பள்ளிக்கூட வாசலிலும்,
அம்மன்கோயில் திண்ணையிலும்
பாயாசமும், அவித்த புளியங்கொட்டையும்
விற்றே மரித்துப்போனவள்
இன்றும் எங்களுக்கு பாயாசக்கார ஆச்சிதான்...
பிள்ளைகளைக் கண்டால்
மூன்று கண் நுங்கு சீவி கொடுத்து
நுங்குக் காய் வண்டி செய்து தரும்
நொங்குப் பெரியாத்தாவின் பெயரை
நாங்கள் யாரும் கேட்டதில்லை...
அண்டாவில் சோறாக்கித் தின்ன
அடுப்பு கூட்டியவளாய் சொல்லப்படுபவளை
அண்டாக் கிழவி என காதுபடக் கூப்பிட்டால்
காது நிறைய கெட்ட வார்த்தைகள் கிடைக்கும்....
கண்மாய் கருவேல நிழலில்
கள்ளுக்கடை நடத்தினாலும்
திருவிழாவுக்கு அருள் வந்து ஆடுவதால்
அவள் சாமியாடி சித்திதான்...
பட்டாளத்தான் பொண்டாட்டி என
ஊரிலேயே ஒருத்திதான் இருந்தாள்...
பட்டம் ஏதுமில்லாத சின்னாத்தா, பெரியாத்தா,
மதினி, அத்தை, கிழவிகளை பெயர் சொல்லி
கூப்பிடுகையில் சற்றே அந்நியமாகி நிற்கிறார்கள்...
1 comments:
azhagana kavithai
கருத்துரையிடுக