வெள்ளி, 30 ஏப்ரல், 2010

திருவள்ளுவரை கேவலப்படுத்துவது எப்படி? (அல்லது இப்படி)


விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் உறுப்பினர் திரு ரவிக்குமார் அவர்களுக்கு, 

     உங்களின் கட்டுரைகளை எப்போதாவது வாசித்து வரும் ஒரு கடை நிலை வாசகன் என்ற உரிமையிலேயே இக்கடிதத்தை எழுதுகிறேன். நீங்கள் சட்டப் பேரவையில் பேசியதை பத்திரிக்கையில் படித்து தெரிந்து கொண்டேன். “மதச்சார்பற்ற (?!) தமிழக அரசின் சின்னமாக ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோயில் சின்னம் இருக்கிறது. அதை மாற்றி எல்லோருக்கும் பொதுவான திருவள்ளுவரை தமிழக அரசின் சின்னமாக்க வேண்டும்” என்று போசியுள்ளளீர்கள். 

              கோடிகளை கொட்டி தமிழகக் கோயில்களில் குடமுழுக்கு நடத்தும் இந்து சமய அறநிலையத் துறை கண்ட நம் அரசின் மதச்சார்பின்மை பற்றி பேசுவது, உங்கள் தலைவர் திருமாவளவன் ஈழத்தைப் பற்றி பேசுவதைப் போல்தான் இருக்கும்... அதனால் அதை விட்டு விடுவோம். என் கேள்வி இதுதான். மாற்று அரசியல் குறித்து சிந்திக்கும் ( அல்லது சிந்திக்க மட்டுமே முடியும்) நீங்கள் அரசு சின்னமாக திருவள்ளுவரை எப்படி தேர்வு செய்தீர்கள்?

திருவள்ளுவர் என்ற ஒருவரே கிடையாது என்பது எனக்கும் தெரியும். உங்களுக்கும் தெரியும். ( என்று நம்புகிறேன். நம்பலாம் தானே?) அது ஒரு கற்பனை பெயர். உண்மையில் 1330 குறள்களையும் எழுதிய எழுத்தாளனின் உண்மையான பெயர் கிடைக்கவில்லை. 

முகம் தெரியாத கவிஞனுக்கு ஏதோ ஒரு வசதியான உருவம் கொடுத்து அரை நூ ற்றாண்டுக்கும் மேலாக கேவலப்படுத்திக் கொண்டிருப்பதற்கு ஒரு மாபெரும் அங்கீகாரம் வழங்குவதுதான் உங்களின் நோக்கமா என்று தெரியவில்லை.

திருவள்ளுவர் என்ற பெயர் எப்படி புனையப்பட்ட சுத்தமான கற்பனையோ அதே போன்ற ஒரு கற்பனைதான் அவரது திரு உருவமும் என்பது நம் பச்சைத் தமிழர்களில் பெரும்பான்மையினருக்கு தெரியாது. தெரிந்தவர்களுக்கும் ஒரு போலி பிம்பத்தை நம்ப வைத்து ஏமாற்றப்பட்டுக் கொண்டிருக்கும் அயோக்கியத்தனம் பற்றி கவலை கிடையாது. அதனால்தான் உங்களின் தமிழ் புரட்சியை ஏற்படுத்தும் கோரிக்கைக்கு புல்லரித்துக் கொண்டிருக்கிறார்கள்.

கற்பனையில் தீட்டப்பட்டு வலுக்கட்டாயமாய் புனித ஆவி புகுத்தப்பட்ட ஒரு உருவத்தை ஏழு கோடி மக்களை பிரதிநிதித்துவப்படுத்தும் ஒரு சின்னமாக அறிவிப்பது எவ்வளவு மடத்தனமாவது என்று நீங்கள் கோசிக்காதது ஆச்சர்யம்தான். 

“வீட்டிற்குள்ளிருந்து திருவள்ளுவர் அழைத்த போது கிணற்றில் நீர் இறைத்துக் கொண்டிருந்த அவரது மனைவி வாசுகி (?) கயிற்றை அப்படியே விட்டு விட்டு, ஓடினார். வாளி கயிற்றோடு. கிணற்றுக்குள் விழாமல் அப்படியே நின்றது. காரணம் அவள் ஒரு பதி விரதை.” - இந்தக் கட்டுக்கதை ஏறக்குறைய திருவள்ளுவரைப் பற்றி அறிந்த எல்லோருக்கும் தெரிந்திருக்கும்.

ஆனால் 1959 ஆம் ஆண்டு கே.ஆர். வேணுகோபால் சர்மா வரைந்த கற்பனை ஓவியம்தான் இன்று அங்கிங் கெணாதபடி எங்கும் நிறைந்திருக்கும் திருவள்ளுவர் என்பதும், அதற்கு அண்ணாத்துரை, பாரதிதாசன் முதற்கொண்ட பகுத்தறிவாளர்களும், தமிழ் சான்றோரும் கொடுத்த அங்கீகாரமே திருவள்ளுவர் இன்று கலாச்சாரக் குறியீடாய் வளர்ந்து நிற்க காரணம் என்பதும் திருக்குறள் படித்த எத்தனை பேருக்குத் தெரியும் என்று நினைக்கிறீர்கள்?

எனக்கு இந்த விஷயம் 26 வது வயதில் தெரிந்தது. பெரும் வாசிப்பனுபவம் உள்ள உங்களுக்கு எப்போது தெரிந்தது என்று எனக்குத் தெரியாது. ஆனால் இது எதுவும், தெரியாமல் அல்லது தெரிந்து கொள்ள அக்கறைப்படாமல் நம் அயோக்கியத்தனத்திற்கு ஒரு தலைமுறையே தலையாட்டிக் கொண்டிருக்கிறது.

