கர்நாடக சுற்றுலாத்துறை இணையதளத்தை அடுத்த ஊர்சுற்றலுக்காக மேய்ந்து கொண்டிருந்த போது பாதமியின் அந்த புகைப்படம் காணக் கிடைத்தது. மூன்று பக்கமும் வடிவில் மலை சூழ்ந்திருக்க நடுவே இருந்த அதத்தியர் ஏரி பார்த்த வினாடி யே “யுரேகா... யுரேகா” என கூவ வைத்தது.
உடனே நால்வர் படையாக கிளம்பினோம். எகானாமிஸ்ட், மாமா, மற்றும் நான். பெங்களூரு சென்று மாமாவை பிக்அப் செய்து ஹ¨ப்ளிக்கு ரயில் பிடித்து பாதமிக்கு செல்வது தலையை சுற்றி காதைத் தொடும் பயணம்தான். ஆனால் 2 நாள் லீவுக்கே மாமா அழுது புலம்பியதால் அந்த பயணத்திட்டம்தான் இறுதியில் உறுதியானது.
பாதமி என்றதும் ஏதோ அறியாத, தெரியாத நகரம் என நினைத்துவிட வேண்டாம். வரலாற்று பாடத்தில் நமக்கு வாதாபி என்ற பெயரில் வாசிக்கக் கிடைத்த நகரமே இன்று பாதமி . கர்நாடக மாநிலம் பாகல்கோட் மாவட்டத்தில் உள்ளது. ‘வாதாபி கணபதி’ எங்கேயோ, எப்போதோ வாசித்த ஞாபகம் உங்களுக்கு வரக்கூடும். தஞ்சாவூர் அருகே திருச்செங்காட்டான்குடியில் வாதாபி கணபதியின் சிலை உள்ளது.
அந்த சிலைக்கும் இந்த பாதமிக்கும் தொடர்பு உண்டு. இன்றைய பாதமியான அன்றைய வாதாபி சாளுக்கிய மன்னர்களின் தலைநகரமாக இருந்தது. புலிகேசி வகையறா மன்னர்கள் இந்த சாளுக்கிய வம்சம்தான். சாளுக்கிய மன்னனை தோற்கடித்த சிறுத்தொண்டர்தான் வாதாபி கணபதி சிலையை 7-&ம் நூற்றாண்டில் தமிழ்நாட்டுக்கு கொண்டு வந்தார். இப்போதைக்கு இந்த வரலாறு போதும். பயணத்துக்கு வருவோம்.
ஹ¨ப்ளியில் இருந்து கடாக் சென்று அங்கிருந்து பேருந்தில் பாதமிக்கு பயணமானோம். நாங்கள் திட்டமிட்ட நேரத்துக்கு பாதமிக்கு ரயில் இல்லை. பாதமி செல்லும் வழியெங்கும் இன்னும் சுயத்தை இழந்துவிடாமல் இருக்கும் கிராமங்கள் எங்களை வசீகரித்துக்கொண்டே வந்தன.
பழமையானமாட்டு வண்டிகள், வண்டி இழுக்கும் காளை மாடுகள், பெல்லாரி வெங்காயத்தை சாலையோரம் கொட்டி உரித்துக் கொண்டிருக்கும் பெண்கள் என பார்க்க, பார்க்க நாம் இழந்து கொண்டிருக்கும் கிராமத்தை நினைத்து ஏக்கம் பிறந்தது. செல்போனைத் தவிர வேறு எந்த சாயத்துக்குள்ளும் சிக்கி விடாத கிராமங்கள். வானம் பார்த்த பூமியாய் இருந்தாலும் தரிசு நிலங்களே காணக்கிடைக்காத கிராமங்கள் உண்மையிலேயே இந்த “வீட்டு மனை”க்காக நிலம் கூறுபோடப்படும் யுகத்தில் அதிசயம்தானே.
