வியாழன், 15 ஏப்ரல், 2010

நாங்க மாரியம்மா அக்காவுக்கு தெரிஞ்சவுக...


 கடல் கொண்ட தனுஷ்கோடியில் அலைந்து திரிய வேண்டுமென நெடுநாளாகவே எண்ணிக் கொண்டிருந்தேன். ஆனால் இப்படி திடீர் என கிளம்பிப் போவேன் என்று நானே எதிர்பார்க்கவில்லை. பயணத்திற்கு இரண்டு நாட்கள் முன்பு வரை என்னிடம் எந்த திட்டமுமில்லை. ஊரிலிருந்து செல்லடித்த சகலை திருச்செந்தூர் கடல் குளியலுக்கு கிளம்பலாமா என்றான். கடல் என்றதும் எனக்கு தனுஷ்கோடி ஞாபகம் வந்து விட, அலுவலகத்திலும் எனது விடுமுறை கடிதத்திற்கு பச்சை விளக்கு எரிய உடனே கிளம்பி விட்டேன்.

 காலைக் குளியலுக்கு கூட நேரமின்றி , குருவாயூர் எக்ஸ்பிரஸ் பிடித்து மதுரையில் போய் இறங்கி, சகலையின் தாமதத்தால் ராமேஸ்வரம் பேசன்ஜர் ரயிலுக்கு வெளியிலிருந்து டாட்டா காட்டி விட்டு, நான்கு மணி நேரப் பேருந்து பயணத்தில் ராமேஸ்வரம் கோயில் வாசலில் போய் இறங்கிய போது மணி நள்ளிரவு 12.30 தாண்டியிருந்தது.

 அந்த அகால நேரத்திலும் பட்ஜெட் அறைக்கு அலைந்து, ஒரு மேன்ஷன் ஸ்டைல் லாட்ஜில் து£க்கம் போட்டோம். ஏப்ரல் 9 ஆம் நாளின் விடியலை தனுஷ்கோடி மணற் பிரதேசத்தில் நின்ற படி ரசிக்க வேண்டுமென்பது என் திட்டம். ஆனால் நான் திட்டம் போட்டு எதுதான் உருப்படியாக நடந்திருக்கிறது?
அதிகாலை 4.30 லிருந்து கோயில் வாசலில் காத்துக்கிடந்தும் தனுஷ்கோடிக்கான முதல் பேருந்து 5.30க்குத்தான் வந்தது. தனுஷ்கோடியை நெருங்குவதற்குள் சூரியன் கொட்டாவி விட்டபடி சோம்பல் முறித்துவிட்டான். ஆக தனுஷ்கோடி சூரிய உதய தரிசனம் பேருந்துக்குள்ளேயே முடிந்தது.


 தனுஷ்கோடி ராமேஸ்வரத்திற்கு தெற்கே இருக்கிறது. பெரும் நகரமாக இருந்த தனுஷ்கோடி இன்று கடலுக்குள்ளும், மண்ணுக்குள்ளும் முழுவதுமாக புதைந்து கிடக்கிறது. காரணம் 1964 டிசம்பர் 23 இல் வீசிய புயலும், அதைத் தொடர்ந்த சுனாமியும் தனுஷ்கோடியை விழுங்கிவிட்டன. சென்னையில் இருந்து தனுஷ்கோடிக்கு வந்து கொண்டிருந்த மெட்ராஸ் மெயிலும் பயணிகளோடு கடலுக்குள் போய்விட்டது. ஏறக்குறைய 2000 ம் பேருக்கும் மேலே இறந்திருக்கிறார்கள். உலக வரைபடத்தில் இருந்து அழிந்து போன தனுஷ்கோடி தமிழக அரசைப் பொறுத்த வரையில் இன்று வாழத் தகுதியற்ற ஊர்.

