அது மீசை கூட அரும்பாத பதின்ம வயது. படித்தது எட்டா, ஒன்பதா என்று ஞாபகமில்லை. ஊர் பள்ளி மைதானத்தில் விளையாட்டுப் போட்டி. நடத்துவதும் நான் உள்ளிட்ட விசிலடிச்சான் குஞ்சுகள்தான். வாளியில் பந்து போடுதல் (வாளிபால் ! ), சோடா பாட்டிலில் நீர் நிரப்புதல், (கயிற்றில் தொங்கும்) முருக்கை கவ்வுதல், (அரைஞாண் கயிற்றில் முதுகுக்குப் பின்னால் கட்டி விடப்பட்ட எதிராளியின்) பலூனை உடைத்தல் என ஊரே கூடி நிற்க மைக்செட்டும் வர்ணணையுமாய் கழிகிறது மாலை நேரம். இரவில் பரிசு வழங்க ஊர்த்தலைவரையும், அஞ்சாம் வகுப்பு வாத்தியாரையும் கூப்பிட வேண்டும். அவர்கள் வரும் வரை மேடை எங்களுக்கே. ஊருக்குள் நான்கைந்து வீட்டில் மட்டுமே கிடக்கும் அந்தக் காலத்து நீளமான பெஞ்சுகளை தேடிப் பிடித்து தூக்கி வந்து வரிசையாகப் போட்டால் மேடை ரெடி. ஆட்டம், பாட்டம், நாடகமென நாலு டியூப் லைட் வெளிச்சத்தில் நாங்கள் செய்யும் சின்னப் பிள்ளைத்தனங்களை ஊரே உட்கார்ந்து வேடிக்கை பார்த்து சிரிக்கும்.
அதில் ஒன்றுதான் மாறுவேடப் போட்டி. நான் ஆசை, ஆசையாய் காத்திருந்த போட்டி. பாடப்புத்தகத்தில் படித்தும், பார்த்தும் வியந்த யுவான் சுவாங்காய் நான் உருமாறும் போட்டி. எனக்கு ஒப்பனை போட இரண்டு அண்ணன்கள். நான் சொல்லச் சொல்ல சிரித்துக் கொண்டே குஷியாக வேஷம் கட்டுகிறார்கள். ஒரு நீளத்துண்டின் நடுவில் குறுக்காக சற்று தடிமனான குச்சியை வைத்து அதை ஒரு முடிச்சு போட்டாயிற்று. அதை அப்படியே தூக்கி நடு குச்சி பகுதி தலையில் நிற்குமாறு வைத்து துண்டின் இரு முனைகளையும் செத்தவருக்கு நாடிக்கட்டு கட்டுவது போல என் நாடியோடு சேர்த்து ஒரு கட்டு. உச்சி மண்டை குச்சியில் நான்கைந்து சணல் கயிறு தாறுமாறாய் தொங்க விடப்படுகிறது. பக்கத்து வீட்டு அக்காக்களின் பாசத்தில் பவுடர் டப்பாயும், கண்மையும் வாங்கி முகத்திற்கு நன்றாக வெள்ளை அடித்தாயிற்று. கண்மையால் சீனாக்காரர்களுக்கே உரிய தொங்கு மீசையும் நீள் புருவமும் கூட வரைந்தாயிற்று. இரண்டு மூன்று சட்டை போட்டு அதற்கு மேலாக முட்டி வரை தொங்கும் ஒரு தாத்தா சட்டை. அதற்கும் கீழே காலை மறைக்கும் கைலி. முதுகுப் பக்கம் தோள் முதல் கால் வரை தொங்கும் நீளமான ஒரு துண்டு ( அந்தக்கால ராஜா ஸ்டைலில் ) அவ்வளவுதான். நான் யுவான் சுவாங்காகி விட்டேன். மேடை ஏறும் போதே ஊர் சனமெல்லாம் சிரிக்க, கைதட்டலும் விசிலும் பறக்கிறது. மேடையில் ஒரு அண்ணன் மைக்கோடு கேள்விகளை ஆரம்பிக்கிறார்.
“சாரு யாரு?
”“யுவான் சுவாங்கு”
“எங்கேயிருந்து வர்றீரு?”
“சீனாவுல இருந்து..”
“உங்க பொண்டாட்டி வரலையா?”
“எனக்கு கல்யாணமே ஆகலை..”
“சீனாவுல இருந்து எதுக்கு வந்தீங்க?”
“வெளயாட்டுப் போட்டி பாக்கத்தான்..”
“தலையில என்ன குச்சி?”
"இது குச்சி இல்ல.. சீனாக் கொண்ட..”
இப்படியாக தொடர்கிறது உரையாடல்.கூட்டத்திற்குள் அங்கொன்றும் இங்கொன்றுமாக முணுமுணுப்பு.
“யாருத்தா அது?”
“பாயாசக்கார ஆச்சி பேரன்..”
“யாருப்பா அது?”
“புங்கமரத்தா மவன்..”
அன்று முதல் இன்று வரை யுவான் சுவாங் என் ஆதர்ச நாயகன். பின்னாளில் தேடித்தேடி படித்த போது, வாஸ்கோடகாமா, கொலம்பஸ் போல நாடு பிடிக்கும் வெறியில் பயணித்த பயணி அல்ல என அறிந்த போது யுவான் சுவாங் மீதான வியப்பும், ஈடுபாடும் கூடிப்போனதில் வியப்பில்லை. வாழ்நாளில் பதினேழு வருடத்தை பயணத்திலேயே கழித்தவன், இந்தியா எங்கும் சுற்றியலைந்து பெளத்த அறிவை தேடியதோடு நம் சமூக, பொருளாதார வாழ்க்கையை ஆவணங்களாக்கியவன், ஏறத்தாழ இருபதாயிரம் மைல்களுக்கும் மேலே கால்நடையாய் அலைந்தவன், வாழ்நாளெல்லாம் விதவிதமாய், வகைவகையாய் மனிதர்களையும், இடங்களையும் கண்டு உணர்ந்து அனுபவித்தவன். அப்படிப்பட்டவனைப் பற்றி படிக்கும் போதெல்லாம் சோற்றுக்கலையும் வழ்க்கை மீதான வெறுப்பும், அலைந்து திரியும் பயணத்திற்கான துடிப்பும் ஏற்படுவதை தவிர்க்க முடிவதில்லை.
இன்று வடலூர் சத்திய சாலையின் அன்னதான பந்தியின் வரிசையில் உட்காரவும், அகமதாபாத் சபர்மதி ஆசிரமத்தில் கடலை கொறித்தபடி கைக்கெட்டும் தொலைவில் சிநேகமாய் வந்தமரும் அணிலை புகைப்படத்திற்கு “போஸ்” கொடுக்கச் சொல்லவும், லக்னோவுக்கு அருகே பாஷை தெரியாத பரபாங்கி ரயில்வே ஸ்டேஷனில் சமோஷா, டீயை விழுங்கியபடி இரயிலுக்கு நான்கு மணி நேரம் காத்திருக்கவும், பிதார் சுல்தான் கோட்டையை அந்தி வான மஞ்சள் அழகில் கண்களால் பருகவும், தென்மலை மலை ரயிலின் மிக உயர்ந்த பாலத்திற்கும் (‘ஜெயம்’ படத்தில் வரும் பாலம்) உயரத்தில் குட்டி அருவியில் குளித்து கும்மாளமடிக்கவும், ஹைதராபாத் ராமோஜி ராவ் பில்ம் சிட்டியின் பிரம்மாண்டத்தில் லயிக்கவும் என்னால் முடிகிறதென்றால் அதற்கு காரணம் யுவான் சுவாங் மீதான இனம் புரியாத பாசமே.
மாறு வேடப் போட்டி முடிந்து பன்னிரெண்டு வருடத்திற்கும் மேலாகிறது. இன்றும் ஊருக்குப் போனால் ‘ என்னடா யுவான் சுவாங் எப்போ வந்த?’ என்றுதான் வரவேற்கிறார் டீக்கைடை கண்ணாடிக்காரர். ஊருக்கு எப்படி அவர் கண்ணாடிக்காரராகிப் போனாரோ அப்படித்தான் அவருக்கு நான் யுவான் சுவாங்காகிப் போனேன்.
2 comments:
yuwan swang ku therinja romba varuthapaduvaru . . .
surely this s the gud start da. all the best .yuvan shuwanguuuu ......அடைமொழிக்கு ஏத்த மாதிரி உன் பயணங்கள் அமையட்டும் .superp photo..................பற தேசி..............
கருத்துரையிடுக