கடவுளையே உருவமற்றவனாய் காணச் சொல்லும் அந்தக் கவிஞனுக்கே ஒரு கற்பனை பிம்பம் உருவாக்கியதுதான் நம் தமிழ்ச் சமூகம் அவனுக்குத் தரும் மரியாதையா?

அப்படி கற்பனை உருவம் படைக்கப்பட்டதை பள்ளிப் புத்தகங்களில் திட்டமிட்டு மறைப்பது என்பது எவ்வளவு பெரிய கயமைத்தனம்?

இதற்குப் பதிலாக அந்த ஒப்பற்ற இலக்கியத்தை படைத்த கவிஞனின் பிணம் அகப்பட்டால் அதை தோண்டி எடுத்து து£க்கிலே போட்டு விட்டு ஒரு செம்மொழி மாநாடு நடத்தி களிப்புறலாம்.

உண்மையில் 1330 குறள்களையும் படித்துப் பரப்புவதை விட, உலக இலக்கியங்களின் வரிசையில் அதற்குரிய இடத்தை பெற்றுத் தர ஆக்கபூர்வமான பணியில் ஈடுபடுவதை விட, கற்பு, தாலி, வரிசையில் திருவள்ளுவரை ஒரு கலாச்சாரக் குறியீடாக, தமிழ் புனிதராக நிலை நிறுத்தும் மேம்போக்கான நோக்கம்தான் இதற்கெல்லாம் அடிப்படை. 

அதனால்தான் குறள் இன்னும் எந்த உலக மொழியில் மொழி பெயர்க்கப்படவில்லை என்பதைப் பற்றி சிந்திக்காமல், (வேணுகோபால் சர்மாவின்) திருவள்ளுவரை அரசு சின்னமாக்காதது ஏன் என்று கேள்வி கேட்கும் உங்களை ஒரு முற்போக்கு சிந்தனைவாதி போன்று ஆச்சர்ய விழிகளால் பார்க்கிறார்கள். திருக்குறளை உலகமயமாக்க வழி காணாது, நடுக்கடலில் பறவைகள் எச்சம் போட 11 கோடியில் சிலையாய் அமைத்த உங்கள் கூட்டணி தலைவருக்கு புகழ்மாலை சூட்டுகிறார்கள்.

 இன்று திருவள்ளுவர் ஒரு தமிழ் சார்ந்த வர்த்தகப் பொருளாகிவிட்டதை நீங்கள் உணர்ந்திருப்பீர்கள் என்று நினைக்கிறேன். புரியவில்லை என்றால் உதாரணம் கூறி விளக்கட்டுமா?

சில நாட்களுக்கு முன்பு செம்மொழி கண்ட முத்தமிழ் அறிஞருக்கு உங்கள் கட்சியின் சார்பில் ஜால்ரா தட்ட விரும்பினீர்கள். அப்போது விருது என்ற பெயரில் அம்பேத்காரை எப்படி அரசியல் வர்த்தக பொருளாக பயன்படுத்திக் கொண்டீர்களோ அப்படித்தான் இப்போது திருவள்ளுவரும்.

ஆயிரங்களிலும், லட்சங்களிலும் நன்கொடை சுரண்டும் பள்ளிகளின் பெயராக, விளைநிலத்தில் ப்ளாட் போட்ட புதிய நகரின் பெயராக திருவள்ளுவரையும் அவரது கற்பனை உருவத்தையும் ஒரு புனித அடையாளமாக சூட்டிக் கொண்டு நம் பச்சைத் தமிழர்கள் காசு பார்த்துக் கொண்டிருக்கிறார்கள். 

அவ்வளவு ஏன்? உங்கள் கூட்டணியின் தலைவரான முத்தமிழ் அறிஞரே வள்ளுவன் தன்னை கர்நாடகாவிற்கே தந்து, கன்னடக் கவிஞன் சர்வக்ஞர் பெற்றது பண்ட மாற்று வியாபாரம் தானே? (ஒக்கேனக்கல் குடிநீர் திட்டத்தை கோட்டை விட்டதை மறக்கடிக்கும் அளவுக்கு வள்ளுவருக்கு வீரியம் ஜாஸ்தியாகிவிட்டது)

சரி அதை யெல்லாம் விடுங்கள். மரம், கல்லை கடவுள்களாய் வணங்கும் மக்களின் நம்பிக்கையை மூடநம்பிக்கை என்று சொல்லும் பகுத்தறிவு பாசறையில் பிறந்த நாம், இந்த வேணுகோபால் சர்மாவின் திருவள்ளுவரை மட்டும் புனிதப்படுத்திக் கொண்டே போவதற்கு என்ன பெயர்தான் வைப்பது?  
திருவள்ளுவருக்கு புகைப்படத்துடன் கூடிய வாக்காளர் அடையாள அட்டை கொடுப்பதற்குள் சீக்கிரம் யோசித்து சொல்லுங்கள்.

எதிர்பார்ப்புகளுடன்..
யுவான் சுவாங்

1 comments:

சரவணகுமரன் சொன்னது…

//மரம், கல்லை கடவுள்களாய் வணங்கும் மக்களின் நம்பிக்கையை மூடநம்பிக்கை என்று சொல்லும் பகுத்தறிவு பாசறையில் பிறந்த நாம், இந்த வேணுகோபால் சர்மாவின் திருவள்ளுவரை மட்டும் புனிதப்படுத்திக் கொண்டே போவதற்கு என்ன பெயர்தான் வைப்பது?
//

நியாயம் தான்...