 ராமேஸ்வரத்திலிருந்து ஏறக்குறைய 15 கிலோ மீட்டர் தூரத்தில் இருக்கிறது தனுஷ்கோடி . பேருந்தில் போனால் ஐந்து ரூபாய். ஒரு கட்டத்துக்கு மேல் பேருந்தில் போக முடியாது. காரணம் ஒன்று, அந்த குறிப்பிட்ட இடத்தை தாண்டி சாலை கிடையாது (போட்டாலும் கடல் அடிக்கடி ஏறி வந்து அரித்து தின்றுவிடும்) காரணம் இரண்டு, மணற் பிரதேசமாக இருப்பதால் அதில் பேருந்து ஓட வாய்ப்பில்லை. அந்த பேருந்து நிறுத்தத்திலிருந்தே மின்சாரமும் கிடையாது.

 ஆனாலும் அந்த இடத்திலிருந்து இன்னும் பத்து கிலோமீட்டருக்கும் மேல் மணலால் மூ டப்பட்ட தனுஷ்கோடி நீண்டு கிடக்கிறது. சிதைந்து போன தேவாலயமெல்லாம் அந்தப் பகுதியில் தான் இருக்கிறது. மீன் ஏற்றச் செல்லும் மீன் பாடி மினி லாரிகளும், ஜீப்களும் மட்டுமே அந்தப் பகுதிக்குள் போக முடியும். நாங்கள் போய் இறங்கிய நேரத்தில் எந்த வண்டியும் சவாரிக்கு தயாராக இல்லாததால் நடப்பதென தீர்மானித்தோம். எங்கள் பர்சுக்கும் அதுதான் சரியெனப்பட்டது. ( ஏனென்றால் சுற்றுலாப் பயணி என தெரிந்தால் ஒரு ஆளுக்கு 60 ருபாயிலிருந்து 100 ருபாய் வரை மொட்டையடிக்கிறார்கள். குடும்பமாக வரும் வெளி மாநில பயணிகளிடம் ஒரே ரேட்டாக ஆயிரம் முதல் ஆயிரத்து ஐநூறுவரை பேசி அழைத்து செல்கிறார்கள்)
 நாங்கள் நடக்கத் தொடங்கிய போது தனுஷ்கோடியின் உள் பகுதியில் இருந்து மீன் பாடி லாரியில் மீனவர்களோடு பள்ளிக்கூடம் செல்லும் குழந்தைகளையும் பார்ப்பது சந்தோஷமாக இருந்தது. ஏகாந்தமான மஞ்சள் சூரியன் பின்புலமாக இருக்க, மீன் பாடி வண்டியின் உச்சியில் பள்ளி சிறுவர்கள் உட்கார்ந்து வந்த காட்சியை ஒரு அருமையான சில் அவுட் டாக கேமராவில் கிளிக்கிக் கொண்டேன்.


 ஒரு ஆர்வத்தில் நடக்கத் தொடங்கி விட்டோமே தவிர, தொடர்ந்து நடக்க முடியவில்லை. வெயிலின் உக்கிரம் ஏற, ஏற தாகத்தோடு பசியும் எடுத்தது. இடது பக்கமும், வலது பக்கமும், கண்ணுக்கெட்டிய தூரத்தில் கடல் அலையடித்துக் கொண்டிருக்க, நடுவே விரிந்து பரந்து நீண்டு செல்கிறது மணல் வெளி. மணல்,மணல், மணல், மணலைத் தவிர ஒன்றுமில்லை. 


புதியதொரு கிரகத்தில் வந்து இறங்கியதைப் போல் இருந்தது. பாதி தூரம் நடந்த பின் பாலை வனத்தில் சிக்கிக் கொண்டவர்களைப் போல் உணர்ந்தோம். தண்ணீர் புட்டியில் தண்ணீரில்லை. கடந்து போகும் மீன் பாடி லாரிகளிலாவது ஏறிப் போய் விடலாம் என்று லிப்ட் கேட்டால், அவர்கள் எங்களை சட்டை செய்யாமல் போகிறார்கள்.

