புதன், 26 ஜனவரி, 2011

ஹேமாவை கொன்றது யார்?


            ஹேமா - ஒரிசாவின் குக்கிராமம் ஒன்றில் பிறந்த குழந்தை! அவள் விற்கப்பட்ட போது நாடே கூடி நின்று அவள் பெற்றோரைக் குற்றவாளிக் கூண்டில் ஏற்றியது. அவள் மரணமடைந்த போது, அதற்கு காரணம் மஞ்சள் காமாலை என்றது. ஆனால், உண்மையில் ஹேமாவைக் கொன்றது மஞ்சள் காமாலை இல்லை. வேறு யார் என்று இக்கட்டுரை முடிவில் நீங்களே சொல்லுங்கள்......

             ‘ஒரிசாவில் சில ஆயிரம் ரூபாய்க்கு குழந்தையை விற்ற கொடூரம்; ஈவு இரக்கமில்லாத பெற்றோரின் வெறிச் செயல்’ - பரபரப்புக்கு அலையும் பிராந்திய பத்திரிகை ஒன்றில்  இப்படியொரு  தலைப்புச் செய்தி தடதடத்ததுதான் தாமதம்... ஒரிசா மாநிலமே கொந்தளித்தது. சட்டமன்றம் அமளிதுமளியானது. ‘பொறுப்பில்லாத மாவட்ட அதிகாரிகள்தான் இத்தனைக்கும் காரணம்’ என கடிந்துகொண்டார்கள் அமைச்சர்கள். ‘சபாநாயகர் விசாரணை நடத்துவார்’ என அறிவித்தது அரசு.

        அடுத்த சில நாட்களில் போலங்கிர் மாவட்டத்தில் உள்ள அந்த குண்டபுட்லா கிராமத்தை நோக்கி சைரன் ஒலி அலற சீறிப்பாய்ந்தன அரசு வாகனங்கள். சபாநாயகருடன் எம்.எல்.ஏ&க்கள், அதிகாரிகள் என ஒரு பெரும் படையே சென்று அந்தக் குடிசை வீட்டின் கதவைத் தட்டியது.
வெறித்த பார்வையோடு கதவு திறந்து வெளியே வந்தார்கள் ஷ்யாம் லாலும், அவரது மனைவி லலிதாவும். சில ஆயிரம் ரூபாய்க்கு ஆசைப்பட்டு குழந்தை ஹேமாவை விற்பனை செய்ததாக குற்றம் சாட்டப்பட்ட பெற்றோர்! இவர்களுக்காகவே காத்திருந்த மொத்தக் கூட்டமும் ஆவேசத்தோடு கேட்டது.. ‘‘குழந்தையை ஏன் விற்றீர்கள்?’’ 

          நிற்கக்கூட தெம்பில்லாத ஷ்யாம் லால் பதில் ஏதும் பேசாமல் குத்தவைத்து உட்கார்ந்துகொண்டார். கண்ணீர் முட்டிக் கொண்டு வர லலிதா சொன்னார்.. ‘‘எங்கள் குழந்தை ஹேமாவை நாங்கள் உயிருக்கு உயிராக நேசிக்கிறோம். அதனால்தான் அவளை விற்றோம்.’’
இதைக் கேட்ட கூட்டத்தினருக்கு ஒன்றும் விளங்கவில்லை. சுற்றி நின்று அந்த ஏழைப் பெற்றோரை வசை பாடத் தொடங்கினர். எந்தவித குற்ற உணர்ச்சியுமின்றி வசை மொழிகளை கேட்டுக் கொண்டிருந்தார்கள் அவர்கள். ஏனெனில், அவர்களைப் பொறுத்தவரை அது குற்றமல்ல. ஒரு பெற்றோராக தங்கள் செல்ல மகளுக்கு செய்த மிகப் பெரிய நல்ல காரியம்!

                  பரிதாபத்திற்குரியது, கொடுமையானது, சபிக்கப்பட்டது என எந்த வார்த்தைகளுக்கு உள்ளும் அடக்கிவிட முடியாதது ஷ்யாம் லால், லலிதாவின் வாழ்க்கைக் கதை! 

                  குண்டபுட்லா கிராமத்தில் இருந்த அரை ஏக்கர் மானாவரி நிலம் அந்த ஏழை தம்பதியருக்கும் அவர்களது மூன்று குழந்தைகளுக்கும் வயிற்றுப் பசி போக்க போதுமானதாய் இருந்தது. விவசாயியான ஷ்யாம் லாலின் கடின உழைப்பிலும், இருப்பதைக் கொண்டு குடும்பம் நடத்தும் லலிதாவின் பொறுப்பு உணர்ச்சியிலும் அந்த எளிய குடும்பத்தின் வாழ்க்கை தெளிந்த நீரோடையாக நகர்ந்துகொண்டு இருந்தது. ஆனால், அடுத்தடுத்த ஆண்டுகளில் தொடர்ந்த பஞ்சம் அவர்களின் வாழ்வாதாரத்தையே பறிக்கத் தொடங்கியது. கிராமத்தில் வேலையில்லை, உணவுக்கும் வழியில்லை என்றானபோது பஞ்சம் பிழைக்க பக்கத்து மாநிலமான சட்டீஸ்கருக்கு பயணப்பட்டனர்.

                 இரும்புத் தூசி படிந்த உலோக நகரமான பிலாயில் ஷ்யாம் லாலுக்கு சித்தாள் வேலை கிடைத்தது. சமயங்களில் ஷ்யாம் லாலோடு லலிதாவும் கட்டட வேலைக்குப் போய் வந்தார். கையில் கொஞ்சம் காசு தங்க ஆரம்பித்தது. ‘இனி சிக்கல் இல்லை’ என்று நிம்மதிப் பெருமூச்சு விட்ட நேரத்தில், அடுத்த பிரச்னை வேதாளமாய் அவர்களைத் தொற்றிக் கொண்டது. மூத்த மகன் ஹரேந்திராவின் தலை திடீரென வீங்கிப் பெரிதாகிக் கொண்டு வர, ஷ்யாம் லால் பதறிப்போனார். பிலாய் இரும்பு உருக்காலை மருத்துவமனை புலம் பெயர்ந்து வந்த அந்த ஏழைகளுக்கு கதவு திறந்துவிட மறுத்துவிட்டது. நகரத்தில் உள்ள தனியார் மருத்துவமனை வாசலை மிதித்து விடாதபடி அங்கு கேட்ட மருத்துவக் கட்டணம் பயமுறுத்தியது. வேறுவழியின்றி அந்தக் குடும்பம், அறுத்தெறிந்த தங்களது வேரைத் தேடி சொந்த ஊரான குண்டபுட்லாவிற்கே  திரும்பியது. 

                அருகிலுள்ள அரசு மருத்துவமனைக்கு தலை வீங்கிய ஹிரேந்திராவை கொண்டு போனார்கள். ஆனால், அறுவை சிகிச்சை செய்ய அங்கிருந்தவர்கள் நடத்திய லஞ்சப் பேரம் படியவில்லை. இறுதியில் ஓரளவு நியாயமாக(!) லஞ்சம் கேட்ட துக்லா கிராம சுகாதார நிலையத்தில்தான் ஹரேந்திராவுக்கு சிகிச்சை பெற முடிந்தது. இதில் அவர்கள் வாயைக் கட்டி சேர்த்து வைத்த ஐந்தாயிரம் ரூபாய் கரைந்து போனது.

          மீண்டும் சித்தாளாக பிலாய் நகரத்திற்கு சென்றார் ஷ்யாம் லால். ஆனாலும், துயரத்தின் துரத்தல் நின்றபாடில்லை. நிமோனியா நோயால் பாதிக்கப்பட்டார் ஷ்யாம்லால். இமைக்க முடியாத அளவுக்கு கண் வலி, அதிகரிக்கும் காய்ச்சல் என அவதிப்பட்ட அவர் எடை குறைந்து உருக்குலைந்து போனார். ‘இப்படியே விட்டால் கணவரை இழந்துவிடுவோம்’ என பயந்த லலிதா, வேறு வழியே இல்லாமல், ‘லஞ்ச பேர’ புகழ் அரசு மருத்துவ மனையிலேயே ஷ்யாம் லாலை சேர்த்தார். 

           அவரது நோய்க்கு தினமும் சில ஊசிகள் அவசியமாகப் போட வேண்டி இருந்தது. ஒரு ஊசிக்கு நூறு ரூபாய் கேட்டார்களாம் அங்கிருந்தவர்கள். காலில் விழாத குறையாக லலிதா மன்றாட, கருணை நாற்பது ரூபாய் தள்ளுபடியில் அறுபது ரூபாய்க்கு கிடைத்திருக்கிறது. ஷ்யாம் லால் ஓரளவு மீண்டு வந்தார். இந்த முறை அவர்களின் சக்திக்கு மீறி, 12,000 ரூபாய் செலவாகிவிட்டது. இரும்பு நகரத்தில் ஆறு ஆண்டுகள் வியர்வை சிந்தி சம்பாதித்துக் குருவியாய் சேர்த்த பணம் போக, லலிதாவின் உறவினரான ராம் பிரசாத் என்பவரிடம் கடனும் வாங்கியிருந்தார்கள்.

          முன்புபோல கட்டட பணி செய்ய முடியாததால்,  கிராமத்திலேயே மணல் அள்ளுதல், மரம் வெட்டுதல் என கிடைத்த வேலைக்கு செல்ல ஆரம்பித்தனர் அந்த தம்பதியர். மாதத்தில் பத்து நாள் வேலை கிடைத்தாலே ஆச்சர்யம்தான். சம்பளமும் குறைவுதான். குழந்தைகளுக்கு அரை வயிறு ஆகாரம் கொடுத்தாலே விருந்து என்றான பின்னால் பயமுறுத்தும் கடனை எப்படி அடைப்பது?

               ஷ்யாம் லாலால் கடனை இனி எப்போதும் அடைக்க முடியாது என்பது உறுதியானதால், அதற்கு ஈடாக ராம் பிரசாத் ஒரு திட்டத்தை முன் வைத்தார். ஷ்யாம் லாலின் இளைய மகள் ஹேமாவை தத்துக் கொடுத்தால் கடனை செலுத்த வேண்டாம் என்றார் ராம் பிரசாத். லலிதா முதலில் அதற்கு சம்மதிக்கவில்லை. ஆனால், குழந்தை இல்லாத ராம் பிரசாத் தனது மகளை விலை பேசவில்லை.. அரை வயிற்றுக் கஞ்சிக்கும் வழியில்லாத தன் சவலைக் குழந்தைக்கு ஒரு நல்ல வாழ்க்கை அமைத்து தரவே கேட்கிறார் எனப் புரிந்ததும், சம்மதித்தார். 

              என்ன எழுதியிருக்கிறது என்றே தெரியாத ஸ்டாம்ப் பேப்பரில் இருவரும் கை நாட்டு வைத்து தங்கள் செல்ல மகள் ஹேமாவை தத்துக் கொடுத்தனர். இந்த விஷயத்தை எப்படியோ மோப்பம் பிடித்துவிட்ட ஒரு நிருபர், சமூக அவலம் ஒன்றைத் தோலுரித்துக் காட்டும் வேகத்தில் செய்தியாக வெளியிட, அதுதான் இன்று சபாநாயகர் உள்ளிட்ட அரசு இயந்திரங்களை ஷ்யாம்லாலின் வீட்டுக் கதவைத் தட்ட வைத்தது. 

            அடுத்தடுத்த அதிரடி நடவடிக்கையில் குழந்தையை ‘விலைக்கு’ வாங்கிய ராம் பிரசாத் 15 நாள் சிறைக்குப் போனார். காவல்துறை முன்னிலையில் குழந்தை ஹேமா ஷ்யாம் லால் தம்பதியிடமே ஒப்படைக்கப்பட்டது. ஒரு சமூக அவலத்துக்குத் தீர்வு கண்டுவிட்ட பெருமித உணர்வோடு கலைந்தார்கள் அரசு அதிகாரிகள்.

                 சில வருடங்கள் ஓடின. இதைப் பற்றிக் கேள்விப்பட்ட பத்திரிகையாளர் ஒருவர் குழந்தை ஹேமா இப்போது எப்படி இருக்கிறது என பார்த்துவர ஷ்யாம் லால் குடும்பத்தைத் தேடிச் சென்றார்.

          அங்கே ஹேமா இல்லை. அவள் இறந்து பல மாதங்கள் ஆகியிருந்தன. ஷ்யாம் லாலிடம் மீட்டு தரப்பட்ட சில மாதங்களிலேயே ஹேமா மஞ்சள் காமாலைக்கு பலியாகி இருந்தாள். ஊட்டச்சத்தில்லாத அந்த நோஞ்சான் குழந்தை நோய் எதிர்ப்பு சக்தி இன்றி மரணம் அடைந்திருக்கிறது. மகளின் இறப்பை நினைத்துக் கண்ணீர் விட்ட தாய் லலிதா இப்படிச் சொன்னார்.. 

           ‘‘என் மகள், ராம் பிரசாத்திடம் இருந்திருந்தால் இந்நேரம் உயிரோடு இருந்திருப்பாள். ஏனெனில், அவரால் அவளுக்கு உணவளிக்கவும் சிகிச்சையளிக்கவும் முடியும். நாங்களோ அவளுக்கு உணவளிக்கவே வழியற்று இருந்தோம். இப்போது சொல்லுங்கள்.. என் குழந்தையை விற்றது தவறா?’’

             இப்போது நீங்கள் சொல்லுங்கள். ஹேமாவைக் கொன்றது யார்? வளர்க்க முடியாத குழந்தையை, வாங்கிய கடனுக்காக தத்துக் கொடுத்த ஷ்யாம் லால் தம்பதியா? சமூக அவலத்தை (!) நாட்டிற்கே வெளிச்சம் போட்டுக் காட்டிய அந்த நிருபரின் பேனாவா? லஞ்சம் என்ற பெயரால் ஷ்யாம் லாலின் எதிர்காலத்தையே தின்று செரித்த மருத்துவத் துறையா? விற்கப்பட்ட குழந்தையை மீட்டெடுத்து சமூக நீதி காத்த அரசு இயந்திரமா?