பாதமி சற்றே வளர்ந்த கிராமம் போலவே இருக்கிறது. சில தங்கும் விடுதிகள், கூடுதலாய் கடைகள், ஆங்காங்கே தட்டுப்படும் சுற்றுலா பயணிகள் தவிர அது சற்றே தடித்துவிட்ட கிராமம்தான். ஹம்பியைப் போல இங்கே மலிவு விலையில் தங்குவதற்கு அறைகள் இல்லைதான். ஆனால் நாள் ஒன்றுக்கு 4 பேருக்கும் சேர்த்து 800 ரூபாய் வாடகையில் அருமையான அறை கிடைத்தது. 2 நாளுக்கு புக் செய்தோம்.
பாதமி அலைந்து திரிந்து ரசிக்க வேண்டிய அருமையான இடம். அகத்தியர் ஏரியின் தெற்கே மலையில் உள்ள 4 குகைக்கோயிலும் சிவன், விஷ்ணு, சமண சமயத்தின் மகாவீரர் சம்பந்தமான சிற்பங்களால் நிரம்பியிருக்கிறது. சிற்பக்கலையில் குகைக்கோயில்கள் வடிவமைப்பது சாதாரண காரியமல்ல. ம¬லையைக் குடைந்து, குடைந்து தேவையற்ற பகுதியை நீக்கிவிட்டு சிற்பங்களை மலையோடே விட்டுவிட வேண்டும். சிற்பம் செதுக்கும் போது சிறு துண்டு கல்லை நீங்கள் தெரியாமல் அகற்றிவிட்டால் கூட அந்த சிற்பத்தை நீங்கள் எந்த வகையிலும் மீட்டெடுக்க முடியாது. இந்த வகை கோயில்கள் நம் சென்னைக்கு அருகில் மாமல்லபுரத்தில் காணக் கிடைக்கும்.
அதே போலத்தான் பாதமியின் குகைக்கோயிலும். சிவன்கோயிலில் 18 ஆயுதங்களுடன் உள்ள நடராஜர் சிலையும், விஷணுகோயிலில் வாமன அவதாரமும் செதுக்கப்பட்ட விதம் நம்மை பிரமிப்பில் ஆழ்த்துகிறது. விஷ்ணுவின் சயன கோலம், சிவன், பார்வதியின் திருமண கோலம், மகாவீரரின் நிர்வாண நிலை என ஒவ்வொரு சிற்பமும் ஒவ்வொரு கதை சொல்கின்றன. எனக்கு என்னவோ அவை புராணங்களை விட அதை செதுக்கியவனின் கதை¬யே பேசுவது போல பட்டது. கேமராவால் புகைப்படமாக சுட்டுக்கொண்டே சிற்பிகளை நினைத்தபடியே படியேறி ஒவ்வொரு குகைக்கோயிலாக சென்றேன்.
சிற்பங்களின் அழகை பருகிவிட்டு மலையை விட்டு இறங்கி அகத்தியர் ஏரியை ஒட்டி நடந்தோம். மிக நீளமான படிகளில் பெண்கள் துணி துவைத்துக்கொண்டிருந்தார்கள். 5-ம் நூற்றாண்டில் வெட்டப்பட்ட இந்த அகத்தியர் ஏரிக்கு ஒரு கதை உண்டு.
அட்டகாசம் செய்து வந்த வாதாபி, இல்வளன் என்ற இரு அரக்கர்களை அகத்திய முனிவர் அழித்தாரம். அந்த இரு அரக்கர்களே அகத்தியர் ஏரியின் வடக்கிலும், தெற்கிலும் மலையாக உள்ளதாக நம்பப்படுகிறது.
நீண்டு கிடக்கும் ஏரியின் கிழக்கு கரையில் மலைஅடிவாரத்தில் அமைந்துள்ள பூதநாதர் கோயிலை மாலை நேரத்து மஞ்சள் வெயிலில் ரசிப்பது ரம்மியமானதாக இருக்கும் என்பதால் நாங்கள் வடக்கே உள்ள அருங்காட்சியத்தின் பக்கம் நடைபோட்டோம். பாதமியின் பழமையை அறிந்து கொள்ள அருங்காட்சியகத்துக்கு கண்டிப்பாக செல்ல வேண்டும். கற்கால மனிதர்கள் வாழ்ந்த குகைகள் பாதமி மலைத்தொடரில் இருப்பதை தெளிவாக புகைப்படத்துடன் இங்கே விளக்கியிருக்கிறார்கள். அப்போதுதான் ஒரு விஷயம் புரிந்தது.
ஹம்பியைப் போல இங்கேயும் 2 நாள், 3 நாள் விடுமுறையில் வருவது எவ்வளவு வீணானது என்று. ஒரு வாரம் பாதமியில் தங்கியிருந்தால் பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன் மனிதனாகப்பட்டவன் நடந்து, திரிந்து வேட்டையாடியாக குகைகளில் நாமும் அலைந்திருக்கலாம். கற்காலகத்து மனிதன் பயன்படுத்திய கல்ஆயுதங்களும், பாதமியின் அருகே உள்ள சிற்பக்கலையின் சிகரமான அய்கோல், பட்டாடக்கல்லில் கண்டெடுக்கப்பட்ட சிலைகளும் இந்த அருங்காட்சியகத்தில் காட்சிக்கு உள்ளன. பாதமியின் முழு வரலாற்று சிறப்பும் இங்கே நம் கண்முன் விரிகிறது. அதனை சித்தரித்திருக்கும் விதம் அருமை. வெள்ளிக்கிழமை தவிர மற்ற நாட்களில் இந்த அருங்காட்சியகம் திறந்திருக்குமாம்.
அருங்காட்சியகத்தை ஒட்டி வடக்கே இரு மலைகளுக்கு நடுவே செல்லும் படிகளில் ஏறிச் சென்றோம். இங்கே சில சிவன் கோயில்கள் உள்ளன. பிரம்மாண்டமாய் உருண்டு நிற்கும் மலைகளுக்க இடையில் சிறு எறும்பென படியேறிச் செல்லும் அந்த அனுபவம் மிகவும் அலாதியானது. தமிழில் வெளியான சிறுத்தை திரைப்படத்தின் இறுதி சண்டைக்காட்சியில் இந்த இடத்தை நீங்கள் பார்க்க முடியும். மலையின் உச்சிக்கு சென்றால் ஒரு புறம் திப்பு சுல்தான் காலத்து பீரங்கி பாதமி நகரத்தை பார்த்தபடி நிற்கிறது. பாதமியின் அழகை ரசிக்க இந்த இடம் அருமையானது.
தொடர்ந்து நடந்தால் கற்களால் கட்டிய எஸ்கிமோக்களின் வீடு போலவும், கவிழ்த்து வைக்கப்பட்ட சிரட்டை போலவுமான அமைப்பில் ஒருகட்டடம் இருந்தது. ஏதோ வரலாற்று சிறப்புமிக்க இடம் என நினைத்து அது மேல் ஏறி விதவிதமாக போஸ் கொடுத்து புகைப்படத்தைச் சுட்டோம். விசாரித்து பார்த்ததில் அப்புறம்தான் தெரிந்தது நாங்கள் புகைப்படம் சுட்ட இடம், அந்தக்காலத்தில் ரொட்டி சுட்ட இடமாம்.
நாங்கள் இப்போது வடக்கிலுள்ள மலைத்தொடரின் உச்சியில் இருந்தோம். அங்கிருந்து பல கிலோ மீட்டர் தூரத்துக்கு நீண்டிருந்தது மலைத்தொடர். புதர்க்காடுகள், மரங்கள் ஏதும் இல்லாது சிறு, சிறு செடிகள் மட்டுமே உள்ள மலைத்தொடர் அது.
அப்படியே மலையின் மேலாகவே 8 கிலோ மீட்டர் நடந்து சென்றால் மஹகுட்டா கோயிலுக்கு செல்லலாம் என நெட்டில் படித்திருந்தேன். ஆனால் உடன் வந்தவர்களிடம் அதைப்பற்றி சொல்லியிருக்கவில்லை. சொல்லியிருந்தால் மாமா பாதமியின் எதிர்ப்பக்கம் தலைவைத்து இந்நேரம் பெங்களூரில் தூங்கிக் கொண்டிருந்திருப்பான்.
மலையின் உச்சியில் நின்றபோது சூரியன் மேற்கே சாயத்தொடங்கியிருந்தது. நான் மஹகுட்டா கோயிலுக்கு நடந்து செல்லலாம் என்றேன். எதிர்பார்த்தது போலவே மாமா எவ்வளவு தூரம் என்றான். 5 கிலோ மீட்டர் என பொய் சொன்னேன். அதுக்கே மாமா தயங்க, எகானாமிஸ்ட்டும், வாத்தியாரும் பச்சைக் கொடி காட்டினார்கள். இதில் ஒரு பிரச்சனை இருந்தது. மலையில் நடந்து செல்ல எங்களுக்கு வழி தெரியாது. போகிற வழி மாடு மேய்க்கும் சிறுவர்களை தவிர வேறு மனித நடமாட்டமே இல்லாத பகுதி. ஆனால் இதைப்பற்றி நாங்கள் கவலைப்படவில்லை. எந்த திசையில் கோயில் உள்ளது என்று மட்டும் கேட்டுவிட்டு நடக்கத் துவங்கினோம்.
மலைத்தொடரை ஒட்டியிருந்த பள்ளத்தாக்குகள் மெக்கன்னஸ் கோல்டு படத்தை ஞாபகப்படுத்தின. நடக்க, நடக்க களைப்பு ஏதும் தெரியவில்லை. நான்கு திசையிலும் கண்ணுக்கு எட்டிய தூரம் வரையில் மனித நடமாட்டமோ, குடியிருப்போ எதுவும் கிடையாது. எங்கும் மலைத்தொடர். பள்ளத்தாக்குகள். எ-ங்களுக்கு முன்னால் எங்கள் நால்வருக்கே உருவான ஒரு உலகம் போல் நீண்டு செல்கிறது மலை.
ஐந்து கிலோ மீட்டருக்கும் மேலே சென்றிருப்போம். ஆனால் மஹகுட்டா கோயில் இருப்பதற்கான எந்த அறிகுறியும் தென்படவில்லை. பேச்சு சுவாரசியத்திலும், களைப்பு தராத மாலை வெயிலிலும் மாமா நடந்து வந்த தூரத்தைப் பற்றிய பிரக்ஜையின்றி வந்து கொண்டிருந்தான். இப்படியே பத்து கிலோ மீட்டருக்கும் மேலே நடந்திருப்போம். வாட்டர் கேன் காலியாகிவிட்டிருந்தது.
எங்களை அழைத்துச் சென்ற மலைப்பாதை திடீரென முடிந்தது. மலைத்தொடர் வளைந்து சென்றாலும் பாதை இல்லை. சமவெளிப்பகுதிக்குள் இறங்கிய போது தூரத்தில் விவசாய நிலம் ஒன்று தெரிந்தது.
அதை ஒட்டியே நடைபோட்டோம். இதனிடையில் சூரியன் மேற்கே மறையத்துவங்க மாமா புலம்ப ஆரம்பித்தான். யாருக்கும் அதுக்கு மேல் எந்த திசையில் செல்வது, உண்மையில் கோயில் இருக்கிறதான என எதுவும் தெரியவில்லை. இருட்டத் துவங்கியது. ஒருபக்கம் எனது திட்டம் சொதப்பியது போல இருந்தாலும், இன்னொரு பக்கம் டிஸ்கவரி சேனலின் மேன் வெர்சஸ் வொயில்டு நிகழ்ச்சியில் வரும் பியர் கிரில்ஸ் போல நடுக்காட்டில் அந்த விவசாய நிலத்தில் போய் தங்கிக் கொண்டு, அங்குள்ளவர்கள் தருவதை சாப்பிடலாம் என்ற ஆசை துரத்தியது.
விவசாய நிலத்தில் இருந்த ஒரு அண்ணனிடம் அரைகுறை ஆங்கிலத்தில் மஹகுட்டா கோயில் எங்கே உள்ளது என்று கேட்ட போது அவர் வழி காட்டினார். இன்னும் இரண்டு கிலோ மீட்டர் செல்ல வேண்டும் என்று சொன்ன போது மாமா முகம் வெளுத்துவிட்டது. அங்கே கொஞ்சம் தண்ணீர் பிடித்து குடித்துவிட்டு, மிச்சமிருந்த ஒரு வாழைப்பழத்தை பகிர்ந்துவிட்டு ஒட்டமும், நடையுமாக கோயில் இருக்கும் திசையில் சென்றுகொண்டிருந்தோம்.
ஒரு வழியாக காடுகளின் நடுவே நாங்கள் மஹகுட்டா கோயிலை கண்டுபிடித்தபோது முழுமையாக இருள்சூழ்ந்திருந்தது. பழமையான அந்தக் கோயிலில் உட்கார்ந்து களைப்பாறிவிட்டு பாதமிக்கு ஆட்டோ பிடித்து, ஹேட்டலுக்கு சென்று படுக்கையில் வீழ்ந்தோம். வாழ்க்கையில் என்றென்றும் நினைவில் நிற்கும், மிக அருமையான அந்த 12 கி.மீ. மலைப்பயணம்.
அய்கோல் - சிற்பங்களுக்கு மத்தியில் வீடுகள்
இரண்டாம் நாள் எங்களுக்கு பழக்கமாகிவிட்ட ஒரு தாத்தாவின் கடையில் பூரியை விழுங்கிவிட்டு பட்டாடக்கல் செல்ல பேருந்து நிலையம் சென்றோம். (செடியுடன் கூடிய பச்சை சுண்டலை நேற்று இரவு ருசித்து சாப்பிட்டதை இங்கே சொல்ல மறக்கக் கூடாது). பட்டாடக்கல்லுக்கு அடிக்கடி பேருந்து கிடையாது என்றாலும் வேன் சர்வீஸ் உள்ளது. பாதமியில் இருந்து பட்டாடக்கல் 22 கிலோ மீட்டர் தூரத்தில் மலப்பிரபா ஆற்றின் கரையில் அமைந்துள்ளது. யுனெஸ்கோ அமைப்பால் 1987-----இல் உலக புராதன சின்னமாக பட்டாடக்கல் அறிவிக்கப்பட்டது.
பட்டாடக்கல் ஒரு சிறு கிராமம்தான். புராதான கோயில்கள் அடுத்தடுத்து இருப்பதால் அவற்றை சுற்றி சுற்றுச்சுவர் கட்டி பராமரித்து வருகிறது தொல்லியல்துறை. அதைச்சுற்றி பழமை மாறாத வீடுகள். சில பெட்டிக்கடைகள் அவ்வளவுதான். பரபரப்பான சுற்றுலா இடமாக இல்லாதது மனதுக்கு நெருங்கிய இடமாக உணரவைத்தது.
இங்குள்ள 10 கோயில்களும் சாளுக்கியர்கள் காலத்தவைதான். திராவிட, மற்றும் நகரா கட்டடக்கலையில் பாணியில் அமைக்கப்பட்டுள்ள இந்தக் கோயில்களில் கோபுரங்களில் உள்ள வேலைப்பாடுகள் என்னை மிகவும் கவர்ந்தது. அவை தனித்தனியாக திட்டமிட்டு செதுக்கப்பட்டு அழகாக ஒருங்கிணைக்கபட்ட கோபுரங்கள். அதே முறையில் அமைக்கப்பட்ட கல்தூண்கள் கோயிலுக்கு கூடுதல் அழகை தருகின்றன. பத்து கோயில்களில் ஒரே ஒரு கோயில் சமணர்களுக்கானது.
கோயில்களின் அழகை ரசித்துமுடிக்க மதியம் நெருங்கிவிட பசி வயிற்றைக் கிள்ளியது. அங்கே உணவு விடுதிகள் கிடையாது. (ரொம்ப நல்லது, பில்லு பர்சை கடிக்காது) ஆனால் ரொட்டி சுட்டு கூடையில் வைத்து உள்ளூர்அம்மாக்கள் விற்றுக்கொண்டு இருந்தார்கள். அவர்களிடம் கீரை கூட்டு, குழம்பு என்ற பல கூட்டுப்பொருட்களுடன் பிளேட் இல்லாமல் கையில் ஏந்தியபடியே சாப்பிட்ட ரொட்டி சூப்பரோ சூப்பர். அதுவும் சிறிய டம்ளர் அளவில் இருந்த குட்டி மண்குடத்தில் கெட்டியாக இருந்த தயிர் ஆகா.. அருமை. அந்த ஊர் மண்ணின் சாப்பாடு சாப்பிட்ட திருப்தி இருந்தது.
சூரியன் சுட்டெரிக்கத் தொடங்கி இருந்தான். அதோடு அய்கோலுக்கு கிளம்பலாம் என்று பார்த்தால் வழக்கம் போல அங்கிருந்தும் பேருந்து இல்லை.
அய்கோலுக்கு இன்னும் 10 கிலோ மீட்டர் செல்ல வேண்டும். வேறு ஒரு ஊருக்கு ஷேர் ஆட்டோவில் சென்று, அங்கிருந்து ஒரு பேருந்துபிடித்து ஒரு வழியா அய்கோல் சென்றோம். ஊருக்கு மத்தியில் புராதான சின்னங்களும், பழங்கால கோயில்களும் இருப்பதை கேள்விப்பட்டிருப்போம். ஆனால் இங்கே சிற்பங்கள், கோயில்களுக்கு மத்தியில்தான் ஊரே இருக்கிறது. கோயில் மண்டபங்களில் பக்கத்து வீட்டுக்காரரின் வேட்டி காய்கிறது. பிரகாரங்களில் ஆட்டுக்குட்டி அசைபோட்டுக்கிடக்கிறது. ஆள்அரவமற்ற கோயில்களில் காற்றும், வெயிலும் கதைபேசிக்கொண்டிருக்கின்றன. இந்த கிராமத்தில் மொத்தம் 122 கோயில்கள் இருக்கின்றன. ஆனாலும் ஒரு நாள் பகலில் பாதி கூட இந்த ஊருக்கு நாங்கள் ஒதுக்காததால் கொஞ்சம் கூட திருப்தியாக சுற்றிப்பார்க்கவில்லை.
சாளுக்கியர்களின் காலத்தில் இது வழிபாட்டுத் தலமாக மட்டுமின்றி முக்கிய கல்விநிலையமாகவும் திகழ்ந்திருக்கிறது. இப்போது பள்ளி முடிந்த நேரத்தில் இங்கே வரும் சிறுவர், சிறுமியர் திடீர் கைடாக உருமாறி சுற்றுலா பயணிகளுக்கு கோயில்களின் வரலாற்றைக் கூறி பணம் பெற்றுக்கொண்டு இருக்கிறார்கள்.
இங்குள்ள கோயில்களில் துர்கா கோயில், அந்தக்காலத்து கிணறும், குளமும் மட்டுமே பார்க்கமுடிந்தது. ஆனால் பேருந்தில் திரும்பும் போது ஊரைச்சுற்றி ஆங்காங்கே நிற்கும் புராதன கோயில்களை பார்க்க, பார்க்க ஏக்கமாக இருந்தது. அய்கோலுக்கு மீண்டும் ஒரு பயணம் கண்டிப்பாக உண்டு. மாலை வெயில் இறங்கிக் கொண்டிருந்தது. நாங்கள் பாதமி திரும்பியிருந்தோம்.
அகத்தியர்
ஏரியின் கிழக்குகரையில் மஞ்சள் வெயிலில் ஜொலித்துக் கொண்டிருந்தது.பூதநாதர் கோயில். நாங்கள் ஏரிக்கரையில் நடைபோட்டோம். கோயிலுக்கு மேற்புறம் மலை, காலடியில் ஏரி என மிக அழகாக இருந்தது அந்தக்காட்சி. தனுஷ்கோடியின் கோதரண்ட ராமர் கோயிலுக்கு அடுத்தபடி நான் ரசித்த மிக அருமையான சூரிய அஸ்தமனம் இதுதான்.
ஏரிக்கரை படியில் உட்கார்ந்த படி கழிந்த அந்த மாலைப்பொழுது ஒன்று போதும் இந்த பயணம் எவ்வளவு அர்த்தமுள்ளது என்பதை தீர்மானிக்க.. எங்கள் கண்முன்னால் மறைந்து கொண்டிருந்தது சூரியன். பூதநாதர்கோயில் சிற்பங்களும் மஞ்சள் வெயிலுக்கு மயங்கிக்கொண்டிருந்தன எங்களைப்போலவே...

1 comments:
wh0cd816267 [url=http://sildenafilcitrate2017.com/]sildenafil[/url]
கருத்துரையிடுக