 நடக்கும் போது சில கிலோமீட்டர் தொலைவுகளில் குட்டியூண்டாய் சில மனித தலைகள் தென்படுவதும், பின் ஏதாவது ஒரு மண் மேடுகளுக்குப் பின் அவை மறைந்து விடுவதும் தொடர்ந்து கொண்டிருந்தது. ஆனால் அவ்வளவு தொலைவிலும் அவர்கள் பேசிக் கொண்டு போவது கொஞ்சமும் பிசிறு தட்டாமல் எங்களுக்கு தௌ¤வாக கேட்டபோது அதை நம்ப முடியவில்லை.இடையூறு ஏதுமற்ற பரந்த மணல்வெளியில் இது சாத்தியம்தான் போலும்.

 ஆள் நடமாட்டம்தான் இல்லையே தவிர அக்வாபினா தொடங்கி காலியான நெப்போலியன், பேக்பைப்பர் வரை போகும் இடமெல்லாம் சர்வ சாதாரணமாய் கிடக்கிறது. கல் தோன்றி, மண் தோன்றா காலத்தே முன் தோன்றிய மூ த்த "குடி"யல்லவா நம் "குடி".

மூ ச்சிரைத்தபடி ஏறக்குறைய ஆறு கிலோமீட்டருக்கும், மேல் நடந்த பின்புதான் முள் மரங்களும், சில மீனவக் குடிசைகளும் கண்ணில்பட்டன. மீனவப் பெண்களிடம் கேட்டுத் தெரிந்து கொண்டு புயலில் சிதைந்து போன தேவாலயத்திற்குச் சென்றோம். அதுவரை தனுஷ்கோடி பற்றி எனது மனதில் இருந்த பிம்பம் மெல்ல நொறுங்கியது. தேவாலயம் மட்டுமல்ல ரயில் நிலையம், வங்கி, கோயில், உள்ளிட்டவையும், வந்து போன புயலின் எச்சமாய் பாதி மணல் மூ டியபடி வெளியே தெரிந்து கொண்டிருக்கின்றன.


 கடல் காவு வாங்கிய ஒரு நகரத்தின் துயரக் கதையை நாற்பத்து ஐந்து ஆண்டு காலமாய் சுமந்தபடி மணல்வெளியில் சிதிலங்களாக நிற்கின்றன அந்தக் கட்டிடங்கள். ஊரின் பெரும் பகுதி இன்னும் கடலுக்கடியிலதான் இருக்கிறது. அந்தக்கால வங்கியின் மேல் ஏறிப் பார்த்தோம். கனத்த செங்கல்களும், வாயில் வளைவுகளும் அவை பிரிட்டிஷ் கால கட்டிடம் என்பதை உணர்த்தின. அங்கொன்றும், இங்கொன்றுமாய் மீனவக் குடிசைகள் பல இருக்கின்றன. ஆனாலும் பெரும்பாலான மீனவர்கள் இரவு அங்கே தங்குவது இல்லையாம். மீன் பிடிக்க மட்டும் வந்து செல்வார்களாம்.

 அப்படியிருந்தும் பகல் பொழுதில் சில மீனவர்ளைத் தவிர வேறு ஆள் நடமாட்டமில்லை. தேவாலயத்தின் அருகே சின்னதாய் ஒரு பெட்டிக்கடை இருக்கிறது. அதன் புண்ணியத்தில்தான் பார்லே-ஜீ எங்கள் காலை உணவானது. சிமெண்ட் வளையங்களை மணல் மூ டி விடாதபடி ஆழமாய் பதித்து ஊற்று நீர் தோண்டி வைத்திருந்ததில் தாகம் தணித்துக் கொண்டோம். அப்போதுதான் நாங்கள் முனியாண்டித் தாத்தாவைப் பார்த்தோம்.

