நாமக்கல் மாவட்டம் நல்லிபாளையத்தில் ஆண்டுதோறும் ஆண்கள் மட்டுமே பங்கேற்கும் கோயில் திருவிழா ஒன்று நடப்பதுண்டு. ஆடியில் இரு நாட்கள் நடைபெறும் அந்த திருவிழாவில் கிடா வெட்டி ஆண்களே சமைத்துஇ ஆண்களே உண்பார்கள். இத்தனைக்கும் அந்த கோயிலில் இருப்பதே காமாட்சியம்மன் என்ற பெண் தெய்வம்தான். ஆனாலும் அங்கே பெண்களுக்கு அனுமதியில்லை. அதை பத்திரிகைகளில் ‘ஆண்கள் மட்டுமே பங்கேற்கும் விநோத திருவிழா’ என செய்தி போடுவார்கள்.
உண்மையில் இந்த வினோதத்தை நல்லிபாளையத்தில் மட்டுமல்லஇ நாட்டின் பல பகுதிகளில் உள்ள கோயில்களிலும்இ மசூதிகளிலும் நாம் பார்க்கலாம். இதை கோயிலில் உள்ள மரபு அப்படி என ஒற்றை வரியில் கன்னத்தில் போட்டுக்கொண்டு நாம் கடந்துபோய்விட முடியாது. பெண்களை உங்கள் மரபு ஏன் அனுமதிப்பதில்லை என்ற கேள்வியை எழுப்பினால்இ அதற்கான விடை ஒவ்வொரு இடத்திலும் இன்னும் விநோதமானதாக இருக்கிறது. அந்த கேள்வி எழுப்பப்பட்ட 3 இடங்கள் அண்மையில் செய்திகளில் அடிபட்டன.
ஒன்று கேரளாவின் மேற்குத் தொடர்ச்சி மலையில் உள்ள சபரிமலை அய்யப்பன் கோயில். மற்றொன்று மகாராஷ்டிர மாநிலம் சிங்கனாப்பூரில் உள்ள சனீஸ்வரன் கோயில். இன்னொற்று மும்பை கடற்கரை பகுதியில் உள்ள ஹாஜி அலி தர்கா.
இதில் சபரிமலை கோயில் நமக்கு பரிச்சயமானது. இங்கே 10 வயது முதல் 50 வயது வரை பெண்களை அனுமதிப்பதில்லை. சிறுமிகளும்இ வயதான பெண்களும் மட்டுமே இந்த கோயிலுக்கு சென்றுவர முடியும். இதற்க காரணமாக சொல்லப்படுவது பெண்களின் மாதவிடாய். (சபரிமலையில் மட்டுமல்ல பெண்களை அனுமதிக்க மறுக்கும் பெரும்பாலான கோயில்களில் இதுவே அதற்கு காரணமாக கூறப்படுகிறது) மற்றொன்று அய்யப்பன் பிரம்மச்சாரி என்பது.
உடலில் நிகழும் சாதாரண மாற்றமான மாதவிடாய் காலத்தில் பெண்களை தீண்டத்தகாதவர்களாக கருதி கோயிலுக்குள் அனுமதிக்க மறுப்பது எந்த விதத்தில் நியாயம் என சிலர் கேள்வி எழுப்புகிறார்கள். அதே நேரம் மாதவிடாய் காலத்தில் கோயிலுக்குஇ மசூதிக்கு செல்வதில்லை என்ற மரபை பெண்களே கடைப்பிடிக்கிறார்கள். கோயிலுக்கு அழைப்பவர்களிடம் அதை ‘தலைக்கு குளிச்சிருக்கேன்’ என நாசூக்காக கிராமங்களில் சொல்வார்கள்.
