வீட்டின் சமையலறைக்குள் செல்லும் குழாய் மூலம் எரிவாயு வர நாம் எப்போதும் தாராளமாக சமைக்கலாம். மின்வெட்டு என்றால் மின் விளக்கை எரியவிடவும் முடியும் என்பது கூடுதல் சிறப்பு
சின்னச்சாமி ஐயாவின் வீட்டிற்கு சென்றபோது முற்றத்தில் பொடிப்பொடி கற்களை போல செம்மண் வண்ணத்தில் ஏதோ வெயிலில் காய்ந்து கொண்டிருந்தது. அவரிடம் விசாரித்தபோது
அது துவரம் பருப்பு என்றார். இந்த ஊரு துவரம் பருப்பு செம்மண் வண்ணத்திலா இருக்கும் என நாம் அப்பாவியாய் கேட்க சிறித்தபடியே விளக்கம் கொடுத்ததார் சின்னச்சாமி ஐயா.
“இது துவரம்பருப்பை பக்குவப்படுத்துற
முறை தம்பி. விளைஞ்ச பருப்பை அப்படியே போட்டு வச்சா பூச்சி, புழு வச்சிடும். அதுக்காக எல்லாரும் பூச்சி மருந்து வைப்பாங்க. நாங்க அப்படி பண்றதில்ல... பருப்பை உடைக்குறதுக்கு
முன்னாடி செம்மண்ண கொஞ்சம் தண்ணிவிட்டு கரைச்சு அதுல உடை படாத முழு பருப்பை கொட்டி ஒரு நாளு ஊர வச்சிடுவோம். அடுத்து ரெண்டு நாளு இந்த மாதிரி வெயிலுல காய வச்சிடுவோம். அதுக்கு பின்னாடி ஆரியக் கல்லுல (திருகை) போட்டு உடைச்சா அப்படியே துவரம்பருப்பும்,
செம்மண்ணுமா உடைஞ்சு வரும். அதை முறத்துல போட்டு புடைச்சா துவரம் பருப்பை தனியா பிரிச்சு எடுத்திடலாம். இப்படி பக்குவம் பண்ணுன துவரம் பருப்பை 2,3 வருஷத்துக்கு பூச்சி, புழு நெருங்க முாடியாது” என அடித்துச் சொல்கிறார் சின்னச்சாமி.
இரை தேடி முடித்து கிடை திரும்புகின்றன
ஆடுகள். காட்டு வேலை முடித்து, கொத்து (மண்வெட்டி) தோளில் குழந்தை போல் தொங்க வீடு திரும்புகிறார்கள் தொழிலாளர்கள். மண் மணக்கும் எலவம்பட்டியில் இருந்து மஞ்சள் வெயிலோடு நாமும் கிளம்புகிறோம்
1 comments:
அருமை நண்பா...
கருத்துரையிடுக