 ஒரு சின்ன ஓலையை கூரையாக்கி மணல்வெளியில் நிராயுத பாணியாய் நின்றிருந்த சிவலிங்கம் ஒன்றின் அருகே படுத்திருந்தார். எங்களின் பேச்சுச் சத்தம் கேட்டதும் மெல்ல எழுந்து பார்த்து கை நீட்டினார். எங்களுக்கு என்னவோ போலானது. ஒரு நோட்டை எடுத்து நீட்டினோம். கையெடுத்துக் கும்பிட்ட படி நல்லாருப்பீங்க சாமீ.. என்றார். சத்தம்தெளிவாக இல்லை. தொண்டை கட்டிக் கொண்டவர் பேசுவது போல் வெறும் காற்றுதான் வந்தது. சாப்பிட்டுப் பல நாள் இருக்க வேண்டும். நான் அவரின் அருகே உட்கார்ந்து கொண்டேன். அவரைப் பற்றி விசாரித்த போது தனுஷ்கோடி புயலில் குடும்பத்தை இழந்தவரெனத் தெரிந்தது.

 “இங்கதான் சாமி.. த்தோ.. அந்தப் பக்கம் குடிசை போட்டிருந்தேன். கடலுக்கு மீன் பிடிக்கப் போறவன், அன்னைக்கி ராமேஸ்வரத்துக்கு ஜெமினி கணேசன் வராருன்னு அவரப் பாக்கப் போயிட்டடேன் சாமீ.. திடீர்னு கடல் பொங்குனதும் ராமேஸ்வரத்துல சனமெல்லாம் மேட்டுல ஏறி உக்காந்து தப்பிச்சிடுச்சி.. ஐயைய்யோ நம்ம பொண்டாட்டி, புள்ளைங்க என்ன ஆச்சோன்னு இங்க ஓடியாந்து பார்த்தா ஊரே கடலுக்குள்ள போயிடுச்சி.. ரெண்டு புள்ளைங்க சாமீ.. கடைசியில அதுங்க மூ ஞ்சியக் கூட பாக்க முடியாமப் போச்சி.. அன்னைக்கி நான் குடிசையில இருந்திருந்தா உசுரக் கொடுத்தாவது பொண்டாட்டி, புள்ளைகளக் காப்பாத்தியிருப்பேன் சாமீ.. எல்லாம் போச்சு. அன்னைக்கி இருந்து கடலுக்குள்ள போவையும் மனசில்லாம , இந்த எடத்த விட்டு போவையும் மனசில்லாம இங்கேயே கெடக்கேன்.. உங்கள மாதிரி ஆளுக ஏதாவது கொடுத்தா சாப்பிட்டுக்கிறதுதேன்.. நெடுநாள் வெட்டாத நரைத்த தாடிக்கும், தலைமுடிக்கும் மத்தியில் சற்றே தெரியும் அவரது கண்கள் கலங்குகின்றன.

 எங்களைப்பற்றி விசாரிக்கிறார். நாங்கள் சாப்பிடாமல் வந்ததற்காகப் பரிதாபப்படுகிறார். போகும் போது மீன் பாடி லாரியில் போகச் சொல்கிறார். அவரை ஏதாவது வாங்கி சாப்பிடும்படி சொன்னோம். நாங்கள் கொடுத்த காசிற்கு அரிசி வாங்கி சமைத்து சாப்பிடுவதாக சொன்னார். மறுபடியும் நல்லாருப்பீங்க சாமீ என்றார். நாங்கள் கிளம்பினோம். அவர் திரும்பவும் சிவலிங்கத்திற்கு பக்கத்தில் தலை வைத்து படுத்துக் கொண்டார்.


 இன்னும் ஐந்து கிலோ மீட்டர் போனால் கடல் சேரும் இடத்தைப் பார்க்கலாம் என்று அங்கிருந்த பெட்டிக்கடை அம்மா சொன்னார். நான் அர்த்தத்தோடு சகலையைப் பார்க்க அவன் முறைத்தான். அதனால் திரும்பி விடுவதென முடிவெடுத்து சிதைந்து போன ரயில் நிலையத்திற்கு வந்தோம். இரண்டு, மூன்று மீன் பாடி லாரிகளில் வெளி மாநில சுற்றுலா பயணிகள் குடும்பம், குடும்பமாக வந்திறங்கினார்கள்.