ஆனால் சபரிமலை கோயிலிலோ மாதவிடாய் வரும் பெண்களை அது நிகழாத காலத்திலும் கூட அனுமதிப்பதில்லை என்ற விதி பின்பற்றப்படுகிறது. அண்மையில் சபரிமலை தேவஸ்தான தலைவர் கோபாலகிருஷ்ணன் ‘மாதவிடாய் வந்துள்ளதை கண்டறியும் இயந்திரம் கண்டுபிடிக்கப்பட்ட பின்பு மற்ற பெண்களையும் சபரிமலை அய்யப்பன் கோயிலுக்குள் அனுமதிப்போம்’ என பேசியதாக சர்ச்சை எழுந்தது. அதை தொடர்ந்து சமூக வலைதளங்களில் ஹேப்பி டூ பிளீட் என பெண்கள் கண்டனக் குரல் எழுப்பினர்.
இந்த சூழலில்தான் அனைத்து வயது பெண்களையும் சபரிமலைக்குள் அனுமதிக்கக் கோரிய வழக்கில் உச்ச நீதிமன்றம் சில முக்கியமான கேள்விகளை எழுப்பியுள்ளது. வழிபாடு நடத்தும் உரிமை அனைவருக்கும் பொதுவானது என அரசியலமைப்பே கூறும் நிலையில் குறிப்பிட்ட வயது பெண்களை சபரிமலை கோயிலுக்குள் அனுமதிக்காமல் எப்படி தடுக்க முடியும் என கேள்வி கேட்டுள்ளது உச்சநீதிமன்றம். கோயிலின் மரபை மாற்ற முடியாது என ஒதுங்கிக்கொண்டுள்ளது கேரள அரசு. இந்த வழக்கில் தீர்ப்பு நிலுவையில் உள்ளது.
மகாராஷ்டிர மாநிலம் அகமதுநகர் மாவட்டத்தில் உள்ள சிங்கனாப்பூரில் உள்ள சனி கோயிலில் இப்படி ஒரு பழக்கம் இருந்தது. 400 ஆண்டுகள் பழமையான இந்த கோயிலில் பெண்கள் நுழைய அனுமதியில்லை. பகுத்தறிவாளர்களின் தொடர் போராட்டத்தை அடுத்து 2011இல் பெண்கள் அனுமதிக்கப்பட்டாலும் சனீஸ்வரரின் பீடத்தின் மீதேறி வழிபாடு நடத்த பெண்களுக்கு அனுமதி அளிக்கப்படவில்லை. அதற்கு எதிரான முணுமுணுப்பு அடிக்கடி கேட்டுவந்த சூழலில் கடந்த நவம்பரில் இளம்பெண் ஒருவர் 4 அடி உயரமுள்ள அந்த பீடத்தின் மீதேறி சாமி கும்பிட்டுவிட்டு கூட்டத்திற்குள் புகுந்து வெளியேறிவிட்டார்.
அவ்வளவுதான் கோயில் நிர்வாகமும்இ சிங்கனாப்பூர் கிராமமும் அதிர்ந்து போயின. கோயிலின் புனிதம் கெட்டுவிட்டதாக கூறி புனிதப்படுத்தும் வழிபாடுகள் நடத்தப்பட்டன. அந்த அடையாளம் தெரியாத பெண்ணைக் கண்டித்து நடந்த கூட்டங்களில் பெண்களும் பங்கேற்றனர். ஆண்கள் அனுமதிக்கப்பட்ட பீடத்தில் ஒரு பெண் ஏறியது தீண்டத்தகாததைப் போல் பார்க்கப்பட்டதைக் கண்டித்துதான் கடந்த ஜனவரியில் சனீஸ்வரன் கோயிலின் பீடத்தின் மீதேறும் போராட்டம் நடத்தப்பட்டது. ஆலய நுழைவு போராட்டம் போல் நடத்ததிட்டமிடப்பட்ட இந்த ஆலய பீடத்தின் மீதேறும் போராட்டத்தை பாதியிலேயே தடுத்து பெண்களை கைது செய்தனர் காவல்துறையினர். இந்த விவகாரம் ஊடகங்களில் பரபரப்பாகி இப்போது முதலமைச்சர் வரை சென்று தீர்வுக்காக காத்திருக்கிறது.
அடுத்தது மும்பை கடற்கரையில் உள்ள ஹாஜி அலி தர்கா. இந்த தர்காவின் பிரதான பகுதிக்குள் பெண்கள் இன்று வரை அனுமதிக்கப்படுவதில்லை. இதை எதிர்த்தும் அண்மையில் இஸ்லாமிய பெண்கள் வீதிக்கு வந்து போராடினர். கல்லறை பகுதிக்கு பெண்களை இஸ்லாம் அனுமதிப்பதில்லை என்கிறது தர்கா நிர்வாகம். ஆனால் ‘கல்லறை பகுதிக்கு அனைவரும் செல்ல வேண்டும்இ ஒருநாள் நாமும் இறப்போம்இ இங்கே புதைக்கப்படுவோம் என்பதை உணர வேண்டும்’ என முகமது நபி கூறியுள்ளதாக வாதிடுகிறார்கள் பெண்கள். இது தொடர்பான வழக்கும் உச்சநீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது.
சக மனிதர்களை சமமாக மதிக்காத எந்த பழக்கமும் காலப்போக்கில் காணாமல்போனதைதான் நம் வரலாறுகள் பதிவு செய்திருக்கின்றன. இன்று பெண்கள் கோயிலுக்குள் நுழைவதை பற்றி பேசினால் எப்படி இந்த சமூகம் அதை ஒரு பாவச் செயலாக பார்க்கிறதோஇ அப்படித்தான் ஒரு காலத்தில் தாழ்த்தப்பட்டோர் ஆலயத்திற்குள் நுழைய வேண்டும் என பேசியஇ செயல்பட்ட சிந்தனையாளர்ளை விரோதிகளாக பார்த்தது. அவர்களை தூற்றியது. அதையும் மீறி பெரியார் உள்ளிட்டோரால் ஆலய நுழைவுப் போராட்டங்கள் வெற்றிகரமாக நடந்தேறின. இன்று முழுமையாக இல்லாவிடினும் அந்த பார்வை பெரும்பாலும் மாறியிருக்கிறது என்பதே உண்மை.
அதே போன்று பெண்களின் வழிபாட்டு உரிமைக்கு எதிரான போக்கை அவர்களே கேள்வி கேட்கும்போது அதை விட்டுக்கொடுத்தலைத் தவிர தக்க தீர்வு வேறு ஏதும் இல்லை என்பதை காலம் சொல்லும். இது மரபுகளை உடைத்து கடவுள்களின் புனிதத்தை கெடுக்கும் விஷயமல்ல. கடவுள் அனைவருக்கும் சமமானவர்இ அவர் ஏற்றத்தாழ்வு பார்ப்பதில்லை என மக்கள் நம்புவதை ஆணித்தரமாக நிரூபிக்கும் முயற்சியே.
ஆக பிரச்னை கடவுளுடனானது அல்ல. அவரின் தூதுவர்களாக தங்களை பாவித்துக்கொள்ளும் ஆணாதிக்க மனோபாவத்தினுடனானதுதான். ஒரு காலத்தில் பெண்களுக்கு ஓட்டுரிமை கிடையாது என கூறினால் அப்படியா என ஆச்சர்யப்பட்டு அதை நகைப்புக்குரியதாக இப்போது எப்படி பார்க்கிறோமோ அதே போன்று வருங்காலத்தில் ‘பெண்களை அனுமதிக்காத கோயிலுக்களும் இங்கே இருந்தன’ என்று சொல்வதை கேட்டு சிரிக்கும் தலைமுறையை நாம் பார்க்கத்தான் போகிறோம். எனது இந்த கவிதையுடன் முடிப்பது நன்றாக இருக்கும் என நினைக்கிறேன்.
அந்த நாட்கள்
அந்த மூன்று நாட்களில்
கோயிலுக்குள் செல்வது
தீட்டாகவே இருக்கட்டும்
எந்த மூன்று நாட்களில்
பெண் தெய்வங்கள்
கோயிலுக்குள் இருக்காதெனக்
கொஞ்சம் சொல்லுங்களேன்?



1 comments:
அருமையான நடை. கடவுளை வழிபடுவதில் பாலின பாகுபாடு கடைப்பிடிப்பது, கடவுள் இல்லை என்ற கருத்திற்கு மேலும் வலு சேர்ப்பதாக இருக்கிறது..
கருத்துரையிடுக