 நாங்கள் வண்டியேறக் காத்திருந்த ஒரு மீனவ அக்காவோடு பேச்சுக் கொடுத்தோம். புயலுக்கு முந்தைய தனுஷ்கோடியில் நிலவிய தீண்டாமை பற்றி அவர் சொன்னார். சில பகுதிகளில் மீனவர்களை தெருக் குழாயில் தண்ணீர் பிடிக்கவே விட மாட்டார்களாம். மீறி பிடித்தால், அதன் பின்பு தெருக்குழாயை சோப்பு போட்டு கழுவிவிட்டுத்தான் பயன்படுத்துவார்களாம்.

 அந்த அக்காவின் குடும்பமும் தனுண்கோடி புயலால் பாதிக்கப்பட்டதுதான்..
அப்ப எனக்கு ஒன்றரை வயசு.. கடலு பொங்குனதுன்னு தெரிஞ்ச உடனே எங்க அய்யா என்னை, எங்க அண்ணன், அக்காளையெல்லாம் தூங்கிக்கிட்டு வந்துட்டாராம். கரையில வலை காய வச்சிக்கிட்டிருந்த எங்க அப்பச்சிதேன் கடலோட போயிட்டாரு.. ஊருக்குப் போன எங்க அப்பத்தா மெட்ராஸ் மெயில்லதான் வந்திச்சி.. ரயிலோட அதுவும் கடலுல போயிடுச்சி..

 அந்த அக்காவிடம் முனியாண்டித் தாத்தாவை சந்தித்ததைப் பற்றி சொன்னோம்..
அவரு எங்க பெரியய்யாதேன்.. யாரு காசு குடுத்தாலும் டீதேன் வாங்கிக் குடிப்பாரு.. டீ குடிச்சிட்டு அங்கேயே கெடப்பாரு.. என்றார்.

 ஒரு வடமாநில குடும்பம் கிளம்பிய மீன் பாடி லாரியில் அந்த அக்கா ஏறிக்கொள்ள நாங்களும் கூட ஏறிக்கொண்டோம். அதற்கு ஆட்சேபம் தெரிவித்த அந்தக் குடும்பத்தினரிடம், மீனவர்கள் பேருந்து நிறுத்தம் போக இது மட்டும்தான் வாகன வசதி என்று சமாதானப் படுத்தினார் ஓட்டுனர். வண்டி பேருந்து நிறுத்தம் நோக்கி ஓடத் தொடங்கியது. நாங்கள் லாரியின் பின்பகுதியை ஒட்டி உட்கார்ந்து கொண்டோம். நாங்கள் கேட்க, கேட்க அக்கா தனுஷ்கோடி பற்றி விளக்கிக் கொண்டு வந்தார்.

 அப்போதெல்லாம் கோயிலைத் தவிர ராமேஸ்வரம் சொல்லிக் கொள்ளும்படி பெரிய ஊர் ஒன்றும் இல்லையாம். கடல் பொங்கி தனுஷ்கோடி அழிந்த பின்னால் வளர்ந்ததுதான் இன்றைய ராமேஸ்வரமாம். நாற்பத்தைந்து வருடத்திற்கு முன் கடலில் கவிழ்ந்த மெட்ராஸ் மெயிலின் தண்டவாளத்திற்கு போடப்பட்ட பெருங் கற்கள் இன்னும் அப்படியே கிடப்பதை வண்டியிலிருந்தபடி அக்கா காட்டினார். நாங்கள் இறந்தவர்களின் நினைவுச் சின்னம் என நினைத்த கடற்கரையோர உயரமான து£ண் கம்பம் ஒன்றை, புயலுக்கு முன்பிருந்தே இருக்கும் முனியாண்டி சாமி என்று தௌ¤வு படுத்தினார்.
 திடீரென ஏதோ ஞாபகம் வந்தவராய், இறங்கும்போது வண்டிக்காரன், அம்பது ரூபா கேப்பான்..  நாங்க மாரியம்மா அக்காவுக்கு தெரிஞ்சவுங்கன்னு சொல்லுங்க.. எங்களுக்குன்னா பத்து ரூபாதான் என்றார். பின்பு என்ன நினைத்தாரோ என்னிடமிருந்து இருபது ரூபாயை வாங்கி வைத்துக் கொண்டார். பேருந்து நிறுத்தத்தில் போய் இறங்கிய போது சொந்தக்காரங்கதேன்.. சுத்திப் பார்க்க வந்தாக என்று சொல்லி எங்கள் சார்பாக இருபது ரூபாயை மட்டுமே கொடுத்தார்.

  ராமேஸ்வரத்திற்கான பேருந்து வந்தது. அடித்துப் பிடித்து இடம் போட்டோம். என்ன தம்பி.. எனக்கு இடம் போடலையா.. என்று சிரித்தார் மாரியம்மா  அக்கா. சகலையின தனது இடத்தில் உட்காரச் சொன்னான்.
தனுஷ்கோடி கடற்கரையில் வானம் பார்த்த படி ஓர் இரவு முழுவதையும் நட்சத்திரப் பட்டாளத்தோடு கழிக்கும் என் விருப்பத்தை மாரியம்மா  அக்காவிடம் சொன்னேன்.

அவ்வளவுதான.. வைகாசிக்கு மேல நாங்க வல்லத்த தனுஷ்கோடிக்கு கொண்டு வந்துருவோம்.. அப்ப குடும்பத்தோட இங்கதான் இருப்போம்.. அந்த சமயத்துல வாங்க.. மாரியம்மா  அக்கா குடிசை எதுன்னு கேட்டா கொண்டு வந்து விடுவாங்க.. என்ற படி ஒரு நிறுத்தத்தில் இறங்கிச் சென்றார். நாங்கள் ராமேஸ்வரம் வந்தடைந்தோம்.


 குருவாயூர் எக்ஸ்பிரசில் என் மடியில் உட்கார்ந்தபடி சாப்பிட்டு, ஜன்னல் வழியே ஓடி மறைந்த வயல்வெளி சோளக்காட்டு பொம்மையின் கதையை என்னிடம் கேட்டு, என் மடியிலேயே தூங்கி, திண்டுக்கல்லில் இறங்கும் போது டாட்டா காட்டிப்போன ஜெஸ்ஸி குட்டிமா.

 மணல்வெளி வெறித்தபடி, பசித்த கண்களுடன் தனது இழப்பின் வலியை பகிர்ந்து கொண்ட முனியாண்டித் தாத்தா.

 ஒரு மினி லாரி பயணத்தின் சிநேகத்தில் விருந்தினராய் அழைத்த மாரியம்மா  அக்கா.

 பேருந்து நிறுத்தத்தில் வெயிலில் நின்ற எங்களை உரிமையோடு அதட்டி நிழலில் ஒதுங்க வைத்த அந்தப் பெயர் தெரியாத பாட்டி.

இது போன்ற இன்னும் எத்தனையோ மனிதர்களை வாசிக்கவும், நேசிக்கவும் இந்த தனுஷ்கோடி பயணத்தில் முடிந்தது. ஊர் சுற்றியாக சென்ற நான் அடுத்த முறை மாரியம்மா  அக்காவுக்கு விருந்தினராய் போகப் போகிறேன். இன்னும் சில குட்டி சங்குகளுடனும், இன்னும் சில மனிதர்களுடனும், இன்னும் சில கதைகளுடனும் என்னை வரவேற்கக் காத்திருக்கும் தனுஷ்